"ஹலோ தலைவரே, நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி பெரும் சிக்கலில் சிக்கி இருக்கிறார்.''’
"ஆமாம்பா, தேசிய புலனாய்வு முகமை என்னும் என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையத்துக்குள் வரலட்சுமி வந்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவிற்குப் பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி. அதிரடி ஆக்ஷன் படங்களி லும் இவர் கெத்து காட்டி இருக்கிறார். இவரும் இவரது அம்மா சாயாவும்தான் தற்போது என்.ஐ. ஏ.வின் விசாரணை வளையத்திற்குள் வந்திருக் கிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. இது சரத்குமாரை பலத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக் கிறதாம். சர்வதேச அளவில் போதை மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுவந்த ஒரு நிழலுலக கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பு இருக்க லாமோ என்கிற சந்தேகத்தில்தான் இவர்களை கடந்த சில மாதங்களாகவே என்.ஐ.ஏ. கண்காணித்து வந்ததாம். இந்த நிலையில், விசாரணைக்கு வரு மாறு வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பிய தாக அதிர்ச்சித் தகவல் பரவியது. இதுதான் இப் போது கோடம்பாக்கத்திலும், அரசியல் வட்டாரத் திலும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.''”
"இவர்களுக்கு எப்படி இந்த சிக்கல் வந்தது?''”
"சில மாதங்களுக்கு முன்பு, கேரள கடற்கரை ஒன்றில் ஏகே.47 துப்பாக்கிகள், முப்பது கிலோ தங்கம் உள்ளிட்ட பொருட்களோடு 13 பேர் கொண்ட ஒரு கும்பலை கடற்படையினர் கைது செய்தனர். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சற்குணம் என்பவரும் இருந்தாராம்.. இவர்களை விசாரிக்கும்போது, இந்த நிழலுலகக் கும்பல் தங்கள் பணத்தை ஆதிலிங்கம் என்பவர் மூலம் திரைத்துறையிலும் முதலீடு செய்ததாம். இந்த ஆதிலிங்கம், நடிகை வரலட்சுமியிடமும் அவர் அம்மா சாயாவிடமும் மேனேஜராக இருந்தவர். அந்ந்த வகையில்தான் வரலட்சுமிக்கும் சாயாவுக் கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் வரலட்சுமி கைதாக லாமோ என்ற அச்சத்தில் இருக்கும் நடிகர் சரத்குமார், மகளுக்கு எந்த சிக்கலும் வராமல் இருக்கவேண்டும் என்று பா.ஜ.க. தரப்போடு பேசி வருகிறாராம். அதற்கு உதவும் பட்சத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட் டணிக்கு வரவும் சம்மதம் என்று சரத் தெரிவித் திருப்பதாகச் சொல்கிறார்கள். தற்போது சாயாவும், சிக்கலில் இருந்து விடுபட தனது பிராமண சமூகப் பிரமுகர்களிடம் உதவி கேட்டு வருகிறாராம். வரலட்சுமியோ, "ஆதிலிங்கம் இப்போது எங்க ளிடம் வேலை பார்க்கவில்லை. எனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகப் பரவும் செய்தியிலும் உண்மையில்லை' என்று தெரிவித்திருக்கிறார்.''”
"அண்ணாமலைக்கு, அமித்ஷா ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறாராமே?''’
"அப்படிதாங்க தலைவரே பா.ஜ.க.வின் சீனியர் தலைவர்கள் சொல்றாங்க. அதாவது, அண்மையில் எடப்பாடி, ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு, அண்ணாமலை பற்றிய ஒரு புகார் கடிதத்தை அனுப்பியிருந்தாராம். அதில், "என்னை உதாசீனம் செய்து மட்டமாக விமர்சித்துவரும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான அண்ணாமலை, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓ.பி.எஸ், டி.டிவி.தினகரன், சசிகலா, ஜான்பாண்டி யன், அர்ஜுன் சம்பத் போன்றோருடன் சேர்ந்து ஒரு தனி கூட்டணியை அமைக்கத் திட்டமிடுகிறார். இது நியாயமா?'’என்று தன் குமுறலை வெளிப் படுத்தியிருந்தாராம். இதைப் படித்த அமித்ஷா, அதை மோடியின் பார்வைக்கு அனுப்பியதோடு, மதுரையில் நிகழ்ச்சியொன்றில் இருந்த அண்ணா மலையை லைனில் அழைத்து, "என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை உன் இஷ்டம்போல் நடத்த நினைக்கிறாயா? எத்தனை முறை சொன்னாலும் எடப்பாடியோடு இன்னும் எதற்கு மல்லுக்கட்டுகிறாய். இதை இனியும் அனுமதிக்க முடியாது. இனிமேல் நீ எடப்பாடியை அனுசரித்துதான் போகவேண்டும். இது கட்சியின் உத்தரவு'’ என்ற ரீதியில் கடுமையான தொனியில் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டாராம். இதனால் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறாராம் அண்ணாமலை.''”
"சரிப்பா, கொடநாடு கொலை-கொள்ளை விவகாரம் இப்போது எடப்பாடியை ரொம்பவே பதட்டப்படுத்துவதாக அவர் தரப்பிலிருந்தே செய்தி கசியுதே?''”
"ஆமாங்க தலைவரே, அதுக்குக் காரணம், கொடநாடு தொடர்பான சில தகவல்கள் எடப்பாடியை மிரள வைத்திருக்கிறது என்றும், அதனால்தான் இந்த விவகாரத்தின் மையப்புள்ளியாக இருந்த கனகராஜை, ஜெ.வின் டிரைவரே இல்லை என்று அவர் உளறுகிறார் என்றும், அந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டது, அதை ஏன் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. விசாரித்துக் கிளறவேண்டும் என்றும் அவர் பதட்டப்படுவதாக அவர் தரப்பினரே சொல்கிறார் கள். இதேபோல், கொடநாடு விவகாரம் எடப்பாடி யைப் பதட்டத்தில் உளற வைப்பதாக முரசொலியும் ஹாட்டான தலையங்கம் ஒன்றையும் அண்மையில் எழுதியிருக்கிறது. அதில், டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், ’எடப்பாடி சொன்னதால்தான், தன் தம்பி கொடநாடு பங்களாவில் இருந்து கொள்ளையடித்த டாகு மெண்டுகளை ஐந்து பைகளில் கொண்டுவந்தான்’ என்று சொன்னது அழுத்தமாகச் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடியின் செக்யூரிட்டி அதிகாரியாக இருந்த மற்றொரு கனகராஜ் தொடர்பான வில்லங்க ஆடியோ ஒன்றும் விசாரணை டீம் கையில் கிடைத்திருப்ப தாக வந்த தகவல்தான், இப்போது எடப்பாடியை மேலும் பதட்டப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.''”
"எனக்கு அமைச்சர் பதவி கூட முக்கிய மில்லைன்னு உதயநிதி பரபரப்பைக் கிளப்பி யிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், தி.மு.க. இளைஞரணி யின் செயல்வீரர்கள் கூட் டத்தை ஒவ்வொரு மாவட் டத்திலும் நடத்திவரு கிறார் அமைச்சர் உதயநிதி. அந்த வகையில் கடலூர் மாவட்ட கழுதூரில் செயல்வீரர்கள் கூட்டம் 29ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு வந்த உதயநிதிக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பரிசுகளை உதயநிதிக்கு கொடுத்து அசத்த, ‘"தலைவர் தளபதி; புதிய விடியலின் பூபாளம்'’ என்கிற புத்தகத்தை, தி.மு.க. தலைமைக்கழகப் பேச்சாளரும் எழுத்தாளருமான கடலூர் வாஞ்சிநாதன் உதயநிதிக்கு வழங்கினார்.அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் ஸ்டாலினைப் பற்றிய அந்தப் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதில் பேசிய உதயநிதி, ”"நீட் தேர்வுக்கு எதிரான நமது போராட்டம் ஓயாது. எனக்கு அமைச்சர் பதவி முக்கியமில்லை. நம் மாணவர்களுக் காக நீட்டை ஒழிப்பதுதான் என் முதல் கடமை' என்று பஞ்ச் வைத்து, இளைஞரணியினரை வெகுவாய்க் கவர்ந்தார். நிதி கொடுக்க வந்த குழந்தைவேல், கல்யாணி தம்பதியினரை அருகே அழைத்து நலம் விசாரித்து அவர்களையும் உதயநிதி நெகிழவைத்தார்.''’
"தி.மு.க. ஆட்சி நடக்கும் நிலையிலும் அரசு விளம்பரங்களை வைத்து அ.தி.மு.க. பிரபலங்கள் அதிக லாபம் பார்த்ததாக சர்ச்சை கிளம்புதே?''”
"எடப்பாடி ஆட்சியின்போது கே.எஸ்.மார்ட் என்ற ஏஜென்சி மூலமாகவே அதிகபட்ச அரசு விளம் பரங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. இந்த நிறுவனம், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் அண்ணன் மகன் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹரிஹரனின் மகன் ஆகியோருக்குச் சொந்தமானது. அவர்கள் அப்போது அரசு விளம்பரத்தில் கொழுத்த லாபம் பார்த்தார்கள். இப்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தி.மு.க. அதிகாரத் தில் அமர்ந்திருக்கும் நிலையில், தி.மு.க. பிரமுகரான அண்ணா நகர் கார்த்தி, அந்த நிறுவனத்தில் பார்ட்ன ராக இணைந்துகொண்டார். அதனால் பெரும்பாலான சோசியல் மீடியாக்களுக் கான அரசு விளம்பரங் கள் இந்த நிறுவனத் துக்கே கொடுக்கப் பட்டது. இந்த நிறுவனம் நடத்திய ஊழல்கள் பற்றி ஏற்கெனவே நம் நக்கீரனில் விரி வான செய்தி வந்திருக்கிறது.''”
"இப்போது அந்த நிறுவனத்துக்குப் போட்டியாக மற்றொரு நிறுவனம் வரிந்து கட்டிக் களமிறங்கி லாபம் பார்க்குதே?''”
"ஆமாங்க தலைவரே, அந்த கே.எஸ். மார்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த அனிதா என்ற இளம்பெண், அங்கிருந்து விலகி தனியாக ஈவென்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் விளம்பர ஏஜென்சி ஒன்றை சமீபத்தில் தொடங்கி யிருக்கிறார். கே.எஸ். மார்ட்டில் இருந்தபோது கிடைத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட மேல்மட்டத் தொடர்பால், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற தைரியத்தில் தான், இந்த புதிய நிறுவனத்தையே அனிதா தொடங்கினாராம். அவரது நம்பிக்கை பொய்த்துப்போகவில்லை. இப்போது அனிதாவின் நிறுவனத்துக்கும் அரசு துறைகளின் விளம்பரங்கள் அதிகம் கொடுக் கப்படுகின்றன. இதனால் அவர் காட்டில் இப்போது அடைமழை பெய்கிறதாம். இந்த அனிதாவுக்காக ஒரு முக்கியமான துறை யின் ஐ.ஏ.எஸ். அதி காரியே களமிறங்கி காய் நகர்த்துகிறா ராம்.''”
"அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்புக்கு எதிராக வருமான வரித்துறையும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டத் தயாராகுதாமே?''”
"ஆமாங்க தலைவரே, செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடந்தது. அப்போது அமைச்சர் மற்றும் அவர் தம்பி அசோக் ஆகியோரின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறையின் அதிகாரிகளைத் தாக்கியதாகவும், பெண் அதிகாரி என்று கூட பார்க்காமல் அடாவடியில் இறங்கியதாகவும் அப்போதே காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைதுசெய்ய, அவர் தம்பி அசோக் தலைமைறைவாகி இருக்கிறார். இதெல்லாம் ஒருபுறமிருக்க, தங்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தும், தாக்கியும் அராஜகத்தில் இறங்கிய நபர்கள் மீது இதுவரை வழக்கு பதிவுசெய்யப்படவில்லை என்றும், அவர்களை கைது செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும், அதனால் அது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தை நாட இருக்கிறதாம் வருமானவரித் துறை. சி.பி.ஐ. விசாரணைக்கான உத்தரவு கிடைக்காவிட் டால் உச்சநீதிமன்றம் சென்றாவது அந்த உத்தரவைப் பெற வேண்டும் என்கிற முனைப்பிலும் அது இருக்கிறதாம்.''”
"தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போட்ட வழக்கில் மாஜி அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர், தன் மனைவி சகிதமாக ஆஜராகியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர், தற்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். கட்சியிலும் புதுக்கோட்டை வடக்கு மா.செ. பொறுப்பை வகித்துவருகிறார். இவர், அமைச்சராக இருந்த காலத்தில், தனது வருமானத்தைவிட ஏறத்தாழ 36 கோடி ரூபாய் அளவுக்கு அதிக சொத்து சேர்த்ததாக, இவர் மீதும் இவரது மனைவி ரம்யா உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ், கடந்த 2021 அக்டோபரில் வழக்கைப் பதிவுசெய்தது. அப்போதே அவர் தொடர்பான இடங்களில் ரெய்டை நடத்தி, 4.87 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளிப் பொருட்கள், 136 கனரக வாகனப் பதிவு ஆவணங்கள் என சகலத்தையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீது 216 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிக்கையையும் சொத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.''”
"ஆமாம்பா, இதெல்லாம் அப்படியே ஞாபகத்தில் இருக்கு!''”
"இந்த வழக்கின் முதல் விசாரணை ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியபோது விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் மனைவி ரம்யா மட்டும் ஆஜராகவில்லை. கடந்த 29ஆம் தேதி இருவரும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அன்று விஜயபாஸ்கர் தொண்டர்கள் புடைசூழ நீதி மன்றம் வர, அவர் மனைவி ரம்யா வழக்கறிஞர் கள் புடைசூழ வந்தார். அவரைப் படம் எடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டனர். நீதிபதியோ, வழக்கை செப்டம்பர் 26-க்கு ஒத்திவைத்தார். விஜயபாஸ்கரின் ஆதரவாளர் களோ, அண்ணனுக்கு இந்த வழக்கெல்லாம் ஜுஜுபி. ஒரே மூச்சில் ஊதித் தள்ளிவிடுவார். டெல்லியிலும் இங்கும் அவருக்கு இருக்கும் செல் வாக்கே வேறு. அவர் அமைச்சராக இல்லாவிட்டா லும் பவரோடு இருக்கிறார் என்று மார்தட்டிக் கொண்டார்கள். மத்திய -மாநில அரசுகளோடு விஜயபாஸ்கருக்கு பிணக்கு ஏற்பட்டால், அவர் நிலைமை கவிழ்ந்த கப்பலாகிவிடும் என்கிறது வழக்கறிஞர்கள் தரப்பு.''”
"தலைமைச் செயலகத்தை, இதற்காகவே கலைஞரால் கட்டப்பட்ட புதிய கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறதே?''”
"சென்னை தலைமைச் செயலகம் அமைந் திருக்கும் இடம் தமிழக அரசுக்குச் சொந்தமான தில்லை. அது ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமானது. இதன் காரணமாகவும், தலைமைச்செயலகம் விசாலமாகத் தேவை என்று கருதியும்தான் புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, முதல்வராக இருந்தபோது கலைஞர் மிகவும் நவீனமயமாக எழுப்பினார். ஆனால் அதற்குள் 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட, முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஜெயலலிதா, கலைஞரின் புதிய தலைமைச் செயலகத்தை அரசு மருத்துவ மனையாக மாற்றிவிட்டு, பழைய கட்டிடத்திலேயே தலைமைச் செயலகத்தை இயங்கவைத்தார். இப்போது தி.முக. ஆட்சியிலாவது புதிய தலைமைச் செயலகத்து நிர்வாகம் மாறவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அதிகாரிகள் மத்தியிலும் நிலவிவருகிறது.''
"இந்த எதிர்பார்ப்பை முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறது தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம். இப்போது அங்கே இயங்கிவரும் ஓமந்தூரார் மருத்துவமனையை கிண்டியில் இருக்கும் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று பலரும் ஆலோசனை கூறுகின்றனர்.''”
"நானும் என் கவனத்துக்கு வந்த ஒரு வில்லங்கத் தகவலை உன் மூலம் பகிர்ந்துக்கறேன். தமிழ்நாடு சிறுதொழில் கழகமான டான்சி நிறுவனத்தின் பொதுமேலாளரான ஜோதி, இதே நிறுவனத்தின் பர்ச்சேஸ் மேலாளராக இருக்கும் அருணோடு கைகோத்துக்கொண்டு, பல்வேறு வகையான முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக பலத்த புகார்கள் எழுந்தன. குறிப்பாக, சமீபத்தில் ப்ளைவுட் சப்ளையர் மற்றும் காண்ட்ராக்டர் களிடமிருந்து இந்த டீம் 15 லட்சம் ரூபாயை லஞ்சம் பெற்றதாகவும் சொல்லப்பட்டது. இதையறிந்து துறை அமைச்சர் தா.மோ.அன்பர சன், அந்த மேலாளர் அருணை சஸ்பெண்ட் செய்யுமாறு பொதுமேலாளர் ஜோதிக்கு உத்தர விட்டாராம். ஆனால் ஜோதியோ, அமைச்சரின் இந்த ஆர்டரை அலட்சியமாகக் கிடப்பில் போட்டுவிட்டாராம்.''”
தினமலர் செய்திக்கு முதல்வர் கண்டனம்!
ஆகஸ்ட் 31 வியாழனன்று வெளியான தினமலர் சேலம் பதிப்பில் தலைப்புச் செய்தியாக, " "காலை உணவு திட்டம் -மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு -ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது' என்று, தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை மிகவும் இழிவுபடுத்தி எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்து தமிழ்நாடெங்கும் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "உழைக்க ஓர் இனம் -உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் "எல்லார்க்கும் எல்லாம்' எனச் -சமூக நீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். "சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்துவிடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! -தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்'' என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
-கீரன்