சேலம் மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த ராமச்சந்திரன் இருந்துவருகிறார். இவர் தலைமையில் மே 25-ஆம் தேதி, மாநகராட்சிப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்டூ பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா, நேரு கலையரங்கத்தில் நடந்தது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களும் கவுரவிக்கப் பட்டனர்.
இந்த விழாவிற்கு வந்திருந்த துணை மேயரான காங்கிரஸை சேர்ந்த சாரதாதேவி, மேயருக்கு அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் சென்றமர்ந்தார். அழையா விருந்தாளியாக வந்ததோடு, நம் பக்கத்திலேயே அமர்ந்துவிட்டாரே என்று எண்ணிய மேயரின் முகம் கறுத்துப்போனது.
மேயர், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், கல்வி அலுவலர் ஆகியோர் பேசிய பிறகு சாரதாதேவியை பேசும்படி அழைத்தனர். உடனே குறுக்கிட்ட மேயர் ராமச்சந்திரன், "அவரெல்லாம் பேசக்கூடாது. பேசவேண்டியவங்க எல்லாம் பேசியாச்சு. அவரை உட்காரச் சொல்லுங்க. இனிமே பரிசளிப்பு நிகழ்ச்சிதான்...'' என்று மேடையிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதைச் சற்றும் எதிர்பார்க் காத சாரதாதேவி, மேடையில் அமர்ந்திருந்த ஆணையர் இளங்கோவன் அருகில்சென்று, 'பலர் முன்னி லையில் மேயர் என்னை அவமானப் படுத்திவிட்டார். நாளைக்கு எப் படி மாநக ராட்சி ஊழி யர்கள், கட் சிக்காரர்கள் முகத்தைப் பார்ப்பது?,' என்று சொல்லிவிட்டு, விழா அரங்கத்திலிருந்து 'விருட்'டென்று வெளியேறினார்.
2022-ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தபிறகு, சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரனும், துணைமேயராக சாரதாதேவியும் பதவியேற்றனர். அப்போதிருந்தே இருவருக்கும் ஏழாம் பொருத்தம்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
"சேலம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 48 இடங்களை வென்றுள்ள தி.மு.க.வுக்குதான் மேயர், துணை மேயர் ஆகிய இரு பதவிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பிருந்தது. துணைமேயராக வாய்ப்பிருந்த அஸ்தம்பட்டி மண்டலக்குழுத் தலைவரான உமாராணிக்கும், அப்போது சேலம் மத்திய மா.செ.வாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்த இப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கும் சில விவகாரங்களில் உரசல் இருந்தது. அதனாலேயே துணை மேயர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தார் மா.செ., சாரதாதேவி துணைமேயரானார்.
அதையடுத்து, மாமன்றக் கூட்டங்களில் மேயர் இருக்கைக்கு அருகிலேயே துணை மேயருக்கும் தனி இருக்கை போடவேண்டும் என்று சாரதாதேவி அடம்பிடித்து சாதித்தார். மாநகராட்சிகள் சட்டத்தில் இதற்கு இடமில்லையென்றும், துணைமேயர் என்பவரும் சாதாரண கவுன் சிலர்தான் என்றும் மேயர் ராமச்சந்திரன் வெளிப் படையாகவே எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவ காரம் அமைச்சர் கே.என். நேரு வரை சென்றது.
இதனால் துணை மேயரை எந்த ஒரு அரசு நிகழ்ச்சிக்கும் மேயர் அழைப்பதில்லை. இந்த நிலையில்தான் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் களுக்கான பாராட்டு விழாவில் மேயர் ராமச்சந்திரன், துணைமேயரை மேடையிலேயே வைத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்'' என்கிறார்கள் தி.மு.க.வின் மூத்த உ.பி.க்கள்.
இதுதொடர்பாக துணை மேயர் சாரதா தேவியிடம் கேட்டோம். "சேலம் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவிற்கு வருமாறு ஆணையர் அழைத்ததன் பேரில்தான் கலந்துகொண்டேன். விழா மேடையில் மேயர் அருகில் போடப் பட்டிருந்த இருக்கையில் அமர்ந்ததையே அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
நான் பேச எழுந்தபோது, "இது, நான் நடத்தும் நிகழ்ச்சி. துணைமேயருக்கு பேச அனுமதி இல்லை' என்று மேயர் வெளிப் படையாகவே கூறினார். மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க முயன்றபோது அதையும் தடுத்தார் மேயர். எல்லோர் முன்னிலையிலும் அவர் அப்படிச் செய்தது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே ஆய்வுகளுக்கோ, மாநகராட்சி சார்பிலான நிகழ்ச்சிகளுக்கோகூட இதுவரை மேயர் அழைத்ததில்லை. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் நானும் இதையெல்லாம் சகித்துக்கொண்டு போகிறேன்.
சொந்த நிகழ்ச்சியென்றால் எதற்காக தமிழ்நாடு அரசு, மாநகராட்சியின் இலச்சினை களையும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் படங்களையும் மேயர் பயன்படுத்துகிறார்? இதுகுறித்து எங்கள் கட்சித் தலைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன்'' என்று வெடித்தார் சாரதாதேவி.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கூறுகையில், ''மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும்விதமாக அவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழாவை தனிப்பட்ட முறையில் நடத்திவருகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு சாரதாதேவியை அழைக்கவில்லை. தி.மு.க. கவுன்சிலர்கள், நிர்வாகிகளைக்கூட நான் அழைக்கவில்லை.
இது முழுக்க முழுக்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சி என்பதால்தான் மாநகராட்சி ஆணையர், மாவட்டக் கல்வி அலுவலர் தவிர வேறு எவரையும் பேச அனுமதிக்கவில்லை. 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்திருக்கிறோம்.
எனக்கு நற்பெயர் கிடைத்துவிடக்கூடாது எனத் திட்டம்போட்டு சாரதாதேவி இங்கு வந்து பிரச்னைசெய்கிறார். இதன்மூலம் அவர் விளம்பரம் தேடிக்கொள்ளப் பார்க்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள்தான் அவரை ஜெயிக்கவைத்தோம். அதையெல்லாம் மறந்துவிட்டு என்னைப்பற்றி வெறும் பொய்யாகப் பேசுகிறார்'' என்றார்.
பெண்களுக்கு சம உரிமை கிடைக்கப் பாடுபடும் திராவிட மாடல் அரசு என தமிழக முதல்வர் சொல்லிவரும் நிலை யில், மாங்கனி மாநகராட்சியில் பெண் துணைமேயரை, ஆளுங்கட்சி மேயரே அவமானப் படுத்தலாமா? என இரு கட்சிக்குள்ளிருந்தும் கேள்விகள் கிளம்பி யுள்ளன.