மிழக அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த வாரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆரணி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மேடையில் பேசிய மாவட்ட ஆவின் சேர்மனும், ஆரணி நகரமன்றத் துணைத்தலைவரு மான பாரி பி.பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவை ஒருமை யில் அவன், இவன் என விமர்சித் துப் பேசினார். இந்த பேச்சைக் கேட்ட ஆரணி நகர தி.மு.க.வினர், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர். அங்குவந்த தொகுதி எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரன், "இங்க எதுக்கு வந்து பிரச்சனை செய்யறிங்க? பேசினவன், அவனோட கடையில இருக்கான். அங்க போங்க'' எனச் சொல்ல, தி.மு.க.வினரும் பாரி பி.பாபுவின் ஸ்வீட் ஸ்டாலை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். உடனே அங்கிருந்து கிளம்பி எம்.எல்.ஏ. அலுவலகம் வந்த பாரிபாபு, "அவுங்கள எதுக்கு என் கடை யாண்ட அனுப்புனீங்க?'' என்று எம்.எல்.ஏ.விடம் கேட்டார். "பேசுனது நீ, அவுங்க என் ஆபீஸ முற்றுகையிடறாங்க. நீ பேசுனதுக்கு நான் பதில் சொல்லணுமா?'' எனக் கேட்க, பிரச்சினை பெரியதானது.

aa

இப்பிரச்சனை தொடர்பாக, முன்னாள் அமைச்சரான திரு வண்ணாமலை தெற்கு மா.செ. அக்ரி .கிருஷ்ண மூர்த்தி எம்.எம்.ஏ. தலைமையில், வடக்கு மா.செ. தூசி.மோகன், பாரி பாபு உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், சென்னையில் இ.பி.எஸ்.ஸை சந்தித்து, "பாரி பாபு மேடையில் பேசியதில் எந்தத் தவறுமில்லை. மோசமாகவும் பேசிடவில்லை. இந்த மாவட்டத்துக்கு வேலு எதுவும் செய்யவில்லை என்றே பேசினார். இந்த விவகாரத்தில் கழக அமைப்புச்செயலாளர் சேவூர்.ராமச் சந்திரன் எம்.எல்.ஏ., தன்மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்துகொள்கிறார். அமைச்சர் வேலு சொல்வதையே செய்கிறார்'' என புகாரை வாசித்து விட்டு வந்தனர்.

இதுபற்றி அ.தி.மு.க. நிர்வாகிகள் நம்மிடம், "சேவூர்.ராமச்சந்திரன் அமைச்சராக இருந்தபோது அவருடனே வலம்வந்த பாரி பாபு, அமைச்சருக்கு தெரியாமல் பல டீலிங்குகளை நடத்தி கோடிகளில் சம்பாதித்தார். சட்டமன்றத் தேர்தலின்போது அமைச்சராயிருந்த ராமச்சந்திரனுக்குத்தான் மீண்டும் சீட் என்பது உறுதியான பின்பும், தனக்கு சீட் வாங்க லாபி செய்ததால் எம்.எல்.ஏ.வானதும் பாரி பாபுவை ஓரங்கட்டினார் ராமச்சந்திரன். நகரமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணி மெஜாரிட்டியாக இருந்ததை உடைத்து, நகரமன்ற வைஸ்சேர்மனாகிவிட்டார் பாபு. அடுத்ததாக பாரி பாபு, ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பி. சீட் வாங்க முயற்சிக்கிறார். இதற்காகத் தன்னை அரசியலில் வளர்த்துக்கொள்ள என்ன செய்யலாம் என்கிற ஆலோசனையை அடிக்கடி நடத்துகிறார். ஆரணி தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் சாதி ரீதியாக பாரி பாபுவுக்கு பலரும் நெருக்கம். தி.மு.க. நிர்வாகிகள், பாபுவிடம் பணம் வாங்கிக்கொண்டு நகரமன்ற மறைமுகத் தேர்தலில் வைஸ்சேர்மனாக தேர்வுசெய்ய வைத்தார்கள்.

Advertisment

ddபாரி பாபுவை ரகசியமாகச் சந்திக்கும் ஆரணி தி.மு.க. நிர்வாகிகள், "தி.மு.க. வடக்கு மா.செ. தரணிவேந்தனை கட்சியில் டம்மியாவே வச்சிருக் காங்க. வடக்கு மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி எது நடத்துவதாகயிருந்தாலும் அமைச்சர் வேலுதான் முடிவு செய்வார். நாங்க எது கேட்டாலும் தரணியும் அமைச்சரையே கை காட்டறார்' எனப் புலம்புவார்கள். முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களே விமர்சிக்கத் தயங்கும் அமைச்சர் வேலுவை நீங்கள் காட்டமாகப் பேசினால், உங்களை மாவட்டம் முழுக்க அறிவார்கள், தலைமையிலும் செல்வாக்கு கிடைக்கும் என, அவரது ஆலோசகர்கள் சொன்னதன் அடிப்படையிலேயே வேலுவை ஹரி பாபு ஒருமையில் திட்டிப் பேசியிருக்கிறார். இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் சைலண்டாக இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, அவர் தி.மு.க.வுடன் ராசியாகிவிட்டார் என்பதை வெளிப்படையாகப் போட்டு உடைத்ததோடு, அவரை ஆரணி அரசியலிலிருந்து காலி செய்ய பாபு களமிறங்கியுள்ளார்.

"அ.தி.மு.க. வடக்கு மா.செ. பதவியை எனக்கு தாருங்கள்' என இ.பி.எஸ்ஸிடம் முன்பு கோரிக்கை வைத்தார் ராமச்சந்திரன். தனது மா.செ. பதவியைப் பறிக்க நினைக்கும் ராமச்சந்திரனுக்கு எதிராக நிற்கிறார் சிட்டிங் மா.செ. தூசி.மோகன். அமைச்சராக இருந்தபோது டம்மியாக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தியுடன் மோதினார் ராமச்சந்திரன். இப்போது இ.பி.எஸ்ஸிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ராமச்சந்திரனை பழிவாங்க நினைக்கிறார் அக்ரி. இவர்கள் அனைவரும் இணைந்து ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக அக்ரி தலைமையில் ஒன்றிணைந்துள்ளார்கள்'' என்கிறார்கள்.

நாம் இதுகுறித்து பாரி பாபுவிடம் கேட்டபோது, "எனக்கும் ராமச்சந்திரனுக்கும் எந்த மோதலுமில்லை. இந்த விவகாரத்தில் எனக்கு எதிராக அவர் இல்லை. நாங்கள் தலைமையை சந்திக்கச் செல்லும்போது அவர் தாமதமாக வந்தார். அதன்பின் அவர்கள் சந்தித்துவிட்டு வந்தார்கள்'' என்றார்.

Advertisment

as

சேவூர்.ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "தலைவர் இ.பி.எஸ்ஸுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்ல அவரது வீட்டுக்கு சென்றபோதுதான் அவர்கள் சந்தித்தார்கள் என்பதே எனக்குத் தெரியும். தலைமையை சந்திக்க அவர்கள் என்னை அழைக்கவில்லை. நான் ஆளும்கட்சியை விமர்சித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன், சிலர் என்மீது அவதூறு பரப்புகிறார்கள்'' என்றார்.