னிமனித இடைவெளி உத்தரவை தொடர்ந்து காற்றில் பறக்கவிட்ட அமைச்சரின் அலட்சியப்போக்கினால், அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். இதனால், ஒரு மாவட்டமே பதற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் தனிமனித இடைவெளியின்றி தொடர்ந்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, செய்தியாளர்களை சந்தித்து வரும் அமைச்சர் காமராஜ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உணவு அமைச்சர் காமராஜ், மற்றும் அவரது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், செய்தியாளர்கள் மற்றும் அதிமுகவினர், பொதுமக்கள் அனைவரையும் கண்டறிந்து கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என சமுக ஆர்வலர்களும், அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

cc

Advertisment

இது குறித்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்கள், ஆட்சியரக அதிகாரிகள் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, ""கொரோனா தொற்றால் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உணவு அமைச்சர் காமராஜ் மட்டும் எந்த ஒரு சலனமும் இல்லாமல், நோய்தொற்று என்பதே இல்லை என்பதுபோல தினசரி நான்கு ஐந்து நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் அதிமுக வினரை கூட்டிவைத்த நிகழ்வு தொடர்கதையாகவே இருந்தது. ஊரடங்கு கடுமையாக இருக்கும் சமயத்தில் அரசு வழங்கிய நிவாரணம், ரேசன் பொருட்களை ஒவ்வொரு இடத்திற்கும் அமைச்சரே தன் ஆட்களோடு நேரடியாக சென்று தன் கையால் வழங்கி துவக்கிவைத்தார். அப்போது பத்திரிகையாளர்களும், அதிகாரிகளும் மறைமுகமாகவே கொரோனா தொற்றை அமைச்சர் காமராஜிடம் எடுத்துக்கூறினர். அதோடு அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் மூலமாகவும் அவரது காதில் கொரோனா குறித்தான அச்சத்தை வெளிப்படுத்தினர்.

நக்கீரன் இதழ் மற்றும் நக்கீரன் இணையதளத்திலும் "கொரோனாவிலும் விளம்பரம் தேடும் அமைச்சர்; அச்சத்தில் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள்' என செய்தியும் வெளியிட்டீர்கள். அந்த செய்திக்குப் பிறகு இரண்டு நாள் மட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

அமைச்சர் பொறுப்பில் இருந்தும் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததன் விளைவு, அவரது நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொண்ட பத்திரிகையாளர் ஒருவருக்கு தொற்று வந்துவிட்டது. இதற்கு முழு பொறுப்பு அமைச்சர் காமராஜ்தான். முதலில் அவர் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ளவேண்டும். தன்னுடை விளம்பரத்திற்காக பத்திரிக்கையாளர்களையும், அதிகாரிகளையும் கொரோனாவிற்கு பலி கொடுக்க நினைக்கக்கூடாது. இன்னும் அதிகாரிகளுக்கு, அதிமுகவினருக்கு எத்தனை பேருக்கு கொரோனா இருக்கிறது என்பது தெரியவில்லை. முதலில் அமைச்சருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர் உடனடியாக செய்யவேண்டும்'' என்கிறார்கள்.

Advertisment

இதற்கிடையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரையும் மருத்துவக்கல்லூரி முதல்வர், கொரோனா பரிசோதனைக்காக அழைத்திருக்கிறார். இதனால் மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

-க.செல்வகுமார்