பால்வண்ணன். கே, புளியங்குடி

"மஞ்சிம்மல் பாய்ஸ்' எப்படியிருக்கிறது?

mm

முன்பு -ஜோஜோஸ் பெல்லிச்சேரியின் "நண்பகல் நேரத்து மயக்கம்'. இப்போது சிதம்பரத்தின் "மஞ்சிம்மல் பாய்ஸ்'. இரண்டிலும் தமிழக நிலத்திலேயே பெரும்பகுதி கதை நிகழும். வசனங்களும் கணிசமாகத் தமிழில் இடம் பெற்றிருந்தன. "குணா' படத்தில் கமல் நடித்த கொடைக்கானல் குகைப் பின்னணியில் இந்தக் கதை நிகழ்வதாலும், தமிழர்களை ஈர்த்துள்ளது. வசூலை மனதில் வைத்து இத்தகைய கதைப் பின்னணி அமைக்கப்படுகிறதா,…இல்லை இயல்பாகவே இப்படி கதை எழுதுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

Advertisment

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

முகேஷ் அம்பானி குடும்ப திருமண நிகழ்வுக்காக, ஜாம் நகர் விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது குறித்து?

mm

Advertisment

தற்காலிகமாக விமான நிலையத்துக்கு வழங்கப் பட்டிருக்கும் சர்வதேச அந்தஸ்து மட்டும்தான் பிரச்சினையா? 3000 ஏக்கரில் குஜராத்தில் அமைய வுள்ள "வந்தாரா' மிருகக்காட்சி சாலைக்கு இந்தியா விலுள்ள பெரும்பாலான வளர்ப்பு யானைகளையும், தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட 1000 முதலைகளையும், அரசுக்குச் சொந்தமான மிருகக்காட்சி சாலைகளிலிருக்கும் விலங்குகள், பறவைகளையும் ஆனந்த் அம்பானிக்கு சீதனமாகக் கொடுத்து ஆசிர்வதிக்கும் அதிகார துஷ்பிரயோக மும் பெருமளவில் விவாதிக்கப்படவேண்டும்.

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

"பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தா விட்டால் மே 1 முதல் நாடு முழுவதும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும்' என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது பற்றி?

முதலில் விவசாயிகள்,… இப்போது ரயில்வே துறையினரா? இன்றைய நிலையில், பழைய அரசு தொழிற்சங்கங்கள்போல் தற்போதைய தொழிற் சங்கங்கள் வலுவாக இல்லை. தவிரவும் மே மாதத்துக்கு கால அவகாசமிருக்கிறது. இதைத் தடுப்பதற்கான வழிகளை அரசு தீவிரமாய் யோசிக்கும். இருந்தாலும் தொழிற்சங்கங்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்!

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

"தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி இளைஞர்களின் வேலை வாய்ப்பை தடுக்கிறது' என்கிறாரே பிரதமர் நரேந்திரமோடி?

முதலில் பிரதமர் தன் தேர்தல் வாக்குறுதிப் படி ஆண்டுக்கு 2 கோடி வீதம் பத்தாண்டுகளுக்கு 20 கோடிக்கான வேலை வாய்ப்பு அளித்த விவரத்தைச் சொல்லட்டும். பிறகு உள்ளூர் பஞ்சாயத்தைப் பேசலாம்.

ஆர்.எஸ். மனோகரன், முடிச்சூர்

"இந்த தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க. இருக்காது; முற்றிலுமாக அகற்றப்படும்' என்று எந்த நம்பிக்கையில் மோடி சொல்கிறார்?

அன்று மன்னர்கள் போருக்குக் கிளம்பும்முன் வஞ்சினம் கூறி தன்னை உத்வேகப்படுத்திக் கொள்வதற்கு ஒப்பானதுதான் இது. "எதிரி மன்னன் தலையை கொய்து வருவேன். அவனை புறமுதுகிட்டு ஓடவைப்பேன்' என்று சபதமெடுத்து போருக்குக் கிளம்புவார்கள். இன்றைக்குப் போரும் இல்லை,…மன்னர்களும் இல்லை. அதற்குப் பதில் தேர்தல் பிரச்சாரக் களத்தில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு தொகுதிகூட மிச்சமின்றி வெல்வதாக சவால் கள் விடுவார்கள். இத்தனை தொகுதிகள் வென்று காட்டுவேன் எனச் சொல்லிச் சாதிப்பார்கள். அதனைவிட்டு "தி.மு.க.வை அழிப்பேன்,… காங்கிரஸை ஒழிப்பேன்,… கம்யூனிஸ்ட்டுகளை துடைப்பேன்'… என பழைய வஞ்சின மரபில் வருவதுபோல பிரதமர் நாகரிகமின்றிப் பேசுகிறார். பா.ஜ.க.வைத் தவிர மற்ற கட்சிகளின் இருப்பை அச்சுறுத்தலாகப் பார்க்கும் ஒரு எதேச்சதிகார மனது... இத்தகைய மொழிகளைத்தான் கையாளும்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

"முன்பின் தெரியாத பெண்களை "டார்லிங்' என கூப்பிடுவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது. சிறைத் தண்டனை விதிக்கலாம்' என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?

நீங்கள் ஏன் முன்பின் தெரியாத பெண்களை டார்லிங் என கூப்பிட்டு தொந்தரவு செய்கிறீர்கள். ஒரு பெண் விரும்பாதபட் சத்தில் அவளை டார்லிங் என்றோ, வேறுவிதமாகவோ அழைப்பது அவளை டீஸிங் செய்வதுபோலத்தான். என்ன ஒன்று, இந்தப் பாதுகாப்பு அம்சத்தை, பெண்கள் தங்களுக்கு வேண்டாதவர்களைப் பழிவாங்கப் பயன்படுத்தக்கூடாது.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

"மீண்டும் தி.மு.க. வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது' என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?

பஞ்ச் டயலாக்குகள் முதல்முறை பேசப்படும்போதுதான் அதற்குப் பெறுமதி அதிகம். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து என்ற எடப்பாடியின் ஆதங்கத்தை மக்கள் நம்பும்படியான ஒரு தீவிரம் பேச்சில் வேண்டும். அப்படியில்லாத பேச்சு, ஊடகங்களுக்குத் தலைப்பு. காட்சி ஊடகங்களுக்கு சில நொடி நேர பைட்ஸ்.