கல்லிடை சிவா, கல்லிடைக்குறிச்சி
யமுனை நதியில் ஹரியானா அரசு விஷம் கலந்தது என்று கெஜ்ரிவால் கூறியதை நிரூபிக்கவேண்டும் என தேர்தல் கமிஷன் கூறியிருப்பது குறித்து?
பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்காக கங்கையில் குளித்துவிட்டு டெல்லி தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த யோகி, "கெஜ்ரிவாலால் இதுபோல் யமுனையில் குளிக்கமுடியுமா?' என சவால்விட்டார். இந்த நிலையில் அரியானாவிலிருந்து டெல்லிக்கு வரும் யமுனை நீரில் விஷம் கலக்கப்படுவதாக குற்றம்சாட்டினார் கெஜ்ரிவால். இதை யடுத்து தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள் ளது. தேர்தலுக் காக, குற்றம்சாட்டலாம்தான். இது வரம்புமீறிய குற்றச்சாட்டு. குறைந்தபட்ச ஆதாரமில்லாமல் இப்படிப் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தவே செய்யும்.
எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு
மம்தா குல்கர்னி சேர்ந்த வேகத்தில் சந்தியாசிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறாரே...?
நடிகை மம்தா ஏற்கெனவே போதைப்பொருள் வழக்கில் பெயர் அடிபட்டவர். சமீபத்தில்தான் இந்தியா வந்திருந்தார். வந்த வேகத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவையொட்டி, கின்னர் அகாரா என்ற மடத்தில் சந்நியாசினியாகச் சேர்வதாகத் தெரிவித்து பரவலான ஊடகக் கவனத்தை பெற்றார். ஸ்ரீ யாமை மம்தா நந்தகிரி என்ற பெயரோடு மடத்தின் மகா மண்டலேஷ்வரராகவும் அறிவிக்கப்பட்டார். இடையில் என்ன நடந்ததோ, மடத்தின் தலைவர் மம்தாவை மடத்திலிருந்து நீக்கியதோடு, மம்தாவைச் சேர்த்தவர் ஒருவரையும், பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார். ஏற் கெனவே நமக்கு ரஞ்சிதாவைப் பார்த்த அனுபவம் இருப்பதால் இதுவொன்றும் புதிதில்லை.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
2026-ல் தி.மு.க. ஆட்சி அமை யும் என்கிறார் ஸ்டாலின், அடுத்த முறை தி.மு.க. ஆட்சிக்கு வராது என்கிறார் பா.ஜ. மா. த., யார் பேச்சை நம்புவது?
நீங்கள் எதற்கு அடுத்தவர் பேச்சை நம்புகிறீர்கள். உங்கள் சொந்தக் கண்களைப் பயன் படுத்தி என்ன நடக்கிறதெனப் பாருங்கள், மூளையைப் பயன் படுத்தி அடுத்துவரும் தேர்தலில் வாக்களியுங்கள். அது போதும்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
வரலாற்றின் மிக மோசமான அட்டூழியங்கள் படித்தவர்களால் செய்யப்பட்டவை என்று பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் தெரிவித்துள்ளாரே...?
அட்டூழியம், அராஜகத்துக்கும், படிப்பு, படிப்பின்மைக்கும் தொடர்பில்லை. அதிகார வெறி ஏறும்போது இரு சாராருமே அட்டூழியம் செய்யக்கூடியவர்கள்தான். இறந்த காலத்தையும், இந்தியாவுக்கு வெளியே உள்ள பகுதிகளையும் விட்டுவிடுங்கள். நிகழ்காலத்தில் இந்தியாவுக்குள் நடக்கும் அட்டூழியங்கள் யாரால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை ஆரிஃபால் பார்க்கமுடி கிறதா? அதை தைரியமாக அவரால் பேசமுடியுமா?
த.சத்தியநாராயணன், அயன்புரம்
உதயநிதி மீதான சனாதன வழக்கை உச்சநீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது பற்றி...?
அவர் சனாதனத்தை ஒழிக்க விரும்பினால், ஆர்வமுள்ளவர் கள் சனாதனத்தைக் காக்கக் கிளம்பவேண்டியதுதான். உச்சநீதி மன்றம் அவரது பேச்சில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக எதுவுமில்லை என்றுகூறி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.
எச்.மோகன், மன்னார்குடி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் யாருக்குச் சொந்தமாகும்?
தீர்ப்பின்படி வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் என்று பட்டியலிடப்பட்டவை எல்லாம் தமிழக அரசுக்குத்தான் சொந்தமாகும்.
திலகர் ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
ஆம் ஆத்மியின் நேர்மையற்றவர்கள் பட்டியலில் ராகுல் காந்தியும் இடம்பிடித்துள்ளாரே?
காங்கிரஸ் ஒரு பட்டியல் போட்டால் அதில் மோடியும், கெஜ்ரிவாலும் வருவார்கள். பா.ஜ.க. ஒரு பட்டியல் போட்டால் அதில் கெஜ்ரிவாலும், ராகுலும் வருவார்கள். அதெல்லாம் அப்படித்தான்.
வண்ணை கணேசன், கொளத்தூர்
"டெல்லிக்கு ஷீலா தீட்சித் மாடல் வளர்ச்சி தேவை' என்று ராகுல் வலியுறுத்துகிறாரே?
வாக்களிக்கவிருக்கும் டெல்லி மக்களின் மனதில் பதியுமாறு வலியுறுத்தினாரென்றால் சரிதான். ராகுலின் சிபாரிசை மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்று இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடப்போகிறது.