நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி) கடலூர் மாவட்டத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே பெருமை தரக்கூடியது. என்.எல்.சி பொது மருத்துவ மனையிலுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களின் நலனில் அக்கறையில்லாமல் இதன் நிர்வாகம் நடந்து கொள்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
என்.எல்.சி பொது மருத்துவமனை என்பது, என்.எல்.சியில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடும்பத்துக்காக மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களின் நலனிற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த பொது மருத்துவமனை, கடந்த வருடத்திலிருந்து தமிழ் நாடு அரசிடம் அனுமதி பெற்று, கொரோனா சிகிச்சை மையமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனா சிகிச்சைக்காக, 171 சாதாரணப் படுக்கைகள், 86 ஆக்ஸிஜன் படுக்கைகள், 20 ஐ.சி.யூ. படுக்கைகள் என மொத்தம் 277 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை செயல்படுகிறது. இங்கே 28 முதுநிலை மருத்துவர்கள் உட்பட 67 மருத்துவர்கள், 73 செவிலியர்கள், மூன்று ஷிஃப்ட்களில் 16 கொரோனா வார்டுகளில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஒரு வாரம் பணி, மறு வாரம் குவாரண்டைன் விடுமுறை என ஒவ்வொருவார இடைவெளியில் பணி வழங்கப்படுகிறது. அதனால், அவர்கள் மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தையும் பாதுகாப்பான சூழலில் வைத்திருக்க முடியும். மேலும் அடுத்த வாரப் பணிக்கு புத்துணர்ச்சியுடன் தயாராக முடியும். ஆனால் என்.எல்.சி பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணியாற்றவேண்டியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து மருத்துவர்கள் கடந்த 02-ஆம் தேதி புகார்கள் அனுப்பியும் என்.எல்.சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
செவிலியர்கள் தரப்பில் நம்மிடம் பேசிய செவிலியர் ஒருவர், "என்.எல்.சி பொது மருத்துவ மனையில், மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு குவாரண்டைன் விடுமுறை இல்லாமல் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் கொரோனா வார்டில் பணியமர்த்தப்படுகிறார்கள். இதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துகொண்டு வருகிறது. ஓரிருவர் கொரோனா பாதிப்புக்கும் ஆளாகி யுள்ளனர். பணியாற்றுபவர்களின் உடல்நிலை மோசமடைவது மட்டுமின்றி, இவர்களை சார்ந்த குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை மருத்து வர்களில் 10 பேரும், செவிலியர்களில் 26 பேரும், செவிலியர்களின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு மருத்துவருடைய கணவர், ஒரு செவிலியரின் தந்தை மற்றும் துணை செவிலியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே கடும் மன அழுத்தத்திற்கு இடையே, மக்களின் உயிரைக் காப்பாற்றவேண்டிய சூழலால் தொடர்ந்து பணிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பல குடும்பங்களில், ‘வேலை முக்கியமா? உயிர் முக்கியமா?…பேசாமல், வேலையை விட்டு விடு’ என்கிறார்கள். பல ஆண்டுகளாக பல உயிர்களைக் காப்பாற்றிவரும் எங்களுக்கு இப்பணியிலிருந்து விலக மனமில்லை. இதனால் வீட்டிலும் நிறைய பிரச்சினை. எங்களில் சிலர், சில வருடங்களில் ஓய்வுபெறப்போகும் வயதிலும் பணியாற்றுகிறார்கள். தொடர்ச்சியாக ஓய்வின்றி கொரோனா வார்டில் பணியாற்று வதால் உடல்நல பாதிப்புக்குள் ளாகியுள்ளனர். இப்படியே தொடர்ந்தால் ஓய்வுபெறும் வயதுவரை பணியில் இருப்போமா என்ற கவலை ஏற்படுகிறது.
பெரும்பாலான நாட்களில், இரண்டு வார்டுகளில் ஒரு செவிலியரும், நான்கு வார்டுகளில் ஒரு மருத்துவரும் வேலைக்கு அமர்த்தப்படு கிறார்கள். இதனால் அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவம் செய்வதிலும் தொய்வு ஏற்படுகிறது. இப்படி பல வகைகளிலும் மன அழுத்தத்துடன் வேலை பார்க்கிறோம். எனவே குவாரண்டைன் விடுமுறை, கொரோனா பணியின்போது தனியாக தங்கும் இட வசதி, அப்படி தங்கும்போது உணவு வசதி போன்றவற்றை உடனடியாக செய்து தர வேண்டும். மாநில அரசு மருத்துவமனையில் இவற்றைச் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே இந்த முறையைப் பின்பற்றுவதில்லை. குவாரண்டைன் விடுமுறை என்பது, எங்களது உடல்நலத்தை கொரோனாவின் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொண்டு, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதற்குக் கொடுக்கும் இடை வெளியாகும். இதைத்தான் நாங்கள் நிர்வாகத்திடம் கேட்கிறோம். எத்தனையோ முறை இதுகுறித்து முறையிட்டும் தீர்வு கிடைக்காமல் மன வேதனையடைகிறோம்''’என்றார்.
இதுகுறித்து என்.எல்.சி மருத்துவமனை கண்காணிப்பாளர் சாந்தலட்சுமியிடம் விளக்கம் கேட்டோம். "மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, மருத்துவர், செவிலியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படு கிறது. புதிதாக மருத்துவர், செவிலியர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். குவாரண்டைன் கொடுப்பது குறித்து சாத்தியமானவை செய்து கொடுக்கப்படுகிறது. நடைமுறையில் சில சிக்கல்களும் உள்ளது'' என்றார். ஆண்டுக்கு பல கோடி லாபம் ஈட்டும் நிறுவனம், பல்வேறு மாநிலங்களில் கோடிகோடியாக செலவிடும் நிறுவனம், தமது நிர்வாகத்தில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து, அவர்களுக்கு உரிய முறை யில் குவாரண்டைன் விடுப்பு கொடுத்து, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலி யர்கள் நலனில் அக்கறை காட்டாமல் அலட் சியமாக இருப்பது ஏனோ?