திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியிலுள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரபல கந்துவட்டிக்காரரான விஸ்வநாதனிடம், பூவாளூர் சரவணன், மேலவாளாடி அருண் போஸ், அகிலாண்டேஸ்வரி நகர் விஜி, பரமசிவபுரம் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கடன் வாங்கி, அதைவிட 100 மடங்கு விலையுள்ள சொத்துக்களைப் பறிகொடுத்துத் தவிப்பது குறித்து, லால்குடி டி.எஸ்.பி. வரை புகாரளித்தும் நடவடிக்கையில்லை. அங்குள்ள டி.எஸ்.பி. அலுவலகமே கந்துவட்டிக்காரரான விஸ்வநாதனுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கிவருவதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று மத்திய மண்டல காவல்துறை தலைவருக்கும் புகார்களை அனுப்பியிருந்தனர். மேலும் பலர் ஆன்லைன் மூலமாகவும் புகார்களை அனுப்பியிருந்தார்கள்.

ff

இதுகுறித்து, நமது நக்கீரனில், 'கந்து வட்டிக்காரரின் பிடியில் டி.எஸ்.பி. அலுவலகம்' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியின் எதிரொலியாக, மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாரின் தனிப்படையானது ஏ.டி.எஸ்.பி. தலைமையில், ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 11 மணியளவில் விஸ்வநாதனின் வீட்டைச் சோதனையிட நுழைந்தனர். காலையிலிருந்து இரவு வரை தொடர்ந்த சோதனையில், சுமார் 75 நபர்களின், 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துப்பத்திரங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப் பத்திரங்கள் அனைத்தும், விஸ்வநாதனிடம் வட்டிக்கு பணம் வாங்கியவர்களுக்குச் சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விஸ்வநாதனின் உதவியாளரிடமும், விஸ்வநாதனின் இரண்டு மகன்களிடமும் விசாரணை நடத்திய அதிகாரிகள், விஸ்வநாதன் மற்றும் அவரது 2 மகன்கள், உதவியாளர் என நால்வரையும் கைதுசெய்தனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் விஸ்வநாதன் வீட்டில் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. லால்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலானவர்கள் விஸ்வநாதனிடம் கடன் வாங்கி, தங்கள் சொத்துக்களை இழந்துள்ளதால் இந்த சோதனை அவர்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தந்துள்ளது. ஐ.ஜி.யிடம் கொடுத்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சியையும், தங்களுடைய சொத்துக்கள் திரும்பக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினர். நக்கீரன் செய்தி வெளியிட்ட உடனேயே துரித நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு ஒரு ராயல் சல்யூட்!

Advertisment