சென்னை செங்குன்றம் பகுதி யை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், அ.தி.மு.க. அம்மா பேரவை செய லாளருமான பார்த்திபன், செம் மரக் கடத்தல் வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்தார். இந் நிலையில், வீட்டருகே வாக்கிங் சென்றபோது, கடந்த வியாழனன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மறு நாளே, சென்னையை 20 ஆண்டுகளாகக் கலக்கி வந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ், பட்டினப்பாக்கத்தில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ். பிரபல கூலிப்படை கும்பல் தலைவனான இவர் மீது சென்னை புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், சைதாப்பேட்டை, பூந்தமல்லி, காஞ்சிபுரம், வேலூர்- விரிஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 15 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்.
இவர்மீது தமிழகத்தைத் தாண்டி ஆந்திராவிலும் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இப்படியான சூழ்நிலையில், ஆந்திர எல்லையோரம் பதுங்கி, கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் தனது கூட்டாளிகளை வைத்து ரவுடியிஸத்தில் ஈடுபட்டுவந்தார். கடந்த 2010ம் ஆண்டு, பூந்தமல்லி நீதிமன்ற வாசலில் மற்றொரு கூலிப்படை கும்பல் தலைவனான சின்னா என்கிற சென்ன கேசவலு, அவரது வழக்கறிஞர் பகத்சிங் ஆகியோரை கொலை செய்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரை கதிகலங்க வைத்தார்.
பாம் சரவணனின் அண் ணன் தென்னரசு, சென்னை புளியந்தோப்பில் யாராலும் அசைக்கமுடியாத ரவுடியாக வலம்வந்தவர். அதே பகுதியிலிருந்த ஆற்காடு சுரேஷ், அப்பகுதியில் தென்னரசை தாண்டி எதுவும் செய்யமுடியவில்லையே என்ற ஆத்திரத் தில், தென்னரசை போட்டுத்தள்ள வேண்டு மென்று திட்டமிட்டு, தன்னோடு நாகேந்திரன், அம்பேத், சிசிங்ராஜா, எண்ணூர் தனசேகரன் ஆகியோரை சேர்த்துக்கொண்டு, 2015ஆம் ஆண்டு, தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு அருகே தென்னரசுவின் மனைவி மைதிலி கண் முன்னே வெட்டிச்சாய்த்தார். இந்த கொலைதான் தற்போது ஆற்காடு சுரேஷ் கொலைக்கு மையப்புள்ளியாக நிற்கிறது.
தன் அண்ணனைக் கொன்ற ஆற்காடு சுரேஷை கொலை செய்ய பாம் சரவணன், தனது கூட்டாளியான அரக்கோணம் ஜெயபால், முத்துசரவணன், மதுரை சுந்தர், கல்வெட்டு ரவி, சம்பவ செந்தில் ஆகியோரோடு திட்டம் தீட்டியுள்ளார். ஆனால் இதுநாள்வரை தப்பிவந்துள்ளார் சுரேஷ். இந்த நிலையில், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பதிவான ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எழும்பூர் பத்தாவது நீதிமன்றத்தில் ஆற்காடு சுரேஷ் 18ஆம் தேதி ஆஜரானார்.
பின்னர் தனது நண்பர் மோகன், வழக்கறிஞர் அமல்ராஜ் ஆகியோருடன் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நண்பர் மாதுவைப் பார்ப்பதற்காக காரில் சென்றார். அங்கு மதுவருந்திவிட்டு, அங்குள்ள சாலையோரக் கடையில் மீன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்ம கும்பல், ஆற்காடு சுரேஷ் மற்றும் மாதுவை சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் மாயமாகினர். படுகாயமடைந்த இருவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆற்காடு சுரேஷ் உயிரிழந்தார். மாதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வரு கின்றனர்.
தென்சென்னை பகுதியில் பிரச்சனை உள்ள நிலங்களை விற்றுத் தருவது போன்ற வேலைகளில் ஆற்காடு சுரேஷ் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரவுடி தென்னரசுவின் கொலைக்கு அவரது தம்பி பாம் சரவணன் பழிதீர்த்தாரா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த கொலைவழக்கில், அரக்கோணம் ஜெயபால் சிக்கியுள்ள நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. செங்குன்றம் பார்த்திபன் கொலையில் சம்பந்தப்பட்ட முத்துசரவணன் டீம்தான் இந்த கொலையிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பார்த்திபனை கொலை செய்த வழக்கில் மறுநாளே சிலர் சரணடைந்த நிலையில், அன்றே ஆற்காடு சுரேஷை, கருப்பும், சைதை சந்துருவும் கூட்டாளிகளோடு சேர்ந்து கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. பார்த்திபன் கொலையில், முருகேசன், சக்திவேல் ஆகிய இருவரோடு மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்தாலும், முத்துசரவணன் தம்பி கருப்பு, சைதை சந்துரு இருவரும் தப்பிவிட்டனர்.
மே மாதத்திலிருந்து போடப்பட்ட திட்டத்தை தற்போது நிறைவேற்றியுள்ளனர். அடுத்தகட்டமாக பாம் சரவணன் டீம் குறிவைத்திருப்பது சிசிங்ராஜாவா அல்லது அம்பேத்தா என்ற புலனாய்வும் நடக்கிறதாம். ஆற்காடு சுரேஷுக்கு பதிலடியாகப் போடுவதற்கு எண்ணூர் தனசேகரன் டீம் ரெடியாகி வருகிறதாம். இந்த பதட்டமான சூழலைக் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்குமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. இல்லையென்றால் கூலிப்படை கொலைகள் தொடர்கதையாகிவிடும்!.