கொட்டும் மழையிலும், செஞ்சி சேத்துப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர் விவசாயிகள். காரணம், மணியின் தற்கொலை. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அன்னமங்கலம் மணி என்பவரின் விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க முன்வந்த மின் அதிகாரிகள், அதற்கு இழப்பீடாக, ரூபாய் 10 லட்சம் தருவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் மின்கோபுரம் அமைக்கப்பட்ட பின், ரூபாய் ஒரு லட்சத்தை மட்டும் இழப்பீடாகத் தந்து விட்டு, இனி தரமுடியாது என்று கைவிரிக்க, இதில் விரக்தியடைந்த மணி, அந்த மின்கோபுரத்திலேயே ஏறி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட மணிக்கு, ஜெயந்தி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

death

தொகுதிக்காரரான அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடந்தது. அதில், மின் கோபுரம் அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தின் துணை மேலாளர் அசோகன், விவசாய சங்க பிரதிநிதிகள், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், மணி குடும்பத்திற்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடும், அரசு சார்பில் நிவாரணமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அமைச்சர் மஸ்தான் உறுதியளித்தார். 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை மின்கோபுர ஒப்பந்த நிறுவனம் உடனடியாக வழங்கியது.

Advertisment

dd

”உயர் மின்சார கோபுரம் அமைத்தால், அங்கே கிணறு தோண்ட முடியாது. விவசாயம் செய்ய முடியாது. அந்த நிலத்தை விலைக்கு வாங்க யாரும் முன்வரமாட்டார்கள். அதனால் தான் இழப்பீடு கேட்கிறோம். அதைத் தருவதாகச் சொல்லிவிட்டு ஏமாற்றினால் எப்படி?”என்கிறார்கள் ஏரியா விவசாயிகள்.

இதேபோல், மின்கோபுர இழப்பீடு தராமல் ஏமாற்றப்பட்டதால் திருப்பூர் மாவட்டம் ராமபட்டினம் ராமசாமி, சேலம் மாவட்டம் சூரப்பள்ளி பெருமாள் உள்ளிட்ட சிலரும் தற்கொலை செய் திருக்கிறார்கள் என்பது அதிரவைக்கும் தகவலாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகள் மீது 48-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மீது 18-க்கும் மேற்பட்ட வழக்கு களும், மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் மீது ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகளும், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தாராபுரம் சிவக்குமார் மீது 8 வழக்குகளும், மாநில இளைஞரணி செயலாளர் பவானி கவின் மீது ஆறு வழக்குகளும் பதிவு செய்யப் பட்டுள்ளது என்கிறது கவலையூட்டும் புள்ளிவிபரம்.

Advertisment