நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்து லெட்சுமி ரெட்டி பிறந்த புதுக் கோட்டையில் ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற பல வருட கோரிக்கையை ஏற்று 2010ல் முன்னாள் முதல்வர் கலைஞர் மருத்துவக் கல்லூரிக் கான அறிவிப்பை வெளியிட்டு அடிக்கல் நாட்டினார்.
பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டணியிலிருந்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற சி.பி.ஐ. தோழர் முத்துக்குமரன் மீண்டும் இந்த கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பிய நிலையில் அப்போதைய அ.தி.மு.க. முதல்வர் ஜெ. நிதி ஒதுக்க, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்காணிப்பில் 2017-ல் கட்டு மானப் பணிகள் முடிந்து, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி திறந்துவைத்தார். இப்படி இந்த மருத்துவக் கல்லூரி அமைய 3 முதல்வர்கள் பங்கெடுத் துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி திறந்த ஒரு வருடத்தில் 500 கே.எல்.டி. அளவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை சுத்தமாக்கி மருந்துவக் கல்லூரி வளாகத்தில் பசுமையாக்க மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், மருத்துவமனை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் 2018-ல் கஜா புயலில் சிதைந்துபோனது. பிறகு மருத்துவமனை கழிவுகள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பள்ளங்களை நிறைத்து நோய் பரப்பும் குளமானது. மழைநீர் செல்லும் வாரிகளில் ஓடி அருகிலுள்ள முள்ளூர், ராஜாப்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் உள்ள குளங்களில் கலந்து நிலத்தடி நீரில் இறங்கி குடிநீர் பாதிப்பு, பொதுமக்களுக்கு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் கல்லூரி முதல்வர் மீது வழக்கு தொடுத்தது. மேலும், சுற்றுச்சூழல் சான்றும் வழங்காததால் மருத்துவமனை பெரும் பாதிப்பைச் சந்தித்தது. கல்லூரி முதல்வர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.
மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, உடனே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தப்பட்டு வந்த நிலை யில், சுமார் 7 வருடங்களாக இந்த கோரிக்கை கிடப்பில் போடப் பட்டது. இதுகுறித்து 2025 மார்ச் 12-14 நக்கீரன் இதழிலும், மார்ச் 13-ஆம் தேதி "நீதிமன்றத்தில் ஆஜராகும் முதல்வர்! சர்ச்சையில் சிக்கிய மெடிக்கல் கல்லூரி! புதுக்கோட்டையில் நடந்த அவலம்!'’என்ற தலைப்பில் நக்கீரன் இணையத்திலும் வீடியோ செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில் அதிகாரிகளும் அப்பகுதி பொதுமக்களும், மருத்துவக் கழிவு நீர் வெளியேறி கிராம மக்களும் பாதிக்கப் படுவதாகக் கூறியிருந்தனர். இதை முதலமைச் சர் கவனத்திற்கு கொண்டுபோய் விரைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கூறினார். ரூ.3.62 கோடிக்கு திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பி இருப்பதாக பொதுப்பணித்துறை (கட்டுமானம்) கூறியது. சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பு வரும் என்று கிராம மக்களும் மருத் துவக்கல்லூரி நிர்வாகமும் எதிர்பார்த்த னர்.
7 ஆண்டுகளாக அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த மாதம் சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக நக்கீரன் செய்தி வெளியிடப்பட்டது. அந்த விரிவான செய்தியின் தாக்கம் காரணமாக, சட்ட மன்றத்தில் அறிவிக்கவில்லை என்றாலும் அதற்கான கோப்புகள் மீண்டும் தூசிதட்டி எடுக்கப்பட்டு மீள்பார்வை செய்யப் பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1000 கே.எல்.டி. திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.3.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக் கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மருத்துவக்கல்லூரி வளாகத் தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “"விரைவில் பணிகள் தொடங்கி 6 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்''’என்றார்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சுற்றுவட்டார கிராம மக்களின் கோரிக்கை நக்கீரன் செய்தி மூலமாக நிறை வேறியிருப்பதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும் என்பதுபோல, சுத்திகரிப்பு நிலையத்துக்காகக் குரல்கொடுத்த மக்கள், அதனை நீண்டகால போராட்டத் துக்குப் பின் பெற்றுள்ளனர். இதையடுத்து இந்த அரசாணையை வைத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கல்லூரி முதல்வர் மீது தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற முடிவுசெய்துள்ளது.