நக்கீரனால் வெளிச்சத்துக்கு வந்த புதுக்கூரைப்பேட்டை முருகேசன்- கண்ணகி ஆணவக் கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து, குற்றவாளிகளுக்கான தண்டனையை உறுதிசெய்துள்ளது உச்சநீதிமன்றம்.
புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் முருகேசன். அதே ஊரைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் துரைசாமியின் மகள் கண்ணகி. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குள் காதல் மலர, 2003-ஆம் ஆண்டு கடலூர் சார்பதிவாளர் அலுவல கத்தில் குடும்பத்துக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த திருமண விவகாரம் ஊருக்குத் தெரியவந்த நிலையில், முருகேசன் -கண்ணகி யை அழைத்துச்சென்று தனது மூங்கில்துறைப் பட்டி உறவினர் வீட்டில் மறைத்துவைத்து விட்டார். ஊர்க்காரர்களுக்குப் பயந்து அவரும் திருப்பூரில் தலைமறைவாகிவிட்டார். எனினும் துரைசாமியின் உறவினர்கள் முருகேசனின் பெற்றோரை அடித்து மிரட்டி முருகேசனின் இடத்தை அறிந்து அவரைத் தூக்கிவந்தனர்.
கண்ணகியின் இருப்பிடத்தைக் கேட்டு அவர்கள் சித்ரவதை செய்த நிலையில், ஆரம்பத்தில் சொல்லமறுத்த முருகேசன், பின்னர் துரைசாமி குடும்பத்தினர் முருகேசனின் காலைக் கட்டி கிணற்றில் தலைகீழாக இறக்கிய நிலையில் சித்ரவதை தாளமுடியாமல் கண்ணகியின் இருப்பிடத்தை வெளிப்படுத்தினார்
இருவரையும் முந்திரிக்காட்டுக்குக் கொண்டுவந்த நிலையில், இனிமேல் ஊரில் யாரும் சாதி தாண்டி திருமணம் செய்யக்கூடாதென்ற பயம் வரவேண்டுமென்ற எண்ணத்தில், கண்ணகியின் சமூகத்தினர் இருவரையும் ஆணவக் கொலை செய்ய முடிவு செய்தனர்.
இருவரின் கையிலும் விஷக் கிண்ணத்தைத் தந்து குடிக்க வலியுறுத்திய நிலையில், மனம் வெறுத்த கண்ணகி விஷத்தைக் குடித்துவிட்டார். முருகேசன் விஷம் குடிக்க மறுத்த நிலையில் முருகேசனைப் படுக்கவைத்து பிடித்துக்கொண்டு அவரது காதிலும் பின் மூக்கிலும் விஷத்தை ஊற்றிக் கொலை செய்திருக்கின்றனர். பின் சடலங் களையும் எரித்திருக்கின்றனர். பின் ஊருக்குப் பயந்து காதலர்கள் தற்கொலை செய்ததாக விஷயத்தை முடிக்கப் பார்த்திருக்கின்றனர்.
விஷயம் வெளியில் வராமலிருக்க முருகேசன் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் பணமும் 2 ஏக்கர் நிலமும் தருவதாகச் சொல்லி கண்ணகி குடும்பத்தினர் கட்டப்பஞ்சாயத்தும் நடத்தியிருக் கின்றனர்.
இதனை விருத்தாசலம் காவல்துறையினரும் மறைக்கப் பார்த்த நிலையில், நக்கீரன் 18-7-2003 இதழில், "விஷம் தந்து காதலர்கள் எரிப்பு! தமிழக பயங்கரம்!'’’ என்ற தலைப்பில் நக்கீரன் முதன்முதலாக வெளியிட்டது. இதையடுத்தே இந்த விவகாரம் பரவலான கவனத்தைப் பெற்றது.
தன் மகனின் மரணம் குறித்து அன்று நக்கீரனிடம் பேசிய முருகேசனின் தந்தை சாமிக் கண்ணு, “""என் பையன் பெங்களூரு போறேன்னு சொல்லிட்டுப் போன மறுநாள் பிரசிடென்ட் பையன் மருதுபாண்டி அரிவாளோட வந்து, என் தங்கச்சியைக் காணோம், உம் பையன்தான் இழுத்துக்கிட்டுப் போயிட்டான். உம் பையன் வரலேன்னா.. உன்ன வெட்டுவேன் னான். நான் அவனைத் தேடித் திரிஞ்சிக்கிட்டிருந்தப்பவே, அவனை இழுத்துவந்து அவன் கதையை முடிச்சிட்டாங்க. அதுவும் உறவினர் சொல்லித்தான் எனக்குத் தெரியும்''’’ என்றார் சோகமாக. “""நக்கீரன்ல செய்தி வந்ததும்தான் கட்சிக்காரங்க, வழக் கறிஞர் ரத்தினம் ஆளுங்க வந்து விசாரிச்சாங்க''’ என்றார்.
""என் பையனையும், கண்ணகியையம் அழைச் சுட்டு வந்தாங்கன்னு கேள்விப்பட்டு ஓடினோம். ஊரே கூடி நிக்குது. நாங்க நாலு பேர். என் பையனை 10 பேருக்கு மேல சேர்ந்து அடிச்சாங்க நாங்க கதறக் கதறவே அவன் காதுலயும் மூக்குலயும் விஷத்தை ஊத்தி சாகடிச்சாங்க''’என வேதனையில் கதறினார் முருகேசனின் சித்தியான சின்னப்பிள்ளை.
இதுகுறித்து அன்றைக்கு விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டராக இருந்த செல்லமுத்து, சப் இன்ஸ் பெக்டர் தமிழ்மாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்நிலையில் நக்கீரன் செய்தியை யடுத்து இந்த ஆணவக் கொலை சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கிய நிலையில்தான் கண்ணகியின் உறவினர்கள் 4 பேரையும், முருகேசனின் உறவினர் கள் 4 பேரையும் காவல்துறை கைது செய்தது.
2004-ல் வழக்கு, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் போலீஸ்காரர்கள் இருவ ரோடு மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க் கப்பட்டனர். கடலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போதும் ஆணவக் கொலை நிகழ்வை நேரில் கண்ட முருகேசனின் சித்தியை சி.பி.ஐ. சாட்சியாகச் சேர்க்கவில்லை. இதற்கெதிராக சென்னை உயர்நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்த பிறகே உரிய உத்தரவு பிறப்பித்தனர்.
வழக்கின்போது கண்ணகி தரப்பின ரின் மிரட்டலால் பலர் பிறழ் சாட்சி யானபோதும், பிற சாட்சிகள், ஆதா ரங்கள் துணையுடன் வழக்கறிஞர்கள் சந்தேகத்துக்கிடமின்றி கொலையை நிரூபித்தனர். இதையடுத்து, கொலைசெய்யப்பட்ட கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி உள்ளிட்ட 12 பேர் குற்றவாளிகள் என கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மருது பாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டி ருந்தது. தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்யக்கோரி 13 பேர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சப் இன்ஸ்பெக் டர் தமிழ்மாறனின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதேபோல கண்ணகியின் சகோதரர் மருது பாண்டியனுக்கான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது உயர்நீதிமன்றம்.
ஒரு ஆணவக் கொலை வழக்கில் பிரதான குற்றவாளியான மருதுபாண்டியனுக்கும், வழக்கு விசாரணை அதிகாரி தமிழ்மாறனுக்கும் தண்டனை குறைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம்தான் முயற்சியெடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை சுதான்ஷு துலியா, பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கினர். தங்களது தீர்ப்பில், “"இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் ஆகியோர் குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் தொடக்கத்தில் கடமை தவறி, சட்டத்தை மீறி இந்திய தண்டனைச் சட்டத்தின் 217-வது பிரிவு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 4-வது பிரிவின்கீழ் குற்றமிழைத் துள்ளனர். இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொய்யாகச் சிக்கவைத்து அவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளார். மேலும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகளை, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து தப்ப வைக்கும் நோக்கில் செல்லமுத்து தெரிந்தே, தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்ட இனத்தவர்களைச் சிக்கவைத்துள்ளார். எனவே இன்ஸ்பெக்டர் செல்லமுத்துக்கு விதிக் கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதிசெய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு சரியே.
அரசுத் தரப்பின் திறனற்ற போக்கையும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கைத் தாமதப் படுத்த கையாண்ட தந்திரங்களையும் இந்த வழக்கு தெளிவாகப் பேசுகிறது. அரசுத் தரப்பு தாக்கல் செய்த ஆதாரங்கள் போதுமானவை. குற்றம்சாட் டப்பட்டவர்களின் குற்றத்தை நிரூபிக்கவல்லவை.
கொடிய, அருவருப்பான குற்றம் புரை யோடிப்போன சாதியக் கட்டமைப்பின் கோரமான யதார்த்தமாக உள்ள ஆணவக் கொலை புரிவோ ருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்புக்கு இழப்பீடு அளிக்கவேண்டிய தேவையுள்ளது. முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவுக்கும், முருகேசனின் மாற்றாந்தாய் சின்னப்பிள்ளைக்கும் தலா 5 லட்சரூபாயை தமிழ்நாடு, "கூடுதல் இழப்பீடாக அளிக்கவேண்டும்' என அந்த அமர்வு தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த மதுரை வழக்கறிஞர் பொ. ரத்தினமும், விருத்தாசலம் வழக்கறிஞர் ராஜு இருவரும்தான் ஆரம்பம் முதல் முடிவுவரை தீவிரம் காட்டினர். வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த அய்யாசாமி, குணசேகரன் உள்ளிட்ட இருவர்மீது சி.பி.ஐ.யும் வழக்குப் பதிவுசெய்துவிட்டது. அதற் கெதிராக ராஜுதான் உயர்நீதிமன்றத்தில் கடுமை யாக வாதாடி அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபித்தார். அதேபோல, உயர்நீதிமன்றத் தீர்ப்பை யடுத்து துரைசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்போது தமிழக அரசுதான் அதற்கெதிராக முறையீடு செய்யவேண்டும். ஆனால் அரசுத் தரப்பில் எதுவும் செய்யப்படாத நிலையில் ரத்தினம்தான் ஆர்வம் எடுத்துக்கொண்டு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவர்கள் இருவர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் உள்ளிட்டோரின் முயற்சியால்தான் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் விடுதலையாகி, குற்றவாளிகள் தண்டனை பெற்றிருக்கின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு நக்கீரன் புலனாய்வுக்குக் கிடைத்த வெற்றி மகுடம்!