அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மெகா சர்வே மேற்கொண்டது நக்கீரன். அ.தி.மு.க. அமைச்சர்களின் அதிகார பலம் + பண பலம் + மக்களுக்கான செயல்பாடு இவற்றை எதிர்கொள்ளும் வகையில் எதிரணியினர் குறிப்பாக தி.மு.க. கூட்டணியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் வலுவாக உள்ளாரா என்ற ஒற்றைக் கேள்வியை முன்வைத்து அதற்கான விரிவான விடையை தொகுதிவாசிகளான பொதுமக்களிடம் கேட்டோம்.
அதனடிப்படையில், அமைச்சர்கள் தொகுதிகளின் கள நிலவரம் இதோ:
எடப்பாடியில் களமிறங்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்கொள்ளும் அளவுக்கு பலத்துடன் தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமார் இருப்பாரா? என மக்களிடம் கேட்டோம்.
சம்பத்குமார் எடப்பாடியை விட பலவீனமாக இருக்கிறார் என 60 சதவிகித மக்கள் தெரிவிக்கிறார்கள். "சம்பத்குமார் பொருளாதார ரீதியாக எடப்பாடியுடன் மோதுவதற்கு பலமில்லாதவர். எடப்பாடி தனது தொகுதியில் 90 சதவிகித தேவைகளை நிறை வேற்றிய நிலையில்... பண பலத்துடன் நிற்கும் எடப் பாடியை சம்பத்குமார் வெல்வது கடினம்' என்கிறார்கள் எடப்பாடி மக்கள்.
ராசிபுரத்தில் அமைச்சர் சரோஜாவை எதிர்கொள்கிறார் தி.மு.க.வைச் சேர்ந்த மதிவேந்தன். ராசிபுரத்தில் ஆறு மாதத்திற்கு முன்பே தேர்தலுக்கான தயாரிப்பு வேலைகளை அமைச்சர் சரோஜா செய்து முடித்துவிட்டார். ஆனால் அதற்கு முன்பு தொகுதி பக்கம் வரவேயில்லை. மதிவேந்தனின் சமூக மக்கள் நிறைந்திருக்கும் நிலையில் போட்டி கடுமையாக உள்ளது.
ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்த்து நிற்கும் தி.மு.க. வேட்பாளரான ஐட்ரீம்ஸ் மூர்த்தி, ஜெயக்குமாரை எதிர்கொள்ளும் பலத்துடன் இருக்கிறார் என 63 சதவிகிதம் பேர் தெரிவிக்கிறார்கள். அமைச்சர் செயல்பாடுகள் சரியில்லை என பொதுவான விமர்சனம் எழுந் தாலும் சென்னை நகர மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சிந்திப்பது அமைச்சருக்கு எதிராக வேலை செய்கிறது.
மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமினை எதிர்த்து களம் காணும் தி.மு.க. வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வலுவாக இருக்கிறார் என 70 சதவிகிதம் மக்கள் சொல்கிறார்கள். "பெஞ்சமின் பணபலம் மிக்கவர். ஆனால் அவர் பெயரை போஸ்டரில்தான் நாங்கள் பார்த்திருக்கிறோம்' என பொது மக்கள் கூறுவது பெஞ்சமினுக்கு பெரிய மைனஸாகவே அமைந்துள்ளது.
ஆவடி தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜனை எதிர்த்து களம் காணும் தி.மு.க. வேட்பாளரான ஆவடி நாசர் வலுவாக இருக்கிறார் என 70 சதவிகித மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மா.செ.வான நாசர், பணபலத்திலும் வல்லவர். கடந்தமுறை மிகக்குறைந்த வாக்குகளில் வென்ற பாண்டியராஜன் "அமைச்சராக இருந்தாலும் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை' என்கிற குரல்கள் தொகுதிமுழுவதும் கேட்கிறது.
ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வீரமணியை எதிர்த்துக் களம் காணும் தி.மு.க.வின் தேவராஜ், அமைச்சரை எதிர்கொள்ளும் பலத்துடன் இருக்கிறாரா? எனக் கேட்டால் பாதிக்குப் பாதிதான் ஆம் என்கிறார்கள். வீரமணியின் பலம் பத்து வருட அமைச்சர் பதவி, பதினைந்து வருட மா.செ. மற்றும் பணபலம். தி.மு.க. வேட்பாளர் தேவராஜும் மா.செ.தான். அவருக்கு "தி.மு.க. வினர் உயிரைக் கொடுத்து வேலை செய்வார்கள்' என்பது தான் தேவராஜின் பலம். போட்டி கடுமை.
ஆரணியில் போட்டி யிடும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு எதிராக போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அன்பழகன், அமைச்சரை எதிர்கொள்ளும் பலத் துடன் இருக்கிறாரா? என கேட்டால் 54 சதவிகிதம் பேர் ஆம் என்கிறார்கள். அமைச்ச ருக்கு மேற்கு ஆரணி ஒன்றியத்தில் பா.ம.க.வின் பலம் கை கொடுக்கிறது. நகரத்தில் உள்ள அமைச்சரின் சமூகப் பிரிவான முதலியார்கள் கை கொடுக்கிறார்கள். கிழக்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள வன்னி யர்கள் வன்னியரான அன்பழகனுக்கு கை கொடுக்கிறார்கள் என்பதே கள நிலவரம்.
கோபிச்செட்டிப்பாளை யத்தில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக களம் காணும் மணிமாறன், அமைச்சரை எதிர்நோக்கும் பலத்துடன் இருக்கிறாரா? என்றால் 50% பேர் இருக்கிறார் என்கிறார்கள். செங்ஸை பொறுத்தவரையில் எட்டுமுறை எம்.எல்.ஏ.வாக இருக்காரு. அமைச்சரா இருக்கிறாரு. ஆனா தொகுதிக்கு வாரம் இரண்டு நாள் வருவாரு. மணிமாறனின் அப்பாவான முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி. வெங்கிடுவின் செல்வாக்கு, அவருக்கு கை கொடுத்து போட்டியை கடுமையாக்கியிருக்கிறது.
பவானி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கருப்பணனை எதிர்த்து களம் காணும் கே.பி.துரைராஜ், அமைச்சரை எதிர்க்கும் பலத்துடன் இருக்கிறாரா? என கேட்டால், 45 சதவிகிதம் பேர்தான் ஆம் என்கிறார்கள். அதனால் போட்டி கடுமையாகியிருக்கிறது. சாதாரணமாக இருந்த கருப்பணன், கல்விக்கடை அதிபதியானது, தொகுதி மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது. பணபலம் அவரை முன்னே நிறுத்தி யிருக்கிறது. கட்சிப் பலத்தோடு துரைராஜ் போராடுகிறார்.
குமாரபாளையத்தில் களம்காணும் அமைச்சர் தங்கமணியை எதிர்த்துப் போட்டியிடும் வெங்கடாசலம், அமைச்சரை எதிர்க்கும் பலத்துடன் இருக்கிறாரா? என கேட்டால் பொதுமக்களில் 47 சதவிகிதம் பேர் ஆம் என் கிறார்கள். சாதாரண ஒ.செ.வான வெங்கடாசலத்தின் அறிமுகக் குறைவுதான் மைனஸ். அமைச்சரின் மக்கள் அறிமுகம் பெரிய ப்ளஸ். ஆனால் தொகுதியில் உள்ள மைக்ரோ பைனான்ஸ் பிரச்சினை கள்ள ஒயின்ஷாப் கடைகள் அமைச்சருக்கு எதிராக உள்ளது.
கரூர் தொகுதியில் களம் காணும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக களம் காணும் செந்தில்பாலாஜி, அமைச்சரை எதிர்க்கும் பலத்துடன் இருக்கிறாரா? என கேட்டால், 51 சதவிகிதம் பேர் ஆம் என்கிறார்கள். விடாக் கண்டன் கொடாக்கண்டன் என கடுமையான மோதல் வெளிப்படுகிறது. அ.தி.மு.க., தி.மு.க. கடுமையான மோதல் நடைபெறும் இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பஸ் ஸ்டாண்ட் கட்டித்தராத அதிருப்தி நிலவுகிறது. பண விநியோகத்தில் சரிசமமாக மோதும் இருவரில் செந்தில்பாலாஜிக்கு கட்சி பலம் கூடுதல் பலத்தைத் தருகிறது.
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரான கார்த்திகேய சிவசேனாதிபதி, பலத்துடன் மோதுகிறாரா என்றால் ஆம் என்கிறார்கள் 53 சதவிகிதம் பேர். தி.மு.க. வேட்பாளர் பாரம்பரிய மிக்கவர். பொள்ளாச்சி விவகாரத்துக்காக வழக்குப் போட்டவர். ஜல்லிக்கட்டுப் போராளி என்பது சேனாதி பதியின் பலம். பெரிய பணமூட்டை, வேலுமணியின் பலம். போட்டி கடுமையாக இருக்கிறது.
உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராதாகிருஷ்ண னுக்கு எதிராக களம் காணும் காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசுக்கு அமைச்சரை எதிர்கொள்ளும் பலம் இருக்கிறதா? என்றால் ஆம் என 40 சதவிகிதம் பேர்தான் சொல்கிறார்கள். "தொகுதியில் பெரிய சிக்கலாக இருந்த பாதாளச்சாக்கடைத் திட்டத்தை முடித்து வைத்தது, நலத்திட்ட உதவிகள், கேபிள் இணைப்பு தந்தது போன்றவை அமைச்சரை முந்த வைத்துள்ளது' என்கிறார்கள் மக்கள்.
விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிராக போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் லட்சுமணனுக்கு அமைச்சரை எதிர்கொள்ளும் பலம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு, இல்லை என 67 சதவிகிதம் பேர் சொல்கிறார்கள். தி.மு.க.வின் பொன்முடி போட்டியிட்டிருந்தால் நிலைமை வேறு. லட்சுமணனை கிராமப்புற மக்களுக்குத் தெரியாது. அ.தி.மு.க. ஆட்சி அவலங்கள் சண்முகத்துக்கு எதிராக உள்ளது. நலத்திட்ட உதவிகள், காவல்துறை செயல்பாடு போன்றவையோடு பணபலமும் கூட்டணியும் அமைச்சருக்கு சாதகமாக இருக்கிறது.
கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அய்யப்பனுக்கு, அமைச்சரை எதிர்கொள்ளும் பலம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு 85 சதவிகிதம் பேர் ஆம் என பதிலளிக்கிறார்கள். அதிகமான மக்கள் தொடர்பு உள்ளவர் அய்யப்பன். அமைச்சரோ, "பத்துவருடம் எம்.எல்.ஏ. தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளவர், மக்கள் தொடர்பு குறைவு, சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாதவர், கோஷ்டிப்பூசல்...' இவை சம்பத்திற்கு எதிராக இருக்கிறது என்கிறார்கள் மக்கள்.
திருச்சி கிழக்கில் போட்டியிடும் அமைச்சர் வெல்லமண்டி நடராசனுக்கு எதிராகப் போட்டியிடும் தி.மு.க.வின் இனிகோ இருதய ராஜுக்கு, அமைச்சரை எதிர்கொள்ளும் பலம் இருக்கிறதா? என்கிற கேள்விக்கு, 90 சதவிகித மக்கள் ஆம் என்கிறார்கள். அமைச்சரை, மக்கள் வெறுக்கிறார்கள். "பெரிதாக எதுவும் செய்யவில்லை' என்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் ஆதரவு, உதயசூரியன் சின்னம், மைனாரிட்டி மக்கள் ஆதரவு போன்றவை இனிகோவை முந்த வைத்திருக்கிறது.
விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பழனியப்பனுக்கு அமைச்சரை எதிர்கொள்ளும் பலம் இருக்கிறதா? என கேட்டதற்கு, 75 சதவிகிதம் பேர் ஆம் என்கிறார்கள். அமைச்சருக்கு இணையான பலமான வேட்பாளராக பழனியப்பன் போட்டி யிடுகிறார். நலத்திட்ட உதவிகள் செய்து தொகுதி முழுவதும் நல்லபெயர் வைத்துள்ளார். தொடர்ந்து விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடும் பழனியப்பனுக்கும் விஜயபாஸ்கருக்கும் போட்டி மிகக் கடுமையாக உள்ளது. அதில் பழனியப்பன் கையே ஓங்கியுள்ளது.
மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜுவை எதிர்த்து களம்காணும் சின்னம்மாவுக்கு அமைச்சரை எதிர்க்கும் பலம் உள்ளதா? என்கிற கேள்விக்கு 50 சதவிகிதம் இருக்கிறது என்கிறார்கள் மக்கள்.
தி.மு.க.வினர் ஒத்துழைப்பு சரியாக இல்லை. அ.ம.மு.க.வின் ராஜலிங்கம் செல்லூர்ராஜுவுக்கு கிலி கொடுக்கிறார். சின்னம்மா உள்ளூர்க்காரர் என்பது பலம். ஆனால் பண பலம் செல்லூர் ராஜுவுக்கு பலமாக உள்ளது. தபால் ஓட்டு, இலவச விநியோகம் ஆகியவை தூள் பறக்கிறது.
திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக களம் காணும் தி.மு.க.வின் புறநகர் மா.செ.வான மணிமாறனுக்கு, அமைச்சûரை எதிர்க்கும் பலம் உள்ளதா என்கிற கேள்விக்கு, 70 சதவிகிதம் இருக்கிறது என்கிறார்கள் மக்கள். அ.ம.மு.க.வின் ஆதிநாராயணன், ஓட்டைப் பிரிக்கிறார். அமைச்சர் வகை தொகை இல்லாமல் பணம் கொடுத்தாலும், அவருக்கு எதிராக நடந்த பஞ்சாயத்துகள் அ.தி.மு.க. ஓட்டை சிதைக்கிறது.
திண்டுக்கல் தொகுதியில் களம்காணும் சீனிவாசனுக்கு எதிராகக் களம்காணும் மார்க்சிஸ்ட் கட்சியின் பாண்டிக்கு அமைச்சரை எதிர்க்கும் பலம் உள்ளதா? என்கிற கேள்விக்கு 40 சதவிகிதம் பேர்தான் ஆம் என்கிறார்கள். இந்தத் தொகுதியில் மூன்றுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த தோழர் பாலபாரதி நிற்காததும், பாண்டிக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாததும் பெரிய மைனஸ் பாயின்ட்டுகளாக உள்ளது.
நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் காமராஜுக்கு எதிராகக் களம் காணும் ஜோதிராமனுக்கு, அமைச்சரை எதிர்க்கும் பலம் உள்ளதா? என்கிற கேள்விக்கு, இல்லை என 75 சதவிகிதம் பேர் கருத்துச் சொல்கிறார்கள். மிருக பலத்துடன் இருக்கும் காமராஜுடன் தி.மு.க. மா.செ. கலைவாணன் மோதுவார் என்கிற எதிர்பார்ப்புக்கு மாறாக ஒ.செ. ஜோதிராமன் களம்காண்பது தி.மு.க.வினரை சோர்வடைய வைத்துள்ளது.
வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஓ.எஸ். மணியனை எதிர்த்து களம்காணும் தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினத்திற்கு அமைச்சரை எதிர்க்கும் பலம் உள்ளதா? என்கிற கேள்விக்கு 69 சதவிகிதம் பேர் ஆம் என பதிலளித்துள்ளார்கள். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியனை, வன்னியரான வேதரத்தினம் சம பலத்துடன் எதிர்க்கிறார். போட்டி மிகக்கடுமையாக இருக்கிறது.
பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அன்பழகனை எதிர்த்து தி.மு.க. சார்பாக நிற்கும் பி.கே.முருகனுக்கு அமைச்சரை எதிர்க்கும் பலம் உள்ளதா? என்கிற கேள்விக்கு, 65 சதவிகிதம் பேர் ஆம் என்கிறார்கள். அமைச்சருக்கு சமமான பண பலத்துடன் உள்ளார் முருகன். அமைச்சருக்கு எதிராக அ.தி. மு.க.வில் உள்ளடி வேலைகள் வேகமாக நடப்பதால் அமைச்சர் சிக்கலில் உள்ளார்.
சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமிக்கு எதிராக களம்காணும் தி.மு.க. வேட்பாளர் ராஜாவுக்கு அமைச்சரை எதிர்க்கும் பலம் உள்ளதா? என்கிற கேள்விக்கு, 60 சதவிகிதம் பேர் ஆம் என்கிறார்கள்.
ராஜலட்சுமி, பணத்தை நம்பி நிற்கிறார். ராஜாவுக்கு கட்சிதான் பலம். அமைச்சராக இருந்த காலத்தில் அவர்தான் வளர்ந்திருக்கிறார். தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என அதிருப்தியே நிலவுகிறது.
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்ராஜுவை எதிர்த்து டி.டி.வி. தினகரனும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சீனிவாசனும் போட்டியிடுகிறார்கள். சீனிவாசனுக்கு அமைச்சரை எதிர்க்கும் பலம் இருக்கிறதா? என கேட்டால் 50 சதவிகிதம் இருக்கிறது. மக்களுக்காக போராடுவது சீனிவாசனின் பலம். ஜாதி ஓட்டுகள் அதிகம் இருப்பது டி.டி.வி.யின் பலம். அமைச்சர் பணத்தை நம்பி போட்டியிடுகிறார். மும்முனைப் போட்டியாக களம் சூடாக இருக்கிறது.
ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக நிற்கும் தி.மு.க. வேட்பாளர் தங்கபாண்டியனுக்கு அமைச்சரை எதிர்க்கும் பலம் உள்ளதா எனக் கேட்டால் 60 சதவிகிதம் பேர் இல்லை என்கிறார்கள். ராஜேந்திர பாலாஜி செலவழிப்பார். தங்கபாண்டியன் உள்ளூர்க்காரர். அமைச்சர் மத உணர்வை நம்பி போட்டியிடுகிறார். தொகுதியில் உள்ள சாதி உணர்வு அமைச்சருக்கு எதிராக உள்ளது.
போடி தொகுதியில் போட்டியிடுகிறார் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவரை எதிர்த்து களம் காணும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ்.ஸை எதிர்க்கும் பலம் உள்ளதா என்றால் 67 சதவிகிதம் பேர் ஆம் என்கிறார்கள். "அ.தி.மு.க.வில் இருக்கும் போதே ஓ.பி.எஸ்.ஸுடன் மோதியவர், பணபலம் மிக்க டி.டி.வி. யையே தூக்கி எறிந்தவர்...' என்பது தங்கத்தின் பலம். தொகுதி மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யாதது ஓ.பி.எஸ்.ஸின் பலவீனம்.
அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் பலவற்றில் எதிர்ப்பலை தெரிகிறது. சில தொகுதிகளில் அமைச்சர்களின் சொந்த செல்வாக்கு, அணுகுமுறை, திட்டங்கள், தி.மு.க. தரப்பின் பலவீனமான வேட்பாளர்கள் இவற்றால் முன்னிலை பெறுகிறார்கள். தேர்தல் நெருங்கும் போது சவால்களும் அதிகரிக்கும்.
-நக்கீரன் சர்வே டீம்
சக்தி, ராம்கி, ஜீவா, எஸ்.பி.எஸ்., பரமசிவம், பகத், ராஜா, செல்வகுமார், அருள்குமார், அண்ணல், அரவிந்த், அருண்பாண்டியன், சுந்தரபாண்டியன், இளையராஜா, மகேஷ், சேகுவேரா
தொகுப்பு: -தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ராம்குமார்,
விவேகானந்தன்