நக்கீரன் தொடர்ச்சியாக மணல் மாபியா கும்பலின் கொள்ளைகளைப் பற்றி எழுதி வருகிறது. சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு இந்த மணல் கொள்ளை தொழிலில் ஈடுபட்டிருக்கும் ராமச் சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் எப்படி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியது. அதைத்தொடர்ந்து பல கட்டுரைகள் இந்த மணல் மாபியாக்களைப் பற்றியும் இவை எப்படி இயங்குகின்றன என்பதைப் பற்றியும் எடுத்துச் சொன்னது.
அதன் தொடர்ச்சியாக கரிகாலன் லண்டனில் வாங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல், அமைச்சர் துரைமுருகன் லண்டன் ஹோட்டலில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையைச் சந்தித்த செய்தி வெளிவந்தவுடன், அமலாக்கத்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள மணல் கொள்ளை தொடர்பான இடங்களில் பாய்ந்தது.
அமலாக்கத்துறை திடீரென்று இந்த நட வடிக்கையில் ஈடுபடவில்லை. நக்கீரன் முதன்முதலில் செய்தி வெளியிட்டவுடனேயே கடந்த ஒரு மாதமாக அமலாக்கத் துறை இது தொடர்பான ஆவணங்களை திரட்டத் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் எத்தனை லாரி கள் மணல் அள்ளிச் செல் கின்றன என்பதை கணக் கெடுத்தது. மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் இருக்கிறதா? அவை இயங்கு கின்றனவா? என்பதையும் கணக்கில் எடுத்தது. மணல் குவாரிகளில் இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் பணியில் இருக்கிறார்களா? என்பதுடன், சுங்கச்சாவடி களில் மணல் லாரிகள் கொண்டுவரும் கடவுச்சீட்டு அரசு கொடுக்கும் உண்மை யான கடவுச்சீட்டா என்பதையும் சரி பார்த்தது.
அந்த விசாரணையில் ஒரு யூனிட் ஆயிரம் ரூபாய் என அரசு நிர்ணயித்த மணல் அரசாங்கத்திற்குத் தெரியாமல் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஐநூறு லாரி ஆப்பரேட்டர்கள் தமிழ்நாடு முழுவதுமுள்ள டிப்போக் களில் மணல் எடுக்கிறார்கள் எனத் தெரிய வந்தது. இந்த கணக்குப்படி பார்த்தால் அரசுக்கு 5000 கோடி ரூபாய் கடந்த வருடம் வருமானம் வந்திருக்க வேண்டும். ஆனால், அரசுக்கு வெறும் இருபது கோடி ரூபாய்தான் வருமானம் வந்திருக்கிறது. சட்டப்படி அரசுக்கு வரவேண்டிய 4880 கோடி ரூபாய் வரவில்லை. இதை இந்த கும்பல் கொள்ளையடித்திருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அரசாங்கக் கணக்குப்படி ஒரு மாதத்துக்கு 780 கோடி ரூபாய்க்கு, யூனிட் 1000 ரூபாய்க்கு எடுக்கப்படும் மணல், கர்நாடகத்தில் 60000 ரூபாய்க்கு விற்கப்படுவதன் மூலம் அதி பயங்கரமான மணல் கொள்ளை நடந்துள்ளது என அமலாக்கத்துறை கண்டுபிடித்திருக்கிறது. ஆற்று மணலில் 780 கோடி ரூபாய், கிராவல் எனப்படும் சாதா மணலில் 1380 கோடி ரூபாய், மலைக் கற்கள், எம் சேண்டு போன்ற வற்றில் 2000 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளை நடந்துள்ளது என்பது அமலாக்கத்துறையின் கணக்கு.
கடந்த பதினைந்து வருடங்களாக ஜெ.ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் என மூன்று முதலமைச்சர்களின் ஆட்சியிலும் இதே மணல் மாபியாக்கள் தொடர்ந்து கொள்ளையடித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மணல் மாபியாக்கள் லாபம் மாத்திரம் பார்த்திருக்கிறார்கள் என்பது அமலாக் கத்துறையின் கணக்கு. இந்த கணக்கை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் மணல் மாபியாவின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற 28 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.
ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் வீடுகள் மற்றும் பொதுப்பணித்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றில் புகுந்து ரெய்டு நடத்திய அமலாக்கத்துறைக்கு நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் கிடைத்துள்ளன. ஒரு கனிம வளத்துறை அதிகாரியிடம் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கியது. இப்பொழுது பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான ஆற்று மணல் குவாரிகளில் போலியான அரசு முத்திரைகளைப் பயன்படுத்தி பில் தயாரித்து தமிழக அரசையும், ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் மத்திய அரசையும் ஏமாற்றியதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிந்துள்ளது. ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் பல கல் குவாரிகளை பினாமி பேரில் இந்த மணல் மாபியா விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிகிறது. அதனடிப்படையில் கல்குவாரி மற்றும் கிராவல் மண் ஆகியவற்றில் நடந்த ஊழல்களை அமலாக்கத்துறை பட்டியலிடத் தொடங்கியுள் ளது.
தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து பணம் புழங்கும் அமைச்சர் களை அமலாக்கத்துறை குறி வைக்கிறது என உளவுத்துறை, முதல்வருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரிப்போர்ட் அனுப்பிய தாக காவல்துறை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. இதனால் ரெய்டு வரும் என தெரிந்து கொண்ட மணல் மாபியாக்கள் தங்களது பணத்தை ஒளித்து வைக்கும் வேலைகளில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டுக் கொண் டிருந்தனர். அதையும் மீறி பல ஆவணங்கள் அமலாக்கத்துறை கையில் சிக்கியுள்ளது. அதில் சில ஆவணங்களில் வெளிநாடு களில் சொத்து வாங்கியுள்ள விவரங்கள் அடங்கியுள்ளன.
இப்பொழுது மணல் மாபியாக்களில் முக்கியப் புள்ளிகள் அனைவரும் தலை மறைவாகியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் எந்த குவாரியும் இயங்கவில்லை. அனைத்து சப்ளைகளும் நிறுத்தப்பட் டுள்ளன. மணல் மாபியாக் களை நேரடியாக விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அந்த விசாரணையில், “"நீங்கள் எப்படி அரசாங்க பில்களை போலியாக அச்சடித்து மத்திய லிமாநில அரசுகளை ஏமாற்றி மணல் விற்பனை செய்தீர்கள்' என்ற கேள்வி எழும். அதில் அரசு அதிகாரிகள் மற்றும் மணல் மாபியா இவர்களில் யாராவது ஒருவர் அமைச்சரை கைகாட்ட... அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கத் திட்ட மிட்டுள்ளது.
இதைக் கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின், துரை முருகனைக் கூப்பிட்டு கடிந்து கொண்டதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ரகசியமாக நடந்து வந்த முறைகேடுகள் நக்கீரனால் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
___________
கமிஷனும் கரெப்ஷனும்!
முக்கிய நபர்களுக்கு பெரிய தங்கப் புதையலையே கரிகாலன் பரிசாகக் கொடுத்துள்ளார். இதேபோல பல சீனி யர்களையும் கவனித் துக்கொண்டதால் கனிம வளங்களுடன் பெரிய, பெரிய ஒப்பந்தங்களையும் பெற்று காலதாமதமாகவும், தரமில்லாமலும் கட்டிவருகின்றனர். ஒப்பந்தங்கள் கொடுப்பதற்கு முன்பே அதற்கான கமிசனை முன்பணமாகக் கொடுத்துவிடுவதால், வேலையை இவர்களுக்கு மட்டுமே கொடுக்கவேண்டும் என்று அதிகாரிகளை நிர்பந்தம் செய்துவருகின்றனர்.
காவிரி, கல்லணைக் கால்வாய்களில் மதகுகள் சீரமைப்பு என்ற பெயரில் எந்த வேலையும் செய்யாமலேயே பல இடங்களில் பதாகை வைத்து, அதுவும் பொதுமக்கள் பார்த்துவிடாமல் மறைத்து வைத்து பல கோடி ரூபாய்களை எடுத்துள்ளனர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.10 லட்சத் தில் கல்லணை கால்வாய் ஏனாதிகரம்பை மதகு சீரமைக்கையில், தண்ணீர் முழுக் கொள்ளளவில் வந்தபோதே ஷட்டர்கள் மாற்றியதாக பணம் எடுத்துள்ளது கரிகாலனின் கே இன்ப்ரா நிறுவனம். இந்த விவகாரம் நக்கீரனில் செய்தியானதும் பதாகையைக் காணவில்லை.
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிகம் செலவு செய்யவிருக்கும் நபராக ராமச்சந்திரன் உள்ளார். இதனால் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் முயற்சியாக அமலாக்கத்துறை சோதனையை முடுக்கிவிட்டு தி.மு.க. தேர்தல் செலவுக்கு பா.ஜ.க. செக் வைத்ததோடு, அமைச்சர்கள் உதவியுடன்தான் இத்தனை ஒப்பந்தங்கள் எடுத்திருக் கிறோம் என்று சொல்லவைத்து அவர்களையும் வழக்கில் இழுத்துச்சென்று நெருக்கடி கொடுக்கத் திட்ட மிட்டுள்ளது.
-பகத்சிங்
____________
நெருக்கும் பா.ஜ.க.!
அமலாக்கத்துறை சோதனை பற்றி மணல் யார்டு உரிமையாளர்களுக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் விசாரித்த போது, “"மாதாமாதம் உள்ளூர் முதல் மாநில தலைவர்கள் வரை எல்லோருக்கும் சரியாக அனுப்பிவிடுகிறோம். இந்த முறை ஒன்றிய ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்.பி. தேர்தலுக்காக நன்கொடை கேட்டு ஐதராபாத்தில் வைத்து முதல்கட்டமாக பேசினார்கள். 200 சி தர ஒப்புக்கொண்டோம். இப்போது பத்தாது 500 சி வேண்டும் என கேட்கிறார்கள், அவ்வளவு முடியாது என சொன்னதாலே ரெய்டு நடக்கிறது'' என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக், மணலைத் தொடர்ந்து, அடுத்து எந்த துறையை ஒன்றிய பா.ஜ.க. அரசு குறிவைத்துள்ளது என்கிற கேள்வியெழுந்துள்ளது. ஆட்சியாளர்கள் அதிகம் சம்பாதிக்கும் துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை. ஒப் பந்ததாரர்களிடம் 20 சதவிதம் கமிஷன் வாங்கப்படுகிறது என அறிக்கை அனுப்பிவைத்துள்ளது ஐ.பி.
-து.ராஜா