முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்காமல் பிரச்சனை செய்துவருகிறது கேரளா. தென் தமிழகத்திலுள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும், விவசாயத்திற்குமாக, தமிழக கேரள எல்லையான குமுளி, தேக்கடியில் கர்னல் ஜான் பென்னிகுவிக்கால் கட்டப்பட்ட 152 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 136 அடியாகக் கேரள அரசு குறைத்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் பேரில், கடந்த 2014ஆம் ஆண்டில், 142 அடியாக உயர்த்திக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்தது. அது மட்டுமல்லாமல் முல்லைப் பெரியாறு அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக அணையின் கொள்ளளவை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை நீர் மட்டத்தை உயர்த்தும்போதெல்லாம் கேரள அரசு சில விஷமிகளைத் தூண்டிவிட்டு, பெரியாறு அணை பலவீனமாக உடையும்தருவாயில் இருப்பதாகக் கூறி, புதிய அணை கட்டப்போவதாக பீதி கிளப்பிவந்தது. இந்நிலையில் தான், முல்லைப் பெரியாறு அணையின் பின்புறத்தில் 360 மீட்டர் தொலைவிலுள்ள மஞ்ச மலை வனப்பகுதியில், முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கேட்டு கேரள அரசு மனுத்தாக்கல் செய்து மீண்டும் பிரச்சனையைக் கிளப்பியுள்ளது. இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா-ன் கண்டித்திருக்கிறார். அதோடு, பெரியார் பாசன விவசாயிகள் சங்கங்கள், 58ஆம் கால்வாய் விவசாயிகள் சங்கம் மற்றும் சில அமைப்புகளும் கேரள அரசை கண்டித்து, லோயர் கேம்ப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து குமுளியை முற்றுகையிட விவசாயிகள் படையெடுத்ததும் பதறிப்போன போலீசார், விவசாயிகளை பென்னிகுவிக் மண்டபம் அருகே தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக கேரள அரசைக் கண்டித்து, கடந்த செவ்வாயன்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு சார்பில் சுற்றுச்சூழல் துறையில் அனுமதி கேட்ட கடிதத்தின் நகலை எரித்துத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இவ்விவகாரம் தொடர்பாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலசிங்கம், ""இரண்டு மாநில உறவுகளை சீரழிக்கும் விதமாக, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை கேரள அரசு கேட்டு வருகிறது. கடந்த 2014 சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் புதிய அணையை கேரளா கட்டக்கூடாது என உத்தரவிட்டும்கூட, கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகியது தவறு. புதிய அணைக்கான இடம், பெரியார் பு-கள் காப்பகத்துக்குள் இருப்பதால், தேசிய பு-கள் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரள மனுவை பரிசீ-க்கக்கூடாது. அந்த மனுவை நிராகரிக்க வேண்டும்.
பேபி அணையை பலப்படுத்திக்கொண்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதைத்தொடர்ந்து, பேபி அணையை பலப்படுத்துவதற்காக அங்குள்ள 13 மரங்களை வெட்டுவதற்கு தமிழகத்தின் சார்பில் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு கேரளா அனுமதி கொடுக்காததால், பேபி அணையை பலப்படுத்த முடியவில்லை. ஆனால் முல்லை பெரியாறுக்குப் பதிலாக புதிய அணையைக் கட்ட கேரளா முனைகிறது. அப்படி கட்டப்பட்டால் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும். வன விலங்குகளுக்கும் ஆபத்து என்பதால் மத்திய அரசு அனுமதிக்காது. எனினும், கட்டப்போவதாகப் புரளியை கிளப்பிவருகிறது. கேரள அரசு இதுபோன்ற புரளிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தென்மாவட்ட மக்கள் முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க மிகப்பெரிய போராட்டத்தில் மீண்டும் குதிக்கத் தயாராக இருக்கிறோம்'' என்று கூறினார்.
இந்த நிலையில் கேரள அரசு, முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழுவிடம் அனுமதி கேட்டு கொடுத்திருந்த மனு தொடர்பான விசாரணை கடந்த 28ஆம் தேதி நடக்க இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாளான 27ஆம் தேதி, தேனி மாவட்டத்திலுள்ள லோயர் கேம்ப்பில் விவசாய சங்கங்கள், கேரள அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குதித்ததைக் கண்டு மிரண்டு போன மத்திய அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு, திடீரென கூட்டத்தை ரத்து செய்துவிட்டது. இது கேரளாவிற்கு எதிராகப் போராடிய முல்லைப் பெரியாறு விவசாயிகளின் சங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக இருக்கிறது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களுக்குப்பின் நீதிமன்றத்தில் பெற்ற தீர்ப்பை கேரள அரசு மதித்து நடக்கவேண்டும்.