தமிழ்நாட்டில் செய்தி ஊடகங்களில் நேரம் காலம் பார்க்காமல் பத்திரிகையாளர்கள் பலரும் கடுமையாக உழைத்துவரு கின்றனர். தனி மனிதனின் நற்பண்புகளில் ஒன்றான நேர்மையே செய்தியாளரின் அடிப்படைத் தகுதியாகும். அதேநேரத்தில், எந்த ஒரு பத்திரிகையிலும் பணி புரியாமல், தங்களை நிருபர்கள் எனச் சொல்லிக்கொண்டு, அரசுத்துறை அதிகாரிகளையும், ஊழல் அரசியல்வாதிகளையும், குவாரி நடத்துபவர்களையும், விதிமீறலாகத் தொழில் செய்பவர்களையும் மிரட்டிப் பணம் பறிக்கும் போலி நிருபர்களும் அதிகரித்துவருகின்றனர்.
கடந்த ஜூலை 19ம் தேதி தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மணிவண்ணனை, கைபேசி எண் 7824952798லிலிருந்து தொடர்புகொண்ட போலி நிருபர் ஒருவர், தான் நக்கீ ரனில் பணிபுரிந்துவருவ தாகவும், ஜிபே மூலம் கைபேசி எண் 9444601505-க்கு பணம் அனுப்பவேண்டுமென்று பேசியிருக்கிறார். Truecaller-ல் அந்தப் போலி நிருபர் மோசடியாகப் பதிவு செய்தபடி 7824952798 என்ற கைபேசி எண்ணில் Nakiran Press என்றும், ஜிபே அனுப்பவேண்டிய கைபேசி எண் 9444601505-ல் Nakkiran Sub Editor என்றும் காட்டியிருக்கிறது. தனது வாட்ஸ்-ஆப் முகப்பு படத்தில், அந்த போலி நிருபர் நக்கீரன் லோகோவைப் பயன்படுத்தி வந்துள்ளான்.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் நக்கீரன் நிருபர் சக்தி வேலை நன்கறிந்த தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மணிகண் டன், தன்னிடம் பணம் கேட்டவர் போலி நிருபர் என்பது தெரிந்ததும், முழுத் தகவலையும் நம்மிடம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த போலி நிருபர் மிரட்டிப் பணம் கேட்கும் தகவல் நமக்குக் கிடைத்தது.
அந்த நபர் மேற்கண்ட கைபேசி எண்கள் மூலம், கரூர் மாநகராட்சி ஆணையர் சுதாவிடம் பயணச் செலவுக்குப் பணம் அனுப்புமாறு பேசியிருக்கிறான். விருதுநகர் மாவட்ட திட்ட அலுவலர் முனைவர் தண்ட பாணியிடம் "சென்னையிலிருந்து ஒரு வேலையாக திருச்சி வரையிலும் காரில் வந்திருக்கிறோம். டீசல் செலவுக்கு ரூ.5000- ஜிபே மூலம் அனுப்புங்கள்' என கேட்டிருக்கிறான். மதுரை மாவட்ட வருவாய் அலுவலரின் (ஷாலினி) தாசில்தார் சிவபாலனை முதலில் நேரில் சந்தித்து "நிறைய முறைகேடு நடக்கிறது. ஆதாரம் என்னிடம் இருக்கிறது. நக்கீரனில் செய்தி வெளியிட்டால், உங்கள் நிலைமை மோச மாகிவிடும்'’என்று பேரம் பேசியிருக்கிறான். அடுத்து, கைபேசி மூலம் தொடர்புகொண்டு ஜிபே மூலம் அனுப்பு மாறு வற்புறுத்தி யிருக்கிறான்.
தாசில்தார் சிவபாலன் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதியிடம் இதுகுறித்துப் பேச, அவர் அரசுத்துறை அலுவலர்களிடம் "பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொண்டு யாராவது மிரட்டிப் பணம் கேட்டால், உடனே பி.ஆர்.ஓ. அலுவலகத்துக்குத் தகவல் தெரிவியுங்கள். உண்மையான பத்திரி கையாளர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண் விபரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளன. பி.ஆர்.ஓ. அலுவலகத்தைத் தொடர்புகொள் வதன் மூலம் உங்களை மிரட்டுபவர் போலி நிருபரா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு நட வடிக்கை எடுக்கமுடியும்'’என தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகராட்சி ஆணையர் மாலதியைத் தொடர்புகொண்டு, காரில் டீசல் போடுவதற்கு இந்தப் போலி நிருபர் பணம் கேட்டுள்ளான்.
போலி நிருபரின் மோசடியான செயல்பாடு கள் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்பை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது, "முதலில் சைபர் கிரைமில் புகார் அளித்துவிட்டு, பிறகு என்னிடம் தெரிவியுங் கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல் கிறேன்''’என கூறினார். நாம் புகாரளித்ததன் பேரில் விசாரணை நடைபெற்று, அந்தப் போலி நிருபர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவிலுள்ள நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பது தெரிய வந்தது. ஏ.டி.எஸ்.பி. தெய்வம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லாயுடு சிங், ஏட்டு ராஜசேகர் ஆகியோர், சி.டி.ஆர். சிக்னலின் அடிப்படை யில் அரியலூர், பெரியார் நகர் 6-வது தெருவில் உள்ள இளங் கோவனின் இருப்பிடம் சென்று, அரியலூர் டவுண் காவல்நிலைய போலீசார் உதவியுடன் அவனைக் கைது செய்தனர். அவன் வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட இளங்கோவன் மீது, ஆள் மாறாட்டம் மற்றும் செல்போனைப் பயன்படுத்தி தவறான முறையில் பேசி மிரட்டியதன் அடிப்படையில் பிரிவுகள் 319(2) மற்றும் 66ன் கீழ் வழக்கு பதிவானது. திண்டுக்கல் ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போலி நிருபர் இளங் கோவனை, நீதிபதி பிரியா 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அவனை அடைத்தனர்.
ஐ.ஏ.எஸ். கேடரில் உள்ள அந்தப் பெண் அதிகாரியிடம் நக்கீரன் பெயரைச் சொல்லி போலி நிருபர் இளங்கோவன் செல்போனில் பணம் கேட்க, அவரும் ரூ.10000ஐ ஜிபே மூலம் அனுப்பியிருக் கிறார். இத்தகவல் நமக்குக் கிடைத்து அந்த அதிகாரியிடம் நாம் விசாரித்தபோது “"நக்கீரன் பெரிய பத்திரிகைங்கிற மரி யாதைல பணம் கொடுத்துட் டேன். மற்றபடி போலீஸ் கம்ப்ளைன்டுக்கு நான் எப்படி ஒத்துழைக்கமுடியும்? பெரிய படிப்பெல்லாம் படிச்சு உயர்ந்த உத்தியோகத்துல இருக்கிற நான் ஏமாந்தேன்னு ஒத்துக்கிட்டா, நல்லாவா இருக்கும்? என்னை விட்ருங்க சார்...''’என்று கேட்டுக்கொண்டார். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்தானே போலி நிருபர்களின் குறியாக உள்ளது. மிரட்டுபவர் போலி நிருபர் என்று தெரிந்தாலும், புகாரளிக்கும்போது, தங்களது பெயரும் வெளிவந்துவிடுமே என்ற உதறல் இருப்பதாலேயே, கேட்கும் பணத்தை லஞ்ச அதிகாரிகள் பலரும் கொடுத்துவிடுகிறார்கள். அதிகாரிகளின் இந்த அச்சமே, போலி நிருபர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது.
போலி நிருபர், திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் அளித்த வாக்கு மூலத்தில், "12ஆம் வகுப்புவரை படித்தேன். நல்ல வேலை எதுவும் கிடைக்காமல் சென்னையில் எம்.எல்.ஏ. ஹாஸ்டல் டீ கடையில் வேலை பார்த்தேன். பிறகுதான் அரியலூரைச் சேர்ந்த அரசியல் வாதி ராஜேந்திரனிடம் வேலைக்குச் சேர்ந்தேன். அவருடைய லெட்டர் பேடை தவறாகப் பயன்படுத்தி னேன். அந்த வழக்கு அரியலூர் கோர்ட்டில் இருக்கிறது. வேலை வாங்கித் தருவதாக ஒரு சிலரை பெரம்பலூரில் ஏமாற்றினேன். அந்த வழக்கு பெரம்பலூர் கோர்ட்டில் இருக்கிறது. என் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, "தேசபக்தி' என்ற பத்திரிகை யில் நிருபராகச் சேர்ந்தேன். பத்திரிகை நிருபர் என்ற அங்கீகாரத்துடன் ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், யூனியன் அலுவலகங்கள், பத்திரப் பதிவு அலுவலகங்கள் மற்றும் சில அரசுத்துறை அலுவலகங்களுக்குச் சென்று தேசபக்தி பத்திரிகை யின் பெயரைச் சொல்லி வசூல் செய்தேன். அதில் நான் எதிர்பார்த்த அளவுக்குப் பணம் கிடைக்கவில்லை. பிரபலமான பெரிய பத்திரிகையின் பெயரைச் சொன்னால் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்பதால், நக்கீரனின் நிருபராகப் பணிபுரிகிறேன் என்று பொய் சொல்லி அரசு அதிகாரிகளை மிரட்டி வந்தேன். தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான ஊர்களுக்கும் போன் போட்டு பணம் கேட்டேன். ஒருசிலர் அனுப்பி வைத்திருக்கிறார்கள். எந்தெந்த ஊரிலிருந்து பணம் பெற்றேன் என்பது நினை வில் இல்லை''’என்று கூறியிருக்கிறான்.
திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி. தெய்வம் நம்மிடம், "போலி நிருபர் இளங் கோவனை விசாரித்தபோது முன்னுக் குப்பின் முரணாகப் பேசினான். அதேநேரத்தில், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. மணிவண்ணனிடம் ஜூலை 19ஆம் தேதி பணம் கேட்டதையும், ஜிபே மூலம் அனுப்பச் சொல்லி செல்போன் நம்பரை அனுப்பி வைத்ததையும் ஒப்புக்கொண்டான். திண்டுக்கல் நிருபர் சக்தி வேலுக்கு இளங்கோவன் மிரட்டிய விபரம் தெரிந்த வுடன், அந்த செல்போன் சிம்கார்டை உடைத்து விட்டான். வழக்கு பதிவு செய்து மருத்துவப் பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற போது, பிரஷர் கூடிவிட்டது என்று படுத்து நாடக மாடினான். மருத்துவர்கள் அவன் நல்லபடியாகத் தான் இருக்கிறான் என்றார்கள். தமிழ்நாட்டில் நக்கீரன் பெயரைச் சொல்லி வேறு எங்கெங்கு மிரட்டி பணம் வாங்கினான் என்பது தெரிந்தால், அவனைக் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்குத் தயாராக இருக்கிறோம்''” என்றார்.
திருச்சி மாநகரம் -ஸ்ரீரங்கத்திலும், சிதம்பரம் டவுண் காவல்நிலையத்திலும் போலி நிருபர் இளங்கோவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றீசல்போல் போலி நிருபர்கள் தனித்தனியாகவும், கும்பல் கும்பலாகவும் உலவுகின்றனர். நேரிலும், கைபேசி மூலமாகவும் மிரட்டிப் பணம் பறித்துவரும் இத்தகைய பேர்வழிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய பெரும் பொறுப்பு, மிகப்பெரிய சவாலாக தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறைக்கும் உள்ளது.
-ராம்கி, சக்தி, அண்ணல், துரை மகேஷ், காளிதாஸ்