என். இளங்கோவன், மயிலாடுதுறை.

தமிழக இளம் வீரர் குகேஷ் கனடாவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது பற்றி?

ff

செஸ் போட்டிகளில் பல்வேறு டைட்டில்கள் இருக்கின்றன. அதில் கேன்டிடேட்ஸ் சாம்பியன் தொடரும் முக்கியமானதாகும். இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட உலகின் முக்கிய சாம்பியன்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் அமெரிக்காவின் நகமுராவுடனான ஆட்டத்தை குகேஷ் ட்ரா செய்தார். பேபியானோ கருணா, இயான் நெப்போம்னியாச்சி ஆகிய பலருடனும் வெற்றிகரமாக மோதி புள்ளிகள் அடிப்படையில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தியாவின் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பின் இந்தப் பட்டத்தை வெல்லும் இந்திய வீரர் என்பதால் இது குறிப்பிடத்தக்க சாதனைதான்.

அன்னூரார், பொன்விழி அன்னூர்

குருத்துவாரா சென்று பக்தர்களுக்கு உணவு பரிமாறிய மோடி, அன்னூரார் அழைப்பை ஏற்று கருப்பராயர் கோவிலில் கிடா வெட்டி பக்தர்களுக்கு உணவு பரிமாற வருவாரா?

குருத்துவாரா, ராமர் கோவில், கருப்பராயர் கோவில் எதுவென்பது பிரச்சனையில்லை. கருப்பராயர் கோவிலில் உணவு பரிமாறுவதன் மூலம் அவருக்கு சில லட்சம் வாக்குகள் விழுவது நிச்சயமாகுமா என்பதுதான் அவர் எதிர்பார்ப்பு. அதற்கு அன்னூரார் உத்தரவாத மளிப்பாரா?

சி. கார்த்திகேயன், சாத்தூர்

அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளியா?

அது வேற டிபார்ட்மெண்ட். மாவலியார் வாசகர் கேள்விகளுக்குத்தான் பதிலளிக்க முடியும். ஒருவர் குற்றவாளியா- இல்லையா என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்களும் சட்ட நடைமுறைகளும் இருக்கின்றன.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூர்

சவுக்கு சங்கர்?

நீதிமன்றத் துறையில் உள்ளவர்களை இழிவுபடுத்தி, உச்சநீதிமன்றம் கண்டித்தபோதே சுதாரித்திருக்கவேண்டும். ஆனால், சவுக்கு சங்கர் மீண்டும் பழைய பாதையிலேயே தொடர்ந்தார். ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. அதுவும் அரசியல் களத்தில், நீங்கள் செலுத்திய விசையைவிட, எதிர்விசை இன்னும் வலுவானதாக இருக்கும். ஆனால் ஒன்று... சவுக்கோ, சில்லறைக் குற்றவாளிகளோ… சிறைவாசத்துக்குப் போனாலே கை,கால் முறிவு ஏற்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

வடகொரியாவில் பெண்கள் உதட்டுச் சாயம் பூசினால் அபராதம் விதிக்கப்படும் என அதிபர் கூறியிருப்பது குறித்து?

வடகொரிய மக்களுக்கு இது புதிதா என்ன! கிம் ஜோங் உன் இதற்குமுன்பும் பல பைத்தியக் கார அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். நடைமுறைப்படுத்தியிருக்கிறார். உதட்டுச் சாயம், உள்ளாடைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சர்வாதிகாரிகள் எதை அடைந்துவிடப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. தான் நினைத்தது நடக்கவேண்டும் என்ற பைத்தியக் காரத்தனத்தைத் தவிர இதில் வேறெதுவும் இல்லை.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

தமிழ்நாட்டின் திருமணங்களை எந்தச் சடங்கும் தீர்மானிக்க முடியாது. எந்தத் தீயும் தீர்மானிக்க முடியாது என்கிறாரே ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு?

இந்து திருமணச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள சப்தபதி உள்ளிட்ட திருமணச் சடங்குகளை முறையாக மேற்கொள்ளாத திருமணங்கள் இந்து திருமணங்களாக அர்த்தம் கொள்ளப்படாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்தனா, மாசிஹ் அமர்வு ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருந்தது. அதற்கு எதிர்வினையாகக் கூறியிருக்கலாம். திருமணத்தில் முக்கியமானது சம்பந்தப்பட்ட இருவரின் சம்மதமே தவிர, சடங்குகள் அல்ல என்பதுதான் மாவலியின் கருத்தும். அதுவும் இந்தியாவில் ஒவ்வொரு சமூகத்தினரின் சடங்கும் ஒவ்வொரு வகையில் வேறுபடும். இதையெல்லாம் கவனித்துக்கொண்டி ருப்பதா நீதிமன்றத்தின் வேலை? ஆனால் ஒரு பைத்தியக்கார சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்து, இன்னின்ன சடங்குகள் இருந்தால்தான் அது திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றால் அதைப் பின்பற்றுவதைத் தவிர மக்கள் எதுவும் செய்யமுடியாது. ஆதாரை எதிர்த்த எத்தனையோ பேர், பின் நடைமுறைத் தேவைக்காக ஆதாரைப் பெறவில்லையா அதுபோல்தான்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

அம்பானி, அதானி -இருவரும் மோடி ஆட்களா?… ராகுல்காந்தியின் ஆட்களா?

அவர்கள் இருவரும் கார்ப்பரேட் முதலாளிகள். மோடியின் ஆட்சியமைந்து அவர் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை கொடுத்தால், மோடியின் புகழ் பாடுவார்கள். அவரது கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழங்குவார்கள். மாறாக, ராகுலின் ஆட்சியமைந்தாலும், உரிய முறையில் அணுகி வேண்டிய சலுகைகளைப் பெற்று ராகுலின் புகழைப் பாடுவார்கள். அவரது கட்சிக்கு வேண்டிய நிதியை அளிப்பார்கள். அவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள்;… ஆதாயங்களுக்கு அணுக்கமானவர்கள்.