கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி யிலுள்ள ஆலடி பகுதி ஆறாவது வார்டில் தி.மு.க. உறுப்பினர் 50 வயதான சங்கர், மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கட்சியில் தீவிர தொண்டர். அவர் தனது பகுதி யிலுள்ள ஏழைக் குடும்பத்து பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளி களுக்கு உதவித்தொகை பெற்றுத்தருவது எனப் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில் சங்கருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சங்கரின் உடலை பரிசோதித்த மருத் துவர்கள், சங்கருக்கு சர்க்கரை நோய் அதிகரித்து, கிட்னி பாதிக்கப்பட்டு அதில் சீழ் பிடித்துள்ளது என்றும், இதற்கான மேல் சிகிச்சைக்கு பெரிய மருத் துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டுமென்றும் கூறிவிட்டார்கள். அதன்பின் தனியார் மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கும் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் அல்லாடியிருக்கிறார்கள்.
அடுத்து என்ன செய்வதென்றே முடிவெடுக்க முடியாமல் குழம்பிப்போன சங்கர், விருத்தாச் சலம் தி.மு.க. நகரச் செயலாளர் தண்டபாணி, விருத்தாசலம் நகர்மன்றத் தலைவி சங்கவி முருகதாஸ் ஆகியோரிடம், தனது மருத்துவச் சிகிச்சைக்கு உதவும்படி தொலைபேசியில் கேட்டார். நகரச் செயலாளர் தண்டபாணி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சங்கரை பார்த்துவிட்டு. மருத்துவர்களிடம் விவரம் கேட்டார். பிறகு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், மாநில தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரு மான சி.வெ.கணேசனுக்கு இத்தகவல் தெரியவர, அவர் சங்கர் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, சங்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். 'உடனே சங்கரை சென்னைக்கு அனுப்பி வையுங்கள், நான் பார்த்துக் கொள் கிறேன்' என்று அமைச்சர் தெரிவித்தவுடன். சங்கரை அவரது குடும்பத்தினர் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
அமைச்சர் கணேசன் அவர்களை நேரில் சந்தித்தார். சங்கரின் உடல்நிலையறிந்து வருந் தியவர், உடனடியாக தனது உதவியாளரை அழைத்து, சங்கரை எந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தால் இவருடைய உடல் நிலை சீராகுமென்று மருத்துவர்களிடம் விசாரிக்கும்படி பணித்தார். மருத்துவர்களோடு கலந்தாலோசனை செய்த உதவியாளர், சங்கரை உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் அட்மிட் ஆகச் சொல்கிறார்கள். அங்கே எல்லா வசதிகளும் உள்ளதென்றும், நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறினார்கள் எனத் தெரிவித்தார். அதையடுத்து, ராஜீவ் காந்தி மருத்துவமனை டீனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அமைச்சர், சங்கர் பெயரைக் குறிப் பிட்டு, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும், அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சையளித்து காப்பாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சங்கர் குடும்பத்தோடு மருத்துவ மனைக்கு சென்றதும், ராஜீவ்காந்தி மருத்துவ மனையின் உயர் மருத்துவ அதிகாரி வந்து பார்த்துவிட்டு, உடனே தீவிர சிகிச்சைப் பிரி வில் சங்கரை அட்மிட் செய்து, சிறந்த முறை யில் சிகிச்சை அளித்ததால், கிட்டத்தட்ட 30 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர், உடல் நலம் தேறி வந்துள்ளார். தக்க தருணத் தில் அவருக்கான சிகிச்சைக்கு அமைச்சரே தனிப்பட்டு கவனம் செலுத்தி ஏற்பாடு செய்த தால், எளிய தொண்டனின் உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது. "அமைச்சரின் இந்த உதவியை நானும் என் குடும்பத்தினரும் மறக்கவே மாட் டோம்' என்று நெகிழ்கிறார் சங்கர். மேலும் கூறுகையில், "எனது சிகிச்சைக்கு உதவிய அமைச்சர் மற்றும் விருத்தாச்சலம் நகர செய லாளர் தண்டபாணி, நகர் மன்றத் தலைவர் சங்கவி முருகதாஸ் ஆகியோருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக கோடானு கோடி நன்றி கள். ஒரு மாதம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் சிறப்பான சிகிச்சை அளித்தனர். அறுவைச் சிகிச்சை செய்துதான் என்னைக் காப்பாற்ற முடியும் என்று முதலில் தெரிவித்த மருத்துவர்கள், பிறகு பல்வேறு மருத்துவர் களின் ஆலோசனைப்படி, மருந்துகள் மூல மாகவே எனது சிறுநீரகத்தில் பிடித்திருந்த சீழ் கட்டியை ஆபரேஷன் செய்யாமலே அகற்றியுள்ளனர்.
என்னைப்போல் எந்தவொரு கட்சித் தொண்டனை யும், கட்சித் தலைமையும், அமைச்சர்களும் கைவிட மாட்டார்கள் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் எங்கள் பகுதி அமைச்சர் கணேசன். மருத்துவமனையில் இருந்த நாட்களில், பல்வேறு பணிகளுக்கு இடையிலும் அமைச்சர் அடிக்கடி தொடர்புகொண்டு உடல்நிலை பற்றி கேட்டறிந்து கொண்டேயிருந்தார். கழகத் தோழர் கள் பலரும் எனது உடல்நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்துள்ளனர். ஆனால் அப்போது எனக்கு நினைவு இல்லாததால் அவர்கள் யார்? யார்? என்று கூட தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவருக் கும் இந்நேரத்தில் நானும் என் குடும்பத்தினரும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.
இக்கட்டான சூழலில் தொண்டர்களுக்கு இதை விட வேறென்ன வேண்டும்?