செந்தில்குமார்.எம், சென்னை-78
இன்றைய இளம் தலைமுறையினரின் பலம், பலவீனம் என்ன?
பிறந்து வளரும்போதே நவீன சாதனங் களுக்கு அறிமுகமாகி வளர்வதால், முந்தைய தலைமுறையைவிடவும் தொழில்நுட்ப, சாதனங்கள் குறித்த அறிமுகமும் அறிவும் அதிகம் இருக்கிறது. ஆனால், முந்தைய தலைமுறையைவிடவும் சொகுசாகப் பிறந்து வளர்வதாலும், பெரும்பாலான இளம் தலைமுறையினருக்கு விளையாட்டு, உடலுழைப்பு இல்லாததாலும் ஆரோக்கியமற்ற ஒரு தலைமுறை உருவாகிவருகிறது. இளம்பருவ சர்க்கரை, உடற் பருமன், அதிகபட்ச டி.வி., கணினி, அலைபேசி புழக்கத் தால் கண்பார்வைக் குறை பாடுடன் கூடிய ஒரு தலை முறை உருவாகி வருகிறது. இவர்களைக் குறித்து தனிப்பட்ட விதத்தில் பெற் றோரும், ஒட்டுமொத்தமாக சமூகமும் கவனம் செலுத்தாவிட்டால் ஆபத்து.
ரா.ராஜ்மோகன், முட்டியூர்
"வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தேவை யான நிவாரண நிதியை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்காமல், ஆளும் தி.மு.க. அரசுதான் வழங்க வேண்டும்' என்கிறாரே எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி?
எப்போதுமே ஆளும் கட்சிக்கு முரணாகத்தான் எதிர்க்கட்சி பேசும். தவிரவும், உள்ளுக் குள் பா.ஜ.க. வுடன் ரகசியக் கூட்டணியை தொடரும் ஒரு எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து வேறெந்தவிதமாக பேச்சுவரும் என எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், நாளைக்கு எடப்பாடியார் ஆட்சியில் அமர்ந்து இத்தகைய ஒரு இக்கட்டு வரும்போது, இதே கத்திகளை எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து பா.ஜ.க.வும் தனது பிருஷ்டத்தில் சொருகாதென்பது என்ன நிச்சயம் என்பதையும் யோசித்துப் பார்த்து எப்போதும் அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
ப.ராஜா, கிருஷ்ணகிரி
"நான் சில விஷயங்களைக் கூறினால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குச் சென்றுவிடுவார்' என்கிறாரே ஓ.பி.எஸ்.?
திகார் சிறைக்குச் செல்லுமளவு குற்றமெனில், அது கொஞ்சம் பெரிய குற்றமாகத்தான் இருக்கும். அத்தனை பெரிய குற்றத்தை இத்தனை நாள் மறைத்திருக் கிறாரெனில் அதுவே பெரிய குற்றம்தானே. அதனால் இருவரையும் காவல்துறையை வைத்து விசாரிக்கவேண்டும்.
ஆர். பிரவீன், கோவை-2
தூத்துக்குடி மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்திருக்கிறாரே?
என்ன பிரயோஜனம்? எல்லா மாநிலங்களுக்கும் வழங்கப்படும் பேரிடர் நிதியைக் குறிப்பிட்டுவிட்டு, அதான் உங்களுக்குக் கொடுத்தாச்சுல்ல… இன்னும் என்ன கேட்கிறீங்க என தமிழக ஊடகங்களில் எல்லாம் பேசிவிட்டு இப்போது போய் பார்த்து என்ன ஆகப்போகிறது. நீங்கள் வட மாநிலங்களின் கண்ணில் வெண்ணெயும் தென்மாநிலங்களின் கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது மாநிலங்களுக்கான வரிப் பகிர்விலே தெளிவாகத் தெரிகிறது. சமீபத் தில் பாகிஸ்தான் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதற்கு முன்பெப்போதுமில்லாத நடைமுறையாக இந்தியா எந்த நிவாரணமும் அளிக்காமல் புறக்கணித்தது. தென் மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது கைவிரிப்பதைப் பார்த்தால் தென் மாநிலங்களையும் பாகிஸ்தானைப் பார்ப்பதுபோல்தான் பா.ஜ.க.வினர் பார்க்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
க.சந்திரகலா, கல்லிடைக்குறிச்சி
ரயில்வே நிலையங்கள், பல்கலைக் கழகங்களில் பூத் அமைத்து பிரதமர் மோடி உருவத்துடன் புகைப்படம் எடுப்பதை ஊக்குவிக்கும் அரசு மற்ற காரியங்களில் சுறுசுறுப்பாக இல்லையே?
மோடி அல்லது மோடியின் கட்சி விளம்பரத்தில் கெட்டியானது என்பது கடந்த பத்தாண்டுகளாக நிரூபணமாகிவருகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு வித்தியாசமான விளம்பர அணுகுமுறையுடன் வருவது மோடியின் யுக்தி. ஒரு தேர்தலில் குஜராத் தொண்டர்களை எல்லாம் மோடி முகமூடி அணியவைத்தார். 2014 தேர்தலில் டி.வி. பிரச்சாரம், சமூக ஊடகப் பிரச்சாரங்களுக்கு மிக அதிக அளவில் செலவிட்டார். இந்தத் தேர்தலுக்கு செல்ஃபி பூத், ராமர் கோவில், ‘"உத்தரவாதம்'’ தம்பட்டம் என வெரைட்டி யான விஷயங்கள் கையிலிருக்கும்போல் தெரிகிறது. மக்களுக்குச் செய்கிறோமோ… இல்லையோ… செய்ததுபோல் விளம்பரம் செய்வதில் கெட்டியாக இருக்கவேண்டுமென தற்போதைய ட்ரெண்ட் சொல்கிறது. பிறகென்ன விளம்பரத்தில் சுறுசுறுப்பாக இருந்தால் போதாதா? மோடியை ஜெயிக்கவேண்டு மெனில் மோடியைவிட பெரிய விளம்பரதாரர்களாக இந்தியா கூட்டணி மாறவேண்டும். ஆளும் கட்சியின் நேரஷனே(Narration) பேசப்படும் நிலையில், எதிர்க்கட்சியின் நேரஷன் பேசப்படுவதாக மாற என்ன செய்யவேண்டும் என்பதை ஆலோசிக்கவேண்டும்.