சில குளறுபடிகளால் சிவகாசி மாநகராட்சி, தொடர்ந்து தடுமாறிக் கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம், பணமே பிரதானமென ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டு வருவது தான் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பிசினஸ் பண்ணும் கமிஷனர்!
சமூக ஆர்வலரான கதிரவன், "பத்து வருஷமா திருத்தங்கல் ஏரியாவுல குடிநீர் இணைப்புகளுக்கு டெபாசிட் வாங்கிட்டு ரசீதே தரல. அனுமதியே இல்லாம குடிநீர் இணைப்பு கொடுத்தாங்க. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்னு மனு கொடுத்தேன். மூணு மாசம் கடந்திருச்சு. ஒரு நடவடிக்கையும் எடுக்கல. சொத்து வரி, காலிமனை வரி, கட்டிட வரைபட அனுமதி ஒப்புதல், தொழிற்சாலைகள் நடத்துவதற்கான உரிமம், தண்ணீர் தீர்வை எனத் தொட்டதற் கெல்லாம் லஞ்சம். அதுவும் கைநிறையக் கொடுக்கணும். "மேலே ரூ.30 லட்சம் கொடுத் துட்டு இந்த சீட்டுக்கு வந்திருக்கேன். என்கிட்ட மனுவைத் தூக்கிட்டு வராதீங்க... பிசினஸ் பண்ணவிடுங்க'ன்னு ஓபனாவே கமிஷனர் சொல்லுறாராம்''’என்றார் ஆதங்கத்துடன்.
என்ன நடக்குது? -துணை மேயர் ஆதங்கம்!
மாமன்றக் கூட்டத்தில் துணை மேயர் விக்னேஷ் பிரியாவும்கூட ஓபன் மைக்கில் “"இந்த மாதிரி பிஹேவ் பண்ணுனா, மாமன்ற உறுப்பினர்கள் நாமள்லாம் ஒண்ணு சேர்ந்து சிவகாசி மாநகராட்சியை எப்படி சீரமைக்கிறது? முதன்மையான மாநகராட்சியா எப்படி மாத்துறது? இந்த கமிஷனர் என்கிட்ட எதுவுமே கம்யூனிகேட் பண்ணுறது கிடையாது. டிஸ்கஸ் பண்ணுறதும் கிடையாது. எனக்கு மாமன்ற உறுப்பினரா இருக்கக்கூட தகுதியில்லைன்னா சொல்லிருங்க. நான் மாநகராட்சிக்கு வரணும்கிற அவசியமே இல்ல. மேயர்கிட்டயும் அதிகமா ஆலோசிக்கிறது கிடையாது. கையெழுத்து போடுங்கன்னு சொல்லுறாங்க. போட்டாச்சு. அவ்வளவுதான், இந்தமாதிரிதான் இந்த மாமன்றத் துல நாம இருக்கோம். என்ன நடந்துட்டு இருக்கு? என்ன பிரச்சனை? எனக்கே எதுவும் தெரியல''’எனக் குமுறியதும் நடந்துள்ளது.
லஞ்சக் குப்பைகள்!
"சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதில் மிகமிகப் பலவீனமாக இருக்கிறது சிவகாசி மாநகராட்சி. ஒப்பந்தப்படி 120 பேர் பார்க்கவேண்டிய வேலைக்கு மூன்றில் ஒருபங்கு ஆட்கள்தான் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆணையாளராக கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றதி லிருந்து முறையாக விசாரணை மேற்கொண்டால், கபளீகரம் செய்யப்பட்ட லட்சங்களும், மோசடி களும் அம்பலமாகும்'’எனச் சொல்லப்படும் நிலையில், தலை சரியாக இருந்தால்தானே வால் சரியாக இருக்கும் என்பதுபோல், "தெருக்களில் குப்பைகளை வாங்குவதற்கு வீடுகளில் பணம் கேட்பதும், பணம் கொடுக்காத வீடுகளில் குப்பைகளை வாங்க மறுப்பதும்கூட சிவகாசியில் நடக்கிறது. “குப்பைகள் பொறுக்குவதற்கும் லஞ்சமா?'’என மக்களைக் கொதிநிலையிலேயே வைத்திருக்கிறது, இம்மாநகராட்சி.
பத்து ஆண்டுகளாக நோ டிரான்ஸ்பர்!
இறப்புச் சான்றிதழுக்கும் பணம் வாங்குவதை வழக்கமாகக் கொண்ட சுகாதார ஆய்வாளர் சித்திக், இடமாற்றம் செய்யப்படாமல் 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் (சிவகாசி) இருக்கிறார் என்றால், நிர்வாகம் எந்த அளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?” என்ற பொதுஜனத்தின் கேள்விக்கு நம்மிடம் சித்திக், "நான் மனசாட்சிக்கு பயந்து வேலை பார்ப்பவன். பாவ, புண்ணியத்தில் நம்பிக்கையுள்ளவன். இறப்புச் சான்றிதழுக்கு பணம் வாங்குவதில்லை. என்னுடைய குடும்பச் சூழ்நிலை காரணமாகவே டிரான்ஸ்பர் பண்ணவில்லை.''” எனப் பதிலளித்துச் சமாளித்தார்.
ஆபாச அழைப்பு விடுத்தவருக்கு ப்ரமோஷன்!
லஞ்சப் புகாரைக் காட்டிலும் மேலாக, பாலியல் புகார் வேறு இம்மாநகராட்சியைச் சூழ்ந்துள்ளது. பொறுப்பு மேலாளரான சந்தனக் காளை பெண் ஊழியர்களிடம், "நேற்று என் கனவில் வந்தாய், அதுவும் அந்தக் கோலத்துல. அப்ப நீ பண்ணுன காரியத்தால என் தூக்கமே போச்சு. இதுக்கு நீதான் நல்லபடியா ஒரு முடிவெடுத்து ஒத்துழைக்கணும்...''’ என்று தவறான நோக்கத்தில் பேசி, நேரடியாக அழைப்பே விடுப்பார். சந்தனக்காளையின் சபலம் குறித்து பெண் ஊழியர்கள் மேயர் சங்கீதாவிடம் முறையிட... நாம் அவரிடம் பேசினோம். “"ஆமா, ஒரு பத்து பெண் ஊழியர்கள் வந்து, சந்தனக் காளை விவகாரத்தைச் சொன்னாங்க. விசாரிச்சிக் கிட்டிருக்கோம்''’என்றார்.
நம்மிடம் சந்தனக்காளை, "சரியா வேலை பார்க்கலைன்னு ரெண்டு பெண் ஊழியர்களுக்கு மெமோ கொடுத்தேன். பாலியல் புகார்ல என்னை மாட்டிவிட்டாங்க. இன்னும் ரெண்டு வருஷத்துல ரிட்டயர்டாகப் போறேன். நான் அந்த மாதிரி தப்பு பண்ணுவேனா? விசாரணைல பெண் ஊழியர்கள் மீதுதான் தப்புன்னு தெரிஞ்சது. அதனால, எனக்கு ப்ரமோஷன் தந்து, விருதுநகர் நகராட்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணிருக்காங்க''’என்றார் கூலாக.
பெண் ஊழியர்கள் தரப்பிலோ, "மேயர் ஒரு பெண்ணாக இருந்தும், சந்தனக்காளை விவகாரத்தில் எங்களுக்கு சரியான நியாயம் கிடைக்கல''’என்றார்கள் வருத்தத்துடன்.
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி விளக்கமளித்தார். "எதற்காகவும் நான் பணம் வாங்குறதில்ல. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. உங்களுக்குக் கிடைத்திருப்பது தவறான தகவல். 120 பேர் துப்புரவுப் பணியில் ஈடுபடறாங்க. சம்பளமெல்லாம் அவரவர் வங்கிக் கணக்குக்கு போய்விடும். உங்களுக்கு வந்த புகாரை நானும் செக் பண்ணுறேன்''’என்று முடித்துக்கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் ஒன்றிணைந்து ஓரணியாகச் செயல்பட்டு மக்களுக்கான பணி களைச் செய்திட வேண்டும். மக்களுக்கு மிகச் சிறிய நன்மையைச் செய்தாலும், அது பெரிய பேரை வாங்கித்தரும். சிறிய தவறு செய்தாலும், அது பெயரைக் கெடுத்து விடும்’என்று அறிவுறுத்தி யிருக்கிறார்.
தவறுகளைக் களைந்து, தன்னைச் சீர்படுத்திக்கொள்ளுமா சிவகாசி மாநகராட்சி?
____________________________
கொடுப்போமே தவிர வாங்கமாட்டோம்!” -பெர்சன்டேஜ் குற்றச்சாட்டை மறுக்கும் எம்.எல்.ஏ!
இதுவும் சிவகாசி மாநகராட்சி டென்டர் சம்பந்தப்பட்ட விவகாரம்தான்.
சிவகாசி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் 2021-2022ன் கீழ், வடிகாலுடன் கூடிய தார்ச்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாமன்ற அனுமதியுடன் டெண்டர் கோரப்பட்டது. பரந்து விரிந்த சிவகாசி தொகுதியில், திருத்தங்கல் பகுதிக்கு மட்டும், கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்பாராஜ் என்ற ஒப்பந்தகாரர், 8 தெருக்களில் நடக்க விருக்கும் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி குறைவாகத் தந்துள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். சொல்லிவைத்தாற்போல் கிட்டத்தட்ட ஒரே விகிதத்தில், மற்றொரு ஒப்பந்தக்காரரான மதுரையைச் சேர்ந்த கண்ணனின் ஒப்பந்தப்புள்ளியிலிருந்து குறைவான மதிப்பீட்டுத் தொகையைக் குறிப்பிட்டுள்ளார் சுப்பாராஜ். இந்த ஒப்பந்தப்புள்ளியானது, முன்கூட்டியே முழுக்க முழுக்க செட்-அப் செய்யப்பட்டது என ஒப்பந்தக்காரர் கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கு 20 சதவீதம் கமிஷனாக, சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகனுக்கு ரூ.40 லட்சம் தரப்பட்டுள்ளதாகச் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
நாம் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகனைத் தொடர்புகொண்டோம்.
"அவங்க சொல்லுறது, இவங்க சொல்லுறதெல்லாம் எனக்குத் தெரியாது. திருத்தங்கல்லும் சிவகாசி கார்ப்பரேஷன்ல தான் இருக்கு. எல்லா மக்களும் எனக்கு ஒண்ணுதான். நான் கான்ட்ராக்ட் விடல. எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல. எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீட்டுல அதை நான் கொடுக்கிறேன். அந்தந்த கார்ப்பரேஷன்ல உள்ள டெண்டர் சம்பிரதாயங்களை அவங்கதான் பார்த்துக்குவாங்க. இதிலெல்லாம் தனிப்பட்ட முறையில் நான் கவனம் செலுத்துறது இல்ல. அந்தமாதிரி பெர்சன் டேஜ் பணம் எனக்கு தேவையே இல்ல. நாங்க கொடுக்கிற இடத்துலதான் இருக்கோம். எங்க அப்பா (ஏ.எம்.எஸ். கணேசன் - முன்னாள் சிவகாசி நகர்மன்றத் தலைவர்) வாங்குற இடத்துல எங்கள இருக்க வைக்கல''’என்றார்.