"எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான சொத்தையே அ.தி.மு.க. தரப்பு அபகரிக்கப் பார்க்கிறது' என்று குமுறுகிறார்கள் அவரது வாரிசுகள்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று திருச்சி. தன்னுடைய முக்கியமான முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த ஊர் மண்ணில்தான் அதை முதலில் நிறைவேற்ற ஆசைப்படுவார். குறிப்பாக சத்துணவுத் திட்டத்தைக் கூட திருச்சியில்தான் அவர் தொடங்கிவைத்தார். அதேபோல் திருச்சியை 2-வது தலைநகரமாக மாற்றப் போவதாகவும் அப்போது அறிவித்து பெரும் எதிர்பார்ப் பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தினார். திருச்சி தலைநகரமானால் தனது இறுதிக் காலத்தில் திருச்சி காவிரிக் கரையோரம் ஒரு வீடு வாங்கி, அதில் வசிக்கவேண்டும் என்ற ஆசையும் எம்.ஜி.ஆருக்கு இருந்தது.
இதனை அவர் தன்னுடைய நம்பிக்கைக்குரிய அன்றைய அமைச்சர் நல்லுசாமியிடம் தெரிவிக்க... உடனே நல்லுசாமி, திருச்சி குடமுருட்டி ஆற்றங்கரை அருகில், சுற்றிலும் தென்னை மரமும், மாமரமும், நிரம்பிய 2 ஏக்கர் அளவுள்ள தோட்ட வீட்டை, விலை பேசினார். அதை சோமரசம்பேட்டை புனித சிலுவை மாணவர் இல்ல ரெக்டராக இருந்த பாதிரியார் ஆரோக்கியசாமியிடமிருந்து கிரையம் பேசி, எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலமேனனின் பெயரில் 1984-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி, திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார் நல்லுசாமி. ஆனால் இதில் சோகம் என்னவென்றால், எம்.ஜி.ஆர் இறுதிவரை இந்த பங்களாவிற்கு வரவேயில்லை.
அவர் மரணமடைந்த பிறகு எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசுகளாக சத்தியபாமா, ராமமூர்த்தி, சந்திரன், சுகுமார், லீலாவதி, பிரபாகரன், விஜயலட்சுமி உள்ளிட்ட 10 பேருடைய பெயரில் அது பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தாம், அ.தி.மு.க நிறுவனத் தலைவர் எம்.ஜிஆர். என்று குறிப்பிடப் பட்டு வாங்கப்பட்ட அந்த இடத்தின் பத்திரத்தில், அவர் பெயருக்குக் கீழ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் என்று திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது கட்சியின் பெயரில் அந்த இடத்தை எம்.ஜி.ஆர். வாங்கிய தாக திருத்தம் செய்திருக்கிறார்கள். பிறகு, அந்த இடம் தங்களுக்கு சேர வேண்டிய சொத்து என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
இந்த வழக்கை எதிர்த்து, எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி மகளான லீலாவதி திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் சங்கரமுரளி மூலம் தொடர்ந்துள்ள வழக்கில், "இந்த சொத்து எம்.ஜி.ஆர். சுயமாக வாங்கிய சொத்து. இதற்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று தன்னுடைய தரப்பு வாதத்தை முன் வைத்திருக்கிறார். மேலும் "அ.தி.மு.க. அரசியல் கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பவர்கள் இந்த சொத்தில் உரிமை கோரமுடியாது என்று கூறப்பட்டுள்ளது'’என்கிறார்கள் இந்த வழக்கின் விபரமறிந்தவர்கள்.
அந்த சொத்துக்கு எம்.ஜி.ஆரின் வாரிசுகள், சொத்து வரியும் செலுத்தியுள்ளனர். ஆனால், சொத்து வரி பட்டியலில் இருந்து அவர்களின் பெயரை, அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த ஆட்சிக்காலத்தில் நீக்கியிருக்கிறார்களாம் அவர்கள்.
இந்த வழக்கில் நீதிமன்றம் அ.தி.மு.க. வின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் எடப்பாடிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எம்.ஜி.ஆருக்கு சொந்தமான சொத்தையே அ.தி.மு.க. பெரும்புள்ளிகள் கபளீகரம் செய்ய நினைப்பதைப் பார்த்து, அ.தி.மு.க.வினரே அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.