தென்காசி மாவட்டத்தில், தென்மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சிவசைலம், மற்றும் பெத்தான்பிள்ளை குடியிருப்பு உள்ளிட்ட விவசாய கிராமப்பகுதியில், நவம்பர் 6ஆம் தேதியன்று, கருத்தலிங்கபுரத்தைச் சேர்ந்த மசாலா வியாபாரி வைகுண்டமணி, சிவசைலத்திலிருந்து பெத்தான்பிள்ளை கிராமத் திற்கு சரக்குடன் தனது பைக்கில் போயிருக் கிறார். அப்போது சாலையில் குறுக்கிட்ட கரடி ஒன்று, அவரைத் தாக்கி, கடித்துக் குதறியிருக்கிறது. அவரைக் காப்பாற்ற வந்த நாகேந்திரன், சைலப்பன் ஆகியோரையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. இன்னும் சிலர் சிறு காயங்களுடன் தப்பியிருக்கின்றனர். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர், மூவரையும் மீட்டு நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
இக்கொடூர சம்பவத்தால் உயிருக்கே உத்தரவாதமில்லாததால், கடையம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வேண்டுமென்றும், மறைந்திருக்கும் கரடியைப் பிடிக்க வேண்டுமென்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சூழலில், வனத்துறையினரின் தேடுதல் வேட்டையில் கரடி கண்டறியப்பட்டதும், நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன், கால்நடை ஆய்வாளர் அர்னால்ட் ஆகியோர், கரடிக்கு மயக்கஊசி செலுத்தியதும் வனத்துறையினர் வலைவீசிப் பிடித்தனர். அக்கரடியை, அடர் வனப்பகுதியான செங்கல்தேரியில் விட, மர்மமான வகையில் கரடி இறந்திருக்கிறது. அதோடு, அக்கரடியால் தாக்கப்பட்ட வர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, பெத்தான்பிள்ளை கிராம மக்கள் பீதியில் உறைந்தனர்.
இந்தச் சூழலில், கால்நடை மருத்துவர் மனோகரன், கரடியைப் பிரேதப் பரிசோதனை செய்ததில், வெறிநோய் தாக்குதல் காரணமாக கரடியின் மூக்கு மற்றும் நுரையீரல் பகுதிகளில் ரத்தக்காயங்கள் உள்ளன. குடல் பகுதியிலும் ரத்தம் காணப்பட்டது. ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி பாதிப்பு காரண மாகவே கரடி வெறித்தனமாகக் தாக்கியிருக்கிறது என்று கண்டறிந் தார்.
அந்த அறிக்கைக்குப்பின், முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பை கோட்ட துணை இயக்கு னரான செண்பகப்பிரியாவைத் தொடர்புகொண்டு கேட்டதில், அவரும் அச்செய்தியை உறுதிப் படுத்தினார். இந்தத் தகவல் மருத்துவமனையில் சிகிச்சையிலிருப்பவர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டு, அவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் கூறுகையில், "இறந்த கரடிக்கு ரேபிஸ் நோய் இருந்ததால், அந்த கரடி கடித்த விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும்கூட ரேபிஸ் தாக்கியிருக்கும். கரடியின் விரல் நகங்கள் பட்டு காயம் ஏற்பட் டாலும் பரவும். இந்த நோயின் அறிகுறிகள் உடனடியாகத் தெரி யாது. 3 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகு தான் நோயின் தீவிரம் தெரியும். அதனால் உடனடியாக 4 முறை தடுப்பூசிகள் போட வேண்டும். ரேபிஸ் தாக்கப்பட்டு இறந்த அந்தக் கரடி, இறப்பதற்கு சில நாட்கள் முன்புவரை உணவருந்த முடியாமல் இருந்துள்ளது'' என்றார்.
ரேபிஸ் தாக்குதலின் தீவிரத்தை அறிந்த நாம், கரடியால் தாக்கப்பட்ட பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், கரடியைப் பிடிக்கப் போராடிய வனத்துறையினருக்கும், ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தையும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியாவிடம் தெரிவித்து, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கூறினோம். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட அவர், தடுப்பூசிக்கான மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தார்.
நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வால் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்காக பெத்தான் பிள்ளை குடியிருப்பைச் சேர்ந்த மணி மற்றும் செல்லப்பா உள்ளிட்ட விவசாயிகளைச் சந்தித்தோம். "சம்சா வியாபாரிய கரடி கடிச்சிடுச்சின்னு சொன்ன உடனேயே நாங்க 15 பேரு திரண்டு ஓடுனோம். அங்க ஆக்ரோசமா இருந்த கரடி, எங்களயும் கடிக்க வெரட்டுச்சி. பயந்துபோயி நாங்க ஓடியாந்திட்டோம். வனத்துறைக்காரங்களுக்கு தகவல் குடுத்தப்ப ஒடனே அவங்கள சிகிச்சைக்கு அனுப்பி வைச்சாங்க. முன்ன எல்லாம் விவசாயக் காட்டுக்குள்ள கரடிங்க, வனவிலங்குக வந்து பயிர்கள சேதப்படுத்துறப்ப கம்பால வெரட்டுனா போயிடும். ஆனா இந்த கரடி, ஆக்ரோஷமாயிருந்துச்சு. எங்களுக்குப் பயம். சாயந்தரம் ஏழுமணி வரை கரடியத் தேடுனாங்க. ஒரு பெண்ண கரடி வெரட்டுன சத்தம் கேட்டுத்தான் ஊசி போட்டுப் புடுச்சாங்க. நாங்களும் தடுப்பூசி போட்டுக் கிட்டோம்யா'' என்றனர் மிரண்ட பார்வை யோடு.
அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா, "நீங்க அலர்ட் பண்ண உடனேயே தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனரிடம் பேசினேன். உடனே அவரும், மருத்துவர் பழனிகுமார் தலைமையிலான சுகாதாரக் குழுவினர், அனைத்து மருத்துவ வசதிகளுடன் வந்து ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்தினர். தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ஊருக்குள்ள ஒலிபெருக்கி மூலம் தகவல் கொடுத்தோம். வனத்துறையினர், பெத்தான் பிள்ளை குடியிருப்பு மக்கள் பலரும் வந்து தடுப்பூசி போட்டுக்கிட்டாங்க'' என்றார் திருப்தியான குரலில்.
பாமர பொதுமக்களுக்கான பிரச் சனைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுக்கும் நக்கீரன், உரிய நேரத்தில் எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்ததால், ரேபிஸ் ஆபத்து எனும் பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்ட மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம்.
_________________
வட மாநிலத்தவர் ஊடுருவலுக்கு வேல்முருகன் எதிர்ப்பு!
தமிழ் நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும், தமிழர் களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கையுடன் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமை, கோயம்பேடு சிம்சன் ஹோட்டலில், கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கலந்து கொண்டிருந்தார்.
கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்கள் சந்திப்பில், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வேல்முருகன் விவரித்தார். தமிழ்நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி, வரும் 26ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழக மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் ரவியை திரும்பப்பெற வேண்டும். தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் வட மாநிலத்தவர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவர் களுக்கு அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே வர வேண்டும். வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். வட மாநிலத்தவருக்கு தமிழ்நாட்டில் குடும்ப அட்டை, வாக்குரிமை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பன போன்று தமிழர் நலன் சார்ந்தும், வட மாநிலத்தவர்களின் ஆதிக்கத் தை எதிர்த்துமே பெரும்பாலான தீர்மானங்கள் இடம்பெற்றிருந்தன.
-அரவிந்த்
படங்கள்: ஸ்டாலின்