தமிழகத்தில் மிகப்பிரமாண்டமாக நடந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு அடுத்தபடியாக, சமீபத்தில் நடந்த அமைச்சர் மூர்த்தி வீட்டுத் திருமணம் பேசப்பட்டுவருகிறது.
இதற்குமுன் மதுரையில் விஜயகாந்த்- பிரேமலதா திருமணத்தில் ரசிகர் கூட்டம் நிரம்பி வழிந்தது. அடுத்து கிரானைட் அதிபர் வீட்டுத் திருமண விருந்து, ஆடம்பரத்தால் பேசு பொருளானது. அதையும் மிஞ்சியது மதுரை தமுக்கத்தில் நடந்த அழகிரி மகன் துரை தயாநிதி திருமணம். அமைச்சர் மூர்த்தி வீட்டுத் திருமணமோ…அனைத்தையும் விஞ்சிவிட்டது என்ற பொருமலைக் கிளப்பியிருக்கிறது.
மதுரை நகரில் ஆரம்பித்து, அனைத்து பட்டிதொட்டிகளில் இருந்தும் வேன்களிலும், லாரிகளிலும் இதற்காகவே இலவசமாக விடப்பட்ட மினி பஸ்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பிவந்து திருமணத்தில் பங்குபெற்றனர். திருமணத்தன்று கல்யாணக் கூட்டத்தால் மதுரையே ஸ்தம்பித்து டிராபிக்ஜாம் அளவுக்குச் சென்றது.
தமிழகத்திலேயே இதுவரை இப்படியொரு கல்யாணம் நடந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு, மதுரையில் ஒவ்வொரு தொகுதியாக அமைச்சரே நேரில்சென்றும் ஒவ்வொரு தொகுதி கட்சிப் பொறுப்பாளர்களிடம் மொத்தமாக பத்திரிகையைக் கொடுத்தும் அழைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 2 லட்சம் திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம். கடந்த இரண்டு மாதங்களாக திருமணம் நடைபெறும் இடத்தைச் சுத்தம்செய்து பந்தல் அமைக்க மட்டுமே 2 கோடிக்கு காண்ட்ராக்ட் விடப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் அலங்காரப் பந்தல், திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் வெகுநேரம் பந்திக்குக் காத்திருக் காதபடி, ஒரு நேரத்தில் 25,000 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் விருந்துப் பந்தல் என அமர்க்களப்பட்டிருக்கிறது.
தனது அமைச்சகத்தின் கீழ்வரும் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் ஒவ்வொரு மண்டல அதிகாரிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பைப் பிரித்து ஒப்படைத்துவிட்டார் அமைச்சர். பந்தல் அமைப்பது, விழா ஏற்பாடுகள், போட்டோ வீடியோவில் ஆரம்பித்து விருந்து வரை அனைத்தையும் பிரித்துக் கொடுத்து திறமையாக ஒருங்கிணைத்திருக்கிறார்.
திருமண விருந்துப் பொறுப்பு, 13 சாப்பாட்டு காண்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 5,000 ஆடுகள், 24,000 கோழிகள், டன் கணக்கில் மீன்கள் வரவழைக்கப்பட்டு, 600 சமையல்காரர்களைக் கொண்டு இரவு பகலாகச் சமைத்து தடபுடல் விருந்து பரிமாறப்பட்டிருக்கிறது. திருமணத்துக்கு முந்தைய நாளிலிருந்தே பந்தி தொடங்கி மக்கள் சாரைசாரையாக வந்து சாப்பிட, செப்டம்பர் 9-ஆம் தேதி காலையில் 1000 பேர் வட்டம், ஒன்றியம், பிரதிநிதி என்று தி.மு.க.வினருக்கு ஒரேமாதிரி வேட்டி சட்டை எடுத்துக்கொடுத்து முதல்வரை வரவேற்று அசத்தினார் அமைச்சர். மேடையேறிய ஸ்டாலின் மாலை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்திவைத்தார். “"மூர்த்தி பெரிதா,… கீர்த்தி பெரிதா என்றால் நான் மூர்த்திதான் பெரிது என்பேன். எதிலுமே மிகப் பிரம்மாண்டத்தை காட்டும் மூர்த்தி தன் மகன் திருமணத்தையும் கட்சி மாநாட்டைவிட சிறப்பாக மிகப்பிரம்மாண்டமாக நடத்திவிட்டார்''’என்று தொடங்கி மணமக்களை வாழ்த்திச் சென்றார்.
பந்தல், விருந்து மட்டுமல்லாமல், திருமணத்துக்கு வந்தவர்கள் காத்திருக்காமல் மொய் எழுத, 60 மொய் வசூலிக்கும் டீம், லேப்டாப், பணம் எண்ணும் மிஷின் சகிதம் தனித் தனி கவுண்டர்களும் பெரிய அளவிலேயே அமைக்கப்பட்டிருந்தன. வந்து குவிந்த வசூல் மட்டுமே 25 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.
இந்தப் பிரம்மாண்ட கல்யாண ஏற்பாடு களுக்கான செலவு 100 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். கட்சி வட்டாரத்திலும் அதிகாரிகள் வட்டாரத்திலும் விசாரிக்கத் தொடங்கினோம்.
உடன்பிறப்பு ஒருவர், “"விழா நடந்த இடத்தையே சமீபத்தில்தான் அண்ணன் வாங்கினார். அந்த இடம் ஜெயலலிதா கடைசியாக பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்த இடம்''’என்கிறார்.
தென்மாவட்டத்தைப் பொறுத்தவரை பவர்புல்லாக இருப்பது திண்டுக்கல் அமைச்சர் ஐ.பெரியசாமி. அவருக்கும் தலைமைக்கும் சிறிய மனக்கசப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த இடத்துக்கு வரவேண்டும் என்பது அமைச்சரின் கணக்கு, பிரம்மாண்டம் என்றால் மூர்த்திதான் தலைமைக்கு ஞாபகம் வரவேண்டும் என்ற ஆசை போன்ற வேறுபல கணக்குகளும் இதில் அடங்கும்” என்கிறார்கள் இன்னும் சிலர்.
திருமணத்திற்கு அடுத்த நாள் மதுரை வந்த அண்ணாமலையிடம், அமைச்சர் மூர்த்தியின் திருமண முழு வீடியோவையும் ஒரு பென்டிரைவில் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் பா.ஜ.க. நிர்வாகிகள். அதைப் பார்த்து அசந்து போய்த்தான், "கட்டாயம் இது போகவேண்டி யவர்கள் பார்வைக்குப் போகும். பெரும் பூகம்பம் காத்திருக்கு''’என்று பொடிவைத்துப் பேசி யிருக்கிறார்.
இந்தச் செய்தி அமைச்சர் மூர்த்தி காதுக்குப் போக, கொஞ்சம் அப்செட்டாகியிருக்கிறார். மூர்த்தி தரப்பு உடன்பிறப்புகளோ, "எதிர்க்கட்சிகள் அமைச்சரின் பெயரை ரிப்பேராக்கத் திட்டமிடுகின்றன. வேண்டுமென்றே திருமணச் செலவு மிகைப்படுத்திப் பேசப்படுகிறது''’ என்கிறார்கள் ஆதங்கமாய்.