வெவ்வேறு திசைகளில் தப்பித்த குற்றவாளிகள் 11 நபர்களையும் கைதுசெய்து கெத்துக் காட்டியிருக்கின்றனர் ஏ.எஸ்.பி. சிருஷ்டிசிங் தலைமையிலான பொள்ளாச்சி போலீசார். அளவுக்கு அதிகமாக டார்ச்சர் கொடுக்கப்பட்ட வருண்காந்த், காப்பக உரிமையாளர் கவிதா லெட்சுமணன் மீது எச்சிலை உமிழ்ந்ததாலேயே அடித்துக்கொல்லப்பட்டிருக்கிறார் என்ற தகவல் முதற்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது.
"மற்றைய அனைத்து மனிதர்களையும்போல இயல்பான குழந்தை வருண்காந்த். புதிதாகச் சந்திக்கும் எவரும், வருண்காந்த் மனநலம் பாதித்தவர் என எளிதில் நினைக்கமாட்டார்கள். அவராகவே அவர் தேவைகளைச் சரிசெய்து கொள்வார். ஆனால் அவருக்குப் பிடிக்காத, விரும்பாத செய்கைகளை யார்செய்தாலும் பொறுக்காமல் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுவார். ஒருகட்டத்தில் ஆட்டிசம், ஹைபர் ஆக்டிவ் அனைத்திற்கும் சிகிச்சையளித்துப் பார்த்தார் அவரது தந்தையான ரவி.
அமைதியான சூழலே அவரை ஆறுதல்படுத்தும் என்பதால் முதலில் கோயம் புத்தூர் பேரூரிலுள்ள மடாலயம் ஒன்றில் வருண்காந்தைச் சேர்த்துள்ளார். இரண்டு வருடங்கள் கடந்தும் பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை. உறவினர் ஒருவரின் வழி காட்டுதலில் பொள்ளாச்சி யுதிரா சாரிடபிள் ட்ரஸ்டில் சேர்த்து, இப்பொழுது மகனைப் பறிகொடுத்துநிற்கிறார். பணம் பறிக்கும் இதுபோன்ற மனநலக் காப்பகங்கள் கோயம் புத்தூர் மாவட்டத்தில் நிறைய இருக்கின்றன. இதனை யாரும் கண்காணிப்பதில்லை'' என்கிறார் கொலையுண்ட வருண்காந்தின் உறவினர் ஒருவர்.
தொடக்கத்தில் காப்பகத்தாரின் பேச்சைக் கேட்டு, அவர்கள் வழிகாட்டிய கோட்டூர், ஆழியாறு, ஆனைமலைப் பகுதிக்கான சர்க்கிள் இன்ஸ்பெக்டரைக் கொண்டே வருண்காந்தைத் தேடியிருக்கின்றனர். (அந்த இன்ஸ்பெக்டரின் கதை தனிக்கதை.) பலனில்லை என்பதை தாமதமாக உணர்ந்த வருண்காந்தின் பெற்றோர் தரப்பு, உள்ளூரிலுள்ள மா.செ. தளபதி முருகேசன், எம்.பி. ஈஸ்வரமூர்த்தி வழிகாட்டுதலில் மாவட்ட எஸ்.பி.யைச் சந்தித்து புகாரளித்திருக்கின்றார். சம்பவத்தின் வீரியத்தைப் புரிந்துகொண்ட எஸ்.பி.யோ பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங் தலைமையில் உடனடியாக விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டிருக்கின்றார். ஷாஜுவின் தந்தை செந்தில்பாபு, சூப்பர்வைசர் ரித்தீஷ், பணியாள் ரங்கநாயகி ஆகியோர் போலீஸாரின் சந்தேக வளையத்தில் வர, தனித்தனியாக ஒவ்வொருவரையும் விசாரித்திருக்கின்றனர். "சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைபோல' 9 மணிக்கு வேலைக்கு வருவேன். மாலை 6 மணிக்குப் புறப்பட்டுவிடுவேன் எனத் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தனர் மூவரும்.
"நீதான் அந்தப் பையனை கிரிக்கெட் பேட்டால் அடிச்சன்னு அவன் சொல்றான்'' என தனிப்படை டீம் ஒவ்வொருவரிடமும் மாறி, மாறி தகவல் வாங்கியும், பிறகு போலீஸாரின் வழக்கமான விசாரணையை ஆரம்பிக்கவும் காப்பக நிர்வாகி கிரிராமை நோக்கி கையைக் காண்பித்தனர். அவரை கைதுசெய்த பிறகே வருண்காந்த் கொலைசெய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனிடையே கவிதா, லெட்சுமணன், ஷாஜி உள்ளிட்ட முதன்மைக் குற்றவாளிகள் தலைமறை வாகினர்.
"பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால் இங்கு உணவுகூட ஒழுங்காகக் கொடுப்பதில்லை. வருண்காந்த் உட்பட அந்தக் காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை 26. இதில் வருண்காந்த் கொலைக்குப் பிறகு பெற்றோர்களை வரவழைத்து குழந்தைகளை அனுப்பிவிட்டது காப்பக நிர்வாகம். ஒருசிலர் காப்பகப் பொறுப்பாளர் ஷாஜியின் வீட்டில் தங்கியிருக்க, நாங்களே அவர்களது பெற்றோர்களை வரவழைத்து அனுப்பி வைத்தோம். இதில் ஒரு குழந்தையின் அடையாளமே தெரியவில்லை. அவரை கோவைக்கு அனுப்பி வைத்தோம்.
கிரிராம் கைதுக்குப் பிறகு 26-ஆம் தேதி காப்பக பாதுகாப்பாளர்கள் சதீஷ் மற்றும் ஷீலா கைது செய்யப்பட்டனர். இருப்பினும் முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகினர். உடனே போலீஸ் விமான நிலையம், கப்பல் போக்குவரத்துத்துறை ஆகியவற்றிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது.
முன்னதாக, உள்ளூரிலுள்ள அ.தி.மு.க. பிரமுகரின் உதவியுடன் காப்பக உரிமையாளர் கவிதா, கவிதாவின் கணவர் லட்சுமணன், மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா ஆகியோர் பொள்ளாச்சி யிலிருந்து கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் ஏற்கனவே அங்கிருந்த காப்பகப் பொறுப்பாளரான ஷாஜி இணைந்து வாடகைக் கார்கள் மூலம் கேரளா விற்கு தப்பியிருக்கின்றனர். பாலக்காடு வழியாக முதலில் திருவனந்தபுரம், வர்கலா சென்றிருக்கின் றார்கள். செல்லுகின்ற இடத்திலேயே தங்கிவிட்டு அங்கிருந்து மறுநாள் வேறொரு ஊருக்குச் சென்றுவிடுவார்கள். ஒரு ஊரில் ஒரு நாளுக்கு மேல் தங்குவது இல்லை. இந்த நிலையில்தான் கோட்டயம் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் வேனில் அழைத்து வரும்பொழுது அனைவரிடமும் எதுவுமே நடக்காததுபோல் சகஜமாகப் பழகினர் குற்றவாளிகள். பொள்ளாச்சிக்குக் கொண்டு வரப்பட்டு விசாரணையைத் துவக்கியபோது மூத்த மகள் ஸ்ருதி, திரைப்பட நடிகர் வடிவேலு பாணியில் என்ன நடந்தது..? என திரும்பத் திரும்ப கூறி எங்களையே குழப்பினார். பின் தான் அந்த கொடூரத்திற்கான காரணம் வெளிப்பட்டது'' என்கின்றார் தனிப்படை அதிகாரி ஒருவர்.
வருண்காந்த் கொலையில் 11 நபர்கள் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவர்கள் பயன்படுத்திய இரண்டு கார்கள், சந்தேகம் வராமலிருக்க நடுப்புணிக்கு சடலத்துடன் செடிகளைக் கொண்டுசென்ற டாடா ஏஸ் ஆகியவற்றை பொள்ளாச்சி மகாலிங்கபுர போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவர்மீதும் கொலை, ஆயுதங்களால் தாக்குதல், பிரேதத்தை மறைத்தல் உட்பட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
"வருண்காந்த் இந்த காப்பகத்திற்கு வந்ததிலிருந்து ஹைபர் ஆக்டிவாக செயல் பட்டான். இருக்கின்ற இடத்திலேயே யூரின் போவான். அதனை தினசரி துடைப்பது எங்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். அத்துடன் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எறிந்து கத்தி கலாட்டா செய்வான். இதில் சாப்பாட்டு தட்டு, தம்ளரும் அடக்கம். விளையாட்டின் போதும் அப்படித்தான். கையில் கிடைத்ததை வைத்து சிலநேரம் அடிக்கவும் செய்வான். இதில் பல நேரம் எங்களுக்கு காயம் ஏற்பட்டிருக் கின்றது. நாங்களும் பதிலுக்கு அவனை ரெண்டு தட்டு தட்டிவைப்போம். பெரிதாக வெளியில் தெரியாது.
அனைவரையும் சில நேரம் அடித்து அரட்டவேண்டிய சூழல். அதாவது கட்டுப் படவில்லையென்றால் இன்னொருவரை வைத்து அடிப்போம். இது வழக்கமான ஒன்றுதான். அவர்களைப் பார்க்க வரும் பெற்றவர்களிடம் அவர்கள் சொல்லமுடியாது. அவர்கள் கூறுவதை பெற்றவர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதற்கான நேரமும் கிடையாது. அருகிலேயே நாங்கள் இருப்போம். இந்த காப்பகத்தைப் பொறுத்தவரை காப்பக உரிமையாளர் கவிதா லெட்சுமணன் கவுன்சிலிங் செய்வார். அவருடைய மூத்த மகளும் கவுன்சிலிங் செய்வார். வருண்காந்த் வந்த நாளிலிருந்து அவனுடைய நடவடிக்கைகள் பிடிக்காததால் கவிதா லெட்சுமணனிடம் கூறினோம். அவரும் வருண்காந்தை மிரட்டிப் பார்த்தார். அவன் அவரையும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. மாறாக அவர்மீது எச்சிலைத் துப்பினான். இது தான் சாக்கு என அனைவரும் (அவருடைய மகள்கள் உட்பட) வருண்காந்தை அடித்துத் துவைத்தோம். அவன் தலையை சுவரில் முட்டியதால் அவன் மயக்கமடைந்து விழுந்தான். அவனுடைய அறையிலுள்ள ரத்தக்கறையை துடைத்துவிட்டு அவனை மசாஜ் அறைக்கு கொண்டுசென்றோம். இருப்பினும் அவன் மயக்கத்திலிருந்து மீளவில்லை. இறந்து விட்டான் என்பதை உறுதிசெய்த பிறகுதான் புதைத்தோம்'' என்கின்றது குற்றவாளிகளின் வாக்குமூலங்கள்.
எச்சில் உமிழ்தலும், தன்னிச்சையாக சிறுநீர் கழிப்பதும் நோய்த் தாக்கம் கொண்டவர்களின் இயல்பான செயல்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சையளித்து காப்பதுதான் மனநலக் காப்பகங்களின் பணி. மனநலக் காப்பகத்தின் உரிமையாளரான பெண்ணோ, அதைக்கூட பொறுத்துக் கொள்ளாமல் ஒரு உயிரையே பறிக்கும் பேயாக மாறியிருக்கிறார்.
படங்கள்: விவேக்