தமிழகத்தில் புதிதாக மேலும் 22 மணல் குவாரிகளைத் திறக்க அனுமதி கேட்டு, சுற்றுச்சூழல் ஆணையத்திடம் நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது.
ஏற்கனவே அரசு 20-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை நடத்தி வருகிறது. ஆறுகளில் எடுக்கப்படும் மணலை தமிழகம் முழுவதும் பத்து இடங்களில் விற்பனைக் கிடங்குகள் வைத்து, மணல் விற்பனையும் செய்து வருகிறது. தற்போது இந்த குவாரிகள் மூலம் தினசரி பத்தாயிரம் லோடு வரை மணல் விற்பனை ஆவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், தினசரி 45 ஆயிரம் லோடு மணல் தேவை என்றும், அதற்காக ஒரு கோட்டத்திற்கு மூன்று முதல் ஐந்து குவாரிகள் வீதம் நாலு கோட்டங்களில் 22 குவாரிகளை புதிதாகத் திறக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தத் தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழக உழவர் முன்னணி வேல்முருகன் நம்மிடம் "கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவு மணல் தேவைப்படவில்லை. அதனால் ஆறுகள் ஆறுகளாகவே இருந்தன. தமிழகத்தின் தேவைக்கு மட்டுமே ஆறுகளில் மணலை எடுத்திருந்தால் தற்போது கட்டாந்தரையாக ஆறுகள் மாறி இருக்காது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கு மணலை விற்பனை செய்தனர். இதன் மூலம் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இல்லை. ஆனால் அரசியல்வாதிகளும் பண முதலைகளும் இடைத்தரகர்களும்தான் இதனால் பணம் சம்பாதித்துக் கொழுத்தனர். குவாரிகள் மூலம் மணலைக் கொள்ளையடித்ததால் வரலாறு காணாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டு ஏற்கனவே மக்கள் குடிக்க தண்ணீரின்றிப் போராட ஆரம்பித்தார்கள். விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் தமிழகம் தத்தளித்தது. இந்த நிலையில், யார் செய்த புண்ணியமோ, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓரளவு மழை பெய்து தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் உபரி மணல் குவாரிகளைத் திறக்க அரசு முயற்சி செய்வது, மறுபடியும் தண்ணீர்ப் பஞ்சத்தை வரவழைப்பதற்குச் சமம். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், ஆறுகளில் பூமிக்கு கீழே சுரங்கம் தோண்டித்தான் மணலைக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைந்து, தமிழகம் மிகப்பெரிய அபாயத்தைச் சந்திக்க நேரிடும். அதோடு, தோண்டப்படும் பள்ளங்கள் உயிர்ப்பலிகளையும் ஏற்படுத்தும். இதை எல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்''’என்றார் அழுத்தமாய்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் தாமரைக்குளம் இளவரசனோ, "நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் அந்தந்தப் பகுதிகளில் கிடைத்த மண், கற்கள், கனிமப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு தரமான வீடுகளைக் கட்டி வாழ்ந்தார்கள். அதைப் பின்பற்றி தற்போதும் வீடுகள் கட்டிடங் களைக் கட்டலாம். அதற்கு உதாரணமாக, அரியலூர் மாவட்டம் கீழ்காவட்டங் குறிச்சி விவசாய சங்கப் பிரமுகர் தங்க சண்முகசுந்த ரம், இயற்கையாகக் கிடைக் கும் பொருட்களின் மூலம் அருமையான மாடி வீட்டைக் கட்டியுள்ளார். இதற்கு மணல் பயன்படுத்தவில்லை. குறைந்த செலவில் தரமான வீட்டை அவர் கட்டி உள்ளார். இதை எல்லோரும் பின்பற்றவேண்டும். ஆனால் அதிகாரிகள் மணல் சுரண்டலுக்கே வழிவகுக்கிறார்கள். இந்த போக்கு மாற வேண்டும்''” என்றார்.
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் கலிவரதன் நம்மிடம் "எங்க மாவட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து உற்பத்தியாகி வரும் பெண்ணையாறும் இதன்மூலம் சாத்தனூர் அணையும் நிரம்பி, அதன் உபரி நீர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட மக்களை வாழவைக்கின்றன. இந்த ஆறுகள் மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிராமங்கள் கூட்டுக் குடிநீர், விவசாயம், ஆகியவற்றைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது எல்லிஸ் சத்திரம் அணைக்கட்டு ஏனாதிமங்கலம் அருகே கட்டப்பட்ட தடுப்பணை ஆகியவை உடைந்தன. இதனால் ஆற்றில் தண்ணீர் தேங்காமல் கடலில் சென்று வீணாகக் கலந்தது. அதனால் குடிதண்ணீருக்கும் விவ சாயத்திற்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது. சுற்றுச்சூழல் துறைக்கு மக்கள் கருத்தை அறிவிப்பதற்காக, சில நாட்களுக்கு முன்பு கண்துடைப்புக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஏனாதிமங்கலத்தில் நடத்தினார்கள். இதில் கலந்துகொண்ட பலரும் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணலுக்கு மாற்றாக எம் சாண்டை கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால் குடிதண்ணீருக்கு மாற்றாக ஏதாவது கண்டுபிடித்தோமா? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அதனால் இருக்கும் நிலத்தடி நீரைக் காப்பாற்றிக் கொள்ள, புதிய மணல் குவாரிகளைத் திறக்கக் கூடாது''’என்றார் அழுத்தம் திருத்தமாய்.
இயற்கை வழி வேளாண்மை விவசாயி முருகன்குடி முருகன் நம்மிடம், "தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கான்கிரீட் கட்டிடங்களின் எண்ணிக்கை அசுர வேகத் தில் வளர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.” என்றவர் “ தங் கள் தேவைக்கு அதிகமாக வீடுகளையும் வணிக வளாகங்களையும் கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள். எனவே புதிதாக கட்டிடம் கட்டுபவர்களுக்கு ஏற்கனவே வீடு இருந்தால், அனுமதி தரக்கூடாது. பலர் பல மாடிகள் வைத்து வீடு கட்டுவது தடுக்கப்பட வேண்டும்''’என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போகிறார்.
மொத்தத்தில் ஏற்கனவே நலிந்து போயிருக்கும் ஆறுகளை புதிய மணல் குவாரிகள் மூலம் சுரண்டுவது, நம் வாழ்வாதாரத்தையே அழிக்கும் என்கிறார்கள் எல்லோரும். அரசு என்ன செய்யப் போகிறது?