நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வீழ்த்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், நாடாளுமன்றத் தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி யிருக்கிறார் பிரதமர் மோடி. இந்த கூட்டம் 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது.
நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டம் முடிந்து 6 மாதங்களுக்குப் பிறகே அடுத்த கூட்டம் அல்லது சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண் டும் என நாடாளுமன்ற விதிகள் சொல்லப்பட்டாலும், அசாதாரண மான சூழலில் சிறப்புக் கூட்டம் கூட்டுவதற்கு அனுமதிக்கப்படு கிறது. அந்த வகையில் நாடாளு மன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாதமே கடந்த நிலையில், சிறப்புக் கூட்டம் நடப்பதுதான் எதிர்க்கட்சிகளை அதிர வைத்திருக்கின்றன. எந்த ஒரு அசாதாரண சூழலும் நாட்டில் இல்லாதபோது சிறப்புக் கூட்டத்துக்கு அவசியம் என்ன? என்பதுதான் எதிர்க்கட்சிகளின் அதிர்ச்சிக்கு காரணம். எப்படி இருந்தாலும் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சவால்தான் என்கிறார்கள்.
19-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் இந்த சிறப்புக் கூட்டத்தில் பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது மோடி அரசு. குறிப்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை நியமிப்பது, பத்திரிகைகள் மற்றும் இதழ்கள் பதிவு செய்வது, வழக்கறிஞர்கள் நியமனம் உள்ளிட்ட சட்டத் திருத்த மசோதாக்கள் விவாதங்களுக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றன.
இந்த சிறப்புக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய மசோதாக்களை சத்தமின்றி நிறைவேற்ற மோடி அரசு திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கும் நிலையில், சர்ச்சை மசோதாக்களை சூழல்களுக்கேற்ப ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதுகுறித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியை எதிர்க்கத் துணிச்சல் இல்லாத பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற சட்ட மசோதாவை கொண்டுவரலாம். ஆனால், உறுதியாக வெளிப்படையாக, நேர்மையாக இதனை பா.ஜ.க. வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அதனை கடுமையாக எதிர்க்கவேண்டும் என இந்தியா கூட்டணி முடிவு செய்திருக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்துருவை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் ஆலோசனைக் கூட்டமே 23-ந்தேதிதான் நடக்கிறது. பல கட்ட ஆய்வுகளை நடத்திய பிறகே அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும். குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படாத போது, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவர மோடி துணியமாட்டார் என இந்தியா கூட்டணியின் தலைவர்கள் நினைக்கின்றனர்.
அதேசமயம், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கும் இந்தாண்டு டிசம்பர் மாதத் திற்குள் தேர்தலை நடத்தவேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையாக இருப்பதால் இந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோற்றுப்போக வாய்ப்புகள் அதிகம். மோடிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உளவுத்துறை அறிக்கைகளும் இதனைத்தான் சொல்கிறதாம். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அடி வாங்கினால் நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என உணர்ந்து, அந்த 5 மாநில தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து நடத்துவதற்கான சட்ட மசோதாவை கொண்டு வர பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி கொண்டுவந்தால் அதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும். மேலும், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றும் மசோதாவும் கொண்டு வரப்படலாம்'' என்கிறார்கள் திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள்.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை எதிர்கொள்வது குறித்து தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது, "இந்த கூட்டத்தொடரில் சனாதனம் பற்றி பா.ஜ.க. பேசினால் அதற்கு சரியான முறையில் பதிலளிக்கவேண்டும். கவனமாக கையாளுங்கள்'' என்று அறிவுறுத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலை ஜனவரி 27-ந்தேதி மிக விமர்சையாக திறக்க பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் திட்டமிட்டுள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் 125 பேரை இந்தியாவுக்கு அழைக்கத் திட்டமிட்டுள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவில் உலகத் தலைவர்களை கலந்துகொள்ள வைத்து இந்தியாவை ஆன்மீக பூமியாக உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்பதே உண்மையான நோக்கம்.
அதனால் ராமர் கோவில் திறப்பு குறித்தும் இந்த கூட்டத்தொடரில் பதிவு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன. ஆக, நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் கூட்டப்படும் சிறப்புக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி எந்தமாதிரியான அதிர்ச்சியைத் தரப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறது இந்தியா கூட்டணி!
______
இறுதிச் சுற்று!
இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின் முதல்நாளில் (18-ந் தேதி) பேசிய பிரதமர் மோடி, "சுதந்திர போராட்டத்தின் சின்னமாக பழைய நாடாளுமன்றம் திகழ்கிறது. சுதந்திர இந்தியாவின் பல்வேறு பாரம்பரியங்களின் நினைவாக பழைய நாடாளுமன்றம் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன. மேலும், சுய தன்னிறைவு பெற்ற நாடாக மாறிவருகிறது நம் இந்தியா. அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ஏ-20 மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது. ஜி-20 உச்சி மாநாட்டில் தெற்குலகின் குரல்களை ஓங்கி ஒலித்தோம். பல்வேறு நிகழ்வுகளின் மூலம் இந்தியா முன்னேற்ற பாதையில் நடைபோட்டு வருகிறது. எந்தவித இடையூறுமின்றி இந்தியா தனது குறிக்கோளை அடையும். இந்தியாவை 2047-க்குள் வளர்ச்சி யடைந்த தேசமாக நாம் உருவாக்கிட வேண்டும்" என்றெல்லாம் சுட்டிக்காட்டினார்.
-இளையர்