புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி, புதிய ஆட்சி அமையவுள்ள நேரத்தில் அமையப் போவது என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியா? பா.ஜ.க ஆட்சியா? எந்த அளவில் அது நீடிக்கும் எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பா.ஜ.க 6 என அக்கூட்டணி 16 இடங்களிலும், காங்கிரஸ் 2, தி.மு.க 6 என இக்கூட்டணி 8 இடங்களிலும், சுயேட்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளின்படி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப் போதுமான இடங்கள் உள்ளன. பா.ஜ.க ஆதரவளித்தால் ரங்கசாமி முதல்வராகிவிட முடியும். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பா.ஜ.க சம்மதிக்குமா என்பதுதான் தற்போதைய சந்தேகம்?

pondy

"காங்கிரஸ் இல்லா புதுச்சேரி' என்று வெளிப்படையான திட்டத்துடன் களமிறங்கி, கிரண்பேடியை துணைநிலை ஆளுநராக்கி, காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்து, தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க, “"பா.ஜ.க. தலைமையி லான ஆட்சி'’எனும் ரகசிய திட்டத்தையும் வைத்திருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தற்போது அதைச் செயல்படுத்த முனைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் ஐயப்படுகின்றனர்.

Advertisment

இதுகுறித்து புதுச்சேரி அரசியல் பார்வை யாளர்கள் நம்மிடம், "2016 தேர்தலில் நமச் சிவாயத்தை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ். ஆனால் நாராயணசாமி தனக்கு மேலிடத்திலுள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி முதல்வரானார். அப்போதிலிருந்தே நாராயண சாமிக்கும் நமச்சிவாயத்துக்கும் ஒத்துவரவில்லை. இன்னொரு பக்கம் கிரண்பேடியை வைத்து நாராயணசாமிக்கு குடைச்சல் கொடுத்துவந்தது மத்திய பா.ஜ.க அரசு. 2021-லாவது முதலமைச்ச ராக்கப்படுவோம்’ என்று நமச்சிவாயம் எதிர்பார்த்த நிலையில் அவரிடமிருந்த கட்சித் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் வேட்பாளராக நாராயணசாமியே முன் நிறுத் தப்படுவார் என்ற மேலிடத்தின் உறுதியான நிலைப்பாட்டையடுத்து பா.ஜ.க. பக்கம் தாவினார் நமச்சிவாயம்.

oபா.ஜ.க.வும் நமச்சிவாயத்தை முதலமைச்ச ராக்குவதாக வாக்குறுதி அளித்தது. ‘ஆனால் தனித்துப் போட்டியிட்டால் 5 தொகுதிகளைக்கூட பிடிக்க முடியாது, என்.ஆர். உடன் கூட்டணி வைத்தால் பெரும்பாலான தொகுதிகளைக் கைப் பற்றலாம் என்பதை உணர்ந்து ரங்கசாமியை நிர்ப்பந்தப்படுத்தி கூட்டணியில் இணைத்தனர். பெரும்பான்மையாக 16 தொகுதிகளைப் பெற்ற ரங்கசாமி, "தான்தான் முதலமைச்சர்'’என ‘தாமரை இலைத் தண்ணீர்’போல பா.ஜ.க.வுடன் ஒட்டாமல் தமது கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்தார். அதேபோலவே கூட்டணியை நம்பாமல் பா.ஜ.க. போட்டியிட்ட 9 தொகுதிகளையும் எப்படியாவது வெற்றிபெற்றே தீர வேண்டும் என்று பணத்தை வாரி யிறைத்தும், மத்திய அமைச்சர்கள், மேலிடத் தலைவர் களை வரவழைத்தும் பா.ஜ.க. தனியாக தேர்தல் பணிகளைச் செய்தது. மேலும் சுயேட்சையாக சிலருக்கும் தேர்தல் செலவுக்கு பணத்தை கொடுத்து, "வெற்றி பெற்றால் நாங்கள் சொல்கிறபடி கேட்க வேண்டும்' என்று கூறினர். இவர்களுக்கிடையே 4 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்த அ.தி.மு.க. 5 தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு கூட்டணிக் கட்சியினர் பிரச்சாரத்துக்கு வராதநிலையில், அவரவர் தொகுதிகளைப் பார்த்துக்கொண்டனர். ஒன்றில்கூட அவர்களால் வெற்றிபெற இயலவில்லை.

தற்போது 6 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ள நிலையில்... தங்கள் தரப்பிலேயே முதலைமைச்சரை நியமிக்கலாம் என அக்கட்சி கருதுகிறது. அதற்காக ரங்கசாமிக்கு ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி என்று தூண்டில் வீசிப் பார்த்தது. அதில் ரங்கசாமி ஆர்வம் காட்டாத நிலையில், "ஒன்று என்.ஆர்.காங்கிரஸை பா.ஜ.க.வுடன் இணைக்க வேண்டும் அல்லது பா.ஜ.க. அறிவிக்கும் முதலமைச்சரை ஆதரிக்கவேண்டும். முதல் நிபந்தனைக்குச் சம்மதித்தால் முதலமைச்சர், இரண்டாவது என்றால் துணை முதலமைச்சர், இதுவும் இல்லையென்றால் முதல் இரண்டரை ஆண்டு பா.ஜ.க, அடுத்த இரண்டரையாண்டு என்.ஆர்.' என ஒரு யோசனையை முன்வைத்தது. ஆனால் ரங்கசாமியோ, தான்தான் முதலமைச்சர் என்பதில் உறுதியாக நின்றார்.

Advertisment

அதற்காக கட்சியை இணைப்பதைவிட காங்கிரஸ் - தி.மு.க.வை நாடுவது பரவாயில்லை என நினைக்கிறார். பா.ஜ.க வரக்கூடாது என நினைக்கும் காங்கிரஸும், தி.மு.க.வும் இதற்கு உடன்படக்கூடும். ஆனால் பா.ஜ.க சும்மா இருக்குமா? "தங்களுக்குத் தெரியாமல் ரங்கசாமி சுயேட்சைகளுடன்கூட ‘டீலிங்’ பேசக்கூடாது, எல்லா ‘மூவ்வும் தங்களை ஆலோசித்த பின்னரே நடக்கவேண்டும், இல்லையென்றால் தி.மு.க.வில் 3 எம்.எல்.ஏ.க்களை இழுத்து, சுயேட்சைகளை ‘வளைத்து, தேவைப்படுமாயின் என்.ஆர். காங்கிரஸில் 3 பேரை ராஜினாமா செய்ய வைத்து, ஆட்சியமைக்க தயாராகக்கூடும்' என்கின்றனர்.

pondy

அதேசமயம், “"கூட்டணி தர்மத்துக்குப் புறம்பாக பா.ஜ.க. செயல்படாது. பெரும் பான்மை அடிப்படையில் ரங்கசாமி முதல்வராக ஒத்துழைப்பு அளிப்போம். துணை முதல்வர் (நமச்சிவாயம்), துணை சபாநாயகர் பதவிகளை பா.ஜ.க.வுக்கு அளிக்கவேண்டும். 2 பேருக்கு அமைச்சர் பதவி, மேலும் வாரியம் மற்றும் சில பதவிகள் என பகிர்ந்துகொள் வோம். என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி புதுச்சேரி மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவோம்'’என வலியுறுத்தினர் பா.ஜ.க. தலைவர்கள்.

ரங்கசாமியோ தனது கட்சியிலுள்ள தேனீ ஜெயக்குமார், ராஜவேலு, திருமுருகன் ஆகியோருடன் கூட்டணிக்கு 2 மந்திரிகள் என ஆட்சிக் கட்டிலில் அமர வியூகம் அமைத்தார். கூட்டணி தர்மத்தை பா.ஜ.க. எந்தளவுக்கு மதிக் கிறது என்பதைப் பொறுத்தே ரங்கசாமியின் ஐந்தாண்டுக் கனவு சிக்கலில்லாமல் நிறைவேறும்.

பீகார் போன்ற மாநிலங்களிலேயே, நாளடைவில் பா.ஜ.க.வை தனிப்பெரும் கட்சியாக வளர்த்தெடுத்து, கூட்டணி சேர்ந்த கட்சிகளை பலவீனமாக்கும் யுக்தியைக் கடைப்பிடிக்கும் கட்சி அது. புதுச்சேரி போன்ற சிறிய மாநிலத்தில் இவர்களை நம்பிச்சென்றால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வளைத்ததுபோல தனது கட்சி எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜ.க. வளைக்கலாமென்ற தயக்கமும் ரங்கசாமியைப் பிடித்தாட்டுகிறது.

"தி.மு.க., காங்கிரஸை நம்பிச்சென்றால், ஐந்தாண்டு காங்கிரஸுக்கு கிடைத்த அதே குடைச்சல்தான் தங்களுக்கும் கிடைக்கும்' என இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார் ரங்கசாமி.

என்றாலும் பா.ஜ.க.வின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு முதல்வராவது என்றும் மற்ற பிரச்சனைகளை அவ்வப்போதைய நிலைமைக் கேற்ப சமாளிப்பதெனவும் முடிவெடுத்து, ஆளுநரைச் சந்திக்க ஆயத்தமானார் ரங்கசாமி.

இந்த ஐந்து வருடத்திலும் புதுச்சேரியில் வேடிக்கைக்குப் பஞ்சமிருக்காதுபோல் தெரிகிறது.