சி. கார்த்திகேயன், சாத்தூர்
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர். இருவரும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தால் எப்படி இருக்கும்?
ஏன்... தியாகராஜ பாகவதரும், பி.யூ. சின்னப்பாவும் ஒரு மெகா போதைப் பொருள் கும்பலை பிடிக்க முயற்சிசெய்கிறார்கள். அதில் ‘விக்ரம்’ கமல், ‘கூலி’ ரஜினி, ‘மாஸ்டர்’ பட விஜயெல்லாம் உதவுவதாக ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியோடு லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்கினால், நீங்கள் பார்க்கமாட்டேன் என்றா சொல்லிவிடுவீர்கள்!
ஆர். ஹரிகோபி, புதுடெல்லி
அரசியல்வாதிகள் இறந்தபின் ஆவியாக வந்து ஏன் யாரையும் தொந்தரவு செய்வதில்லை?
இருக்கும்போதே வேண்டிய அளவு மற்றவர் களைத் தொந்தரவு செய்து அதில் நிறைவடைந்து மறைந்ததால் இருக்கலாம்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
எனது காரை மறித்து, என்னிடம் அழுத்தம் கொடுத்துதான் கையெழுத்தை வாங்கினார்கள். வேறுவழியில்லாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று கூறுகிறாரே அ.தி.மு.க. எக்ஸ் எம்.எல்.ஏ.?
அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு அழுத்தம் தர பிஸ்கட் பாக்கெட் கொடுத்தார்கள். விஜயகுமாருக்கு அழுத்தம் தர என்ன தந்தார்கள் என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.
எம்.சிவா, மதுரை
மகாகும்பமேளாவில் படகோட்டி ரூ.30 கோடி சம்பாத்தித்ததாக உ.பி. முதல்வர், பிந்து மகாராவைப் பாராட்டியிருக்கிறாரே... ?
ஆமாம். அதே நபர்மீது காவல் நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து, பணம் பறித்தல் என பல வழக்குகள் இருக்கின்றன. இந்த கும்பமேளாவிலும் இவர் நாளொன்றுக்கு 30,000 வரை தொகை தந்தவர்களை மட்டுமே படகோட்ட அனுமதித்தார் என புகார்கள் வருகின்றன. ஆக, அந்த 30 கோடி படகோட்டிச் சம்பாதித்ததா.... பிறரை மிரட்டி பணம் பறித்துச் சம்பாதித்ததா என்ற சந்தேகம் எழுந்திருக் கிறது. உ.பி. முதல்வரின் கைராசி அப்படி!
த.சத்தியநாராயணன், அயன்புரம்
சிம்பொனி சாதனைக்காக, இளையராஜாவுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்திருக்கிறாரே முதல்வர் ஸ்டாலின்?
நேரில் சென்று வாழ்த்த தகுந்த திறமை யுடையவர்தான் இளையராஜா. இந்தியாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் சிம்பொனி சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்? ஒவ்வொரு துறையிலும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்படும்போது, முதல்வர் வாழ்த்தி உற்சாகப்படுத்துவது நல்ல முயற்சியே!
எச்.மோகன், மன்னார்குடி
உண்மை எப்போது தோற்கும்? பொய் எப்போது ஜெயிக்கும்?
பொய்யின் வெற்றிதான் அடிக்கடி நடக்கும். இறுதி வெற்றி உண்மையினுடையதாக இருக்கும். அதனால்தான் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்று சொல்கிறார்கள். ஆனால் சிலர் வேறு மாதிரியும் சொல்கிறார்கள். பாரத இறுதிப் போரில் துரியோதனன் வென்றிருந் தால், துரியோதனன் தரப்பை நியாயப்படுத்தி மகாபாரதம் எழுதப்பட்டிருக்கும் என்றொரு கருத்து உண்டு. தற்போதும் தொடர்ச்சியாக மூன்று முறை பா.ஜ.க. வென்றதால் நேருவும், காங்கிரஸ் தரப்பும் செய்ததெல்லாம் தவறு என்பதாக புராஜெக்ட் செய்யப்படுகிறதல்லவா! இன்னும் இரண்டுமுறை பா.ஜ.க. வென்றால், வரலாறையே அப்படி எழுதி வைத்துவிடுவார்கள்.
ஆர். பாலகிருஷ்ணன், புளியங்குடி
இன்னுமா தேர்தல் முறைகேடு என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்தை நம்புகிறீர்கள்?
மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 100 பேர் ஒரே இ.பி.ஐ.சி. எண்கள் பிரச்சனையுடன் தேர்தல் ஆணை யத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த இ.பி.ஐ.சி. எண் ஒருவரது தேர்தல் அடையாள அட்டையில் காணப்படும். ஒருவருக்கு வழங்கிய எண் மற்றவருக்கு வழங்கப்படக்கூடாது. இந்த 100 பேருக்கும் ஒரே எண் இருக்கவில்லை. ஆனால் ஒருவருக்கு வழங்கிய இ.பி.ஐ.சி. எண் மற்றவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது என்பதை மகாராஷ்டிரா முழுவதும் சோதனை செய்தால்தான் தெளிவாகும். அதேபோல் மேற்குவங்காளத்தில் வழங்கப்பட்ட அதே எண், ஹரியானாவில் ஒருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதெல்லாம் சந்தேகத்தைக் கிளப்பவில்லையா என்ன?
க.பிரியங்கா, மயிலாடுதுறை
இஃப்தார் நோன்பு நிகழ்வில் பங்குபெற்றிருக் கிறாரே விஜய்?
அரசியலுக்கு வந்தாகிவிட்டதல்லவா, பிறகென்ன நோன்பு நிகழ்வில் பங்கேற்க வேண்டும்தான். கிறித்து வின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டும் தான். தமிழர் திருநாளைக் கொண்டாடவேண்டும் தான். நான் எல்லாருக்கும் வேண்டியவன் எனக் காட்டிக்கொள்ளவேண்டியது அரசியலில் அவசியமானதுதான்.