பி.மணி, வெள்ளக்கோவில்
இரட்டை இலை சின்னம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இவற்றில் எது அ.தி.மு.க. கட்சிக்கு தேர்தலில் பலம் சேர்க்கிறது?
இவை எல்லாவற்றையும் விட அ.தி.மு.க.வின் பலம் என்பது தி.மு.க. எதிர்ப்பும், கலைஞர் மீதான வெறுப்பும்தான். கட்சி தொடங்கிய காலத்திலிருந்து அதைத்தான் எம்.ஜி.ஆர். முக்கிய கொள்கையாக வகுத்தார். அ.தி.மு.க.வின் நேரடி வாக்குகளைக் கடந்து, தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் அ.தி.மு.க.வைத் தொடர்ந்து ஆளுங்கட்சியாக்க உதவின. எம்.ஜி.ஆரைவிட அதிகமாக தி.மு.க வெறுப்பை விதைத்தவர் ஜெயலலிதா. கலைஞரின் குடும்பம், வாரிசு அரசியல், தி.மு.க. ஆட்சியின் ஊழல் இவற்றை முன்வைத்தே அ.தி.மு.க. தனக்கான வாக்கு வங்கியைத் தக்க வைத்தது. தி.மு.க. தவறு செய்யும்போதும், அதனால் பலவீனமடையும்போதும், அ.தி.மு.க. செல்வாக்கு பெறுவது வழக்கம். இதை நன்றாக உணர்ந்தவர் மு.க.ஸ்டாலின். அதனால், இந்த முறை அவற்றுக்கு இடம் தரக்கூடாது என்ற முனைப்புடன் செயல்படுகிறார். பார்க்கலாம். தி.மு.க. தவறு செய்யாமல் இருக்கிறதா என்பதையும், அது செய்யும் தவறுகளால் லாபமடையப் போவது அ.தி.மு.க.வா? பா.ஜ.க.வா? என்பதையும்.
வாசுதேவன், பெங்களூரு
இந்த வருடத்திய உலகக் கோப்பை கால்பந்து திருவிழா?
2002ல் ஜப்பானும் தென்கொரியாவும் உலகக் கோப்பை போட்டியை நடத்தின. அதுதான் ஆசியக் கண்டத்தில் கடைசியாக நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி. அதன்பிறகு 20 ஆண்டுகள் கழித்து ஆசிய நாடான கத்தாரில் 2022 உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது. கால்பந்து ஜாம்ப வான்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென் டினா, பிரான்ஸ் போன்ற நாடுகள் முன்பு போல வலுவாக இல்லை என்கிறார்கள் ரசிகர்கள். இத்தாலி இந்த முறை தேர்வாகவே இல்லை. அதனால், எந்த நாடு கோப்பையை வெல்லும் என்கிற ஆர்வம் அதிக மாகியுள்ளது. வழக்கம்போல இந்திய கால்பந்து அணி இந்த முறையும் தேர் வாகவில்லை. இந்திய ரசிகர்கள் ஏதாவது ஓர் அணியை ஆதரிப்பார் கள். அது பெரும்பாலும் பிரேசில், அர்ஜென் டினா, போர்ச்சுகல் அணி களாக இருக்கும். இந்த முறை அது மேலும் சில அணிகளுக் கான ஆதரவாக மாறலாம்.
கி.சோழராஜன், மதகடிப்பட்டு-புதுச்சேரி
கங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையே ஏராளமான முரண்பாடு கள் இருப்பதாக கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறாரே...
காங்கிரசுடன் ஏற்பட்ட முரண்பாட் டால்தான் தியாகராயரும், டி.எம்.நாயரும் அதிலிருந்து விலகி நடேசனா ருடன் சேர்ந்து திராவிட இயக்கமான நீதிக் கட்சியைத் தொடங்கி னார்கள். காங்கிரசுடன் ஏற்பட்ட முரண்பாட்டால்தான் அதிலிருந்து விலகிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அது நீதிக் கட்சியுடன் சேர்ந்து திராவிடர் கழகமானது. திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உரு வானது. அது காங்கிரசை தேர்தலில் வீழ்த்தி ஆட்சியை அமைத்தது. எனவே நூற்றாண்டு களாகவே காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் முரண்பாடுகள் உள்ளன. தேர்தல் களத்தில் உடன்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. பட்டுக்கோட்டை அழகிரி காலத்தில் தொடங்கி கே.எஸ். அழகிரி காலம் வரையிலான வரலாறு இது.
டி.எம்.ராஜ், கோயமுத்தூர்
"வந்தே பாரத்' ரயில் திட் டம் இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் திட்டமா?
இந்தியாவின் பெருமைக் குரிய-மக்களுக்கு நேரடியாகப் பயன்தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையானது இந்திய ரயில்வே. வெள்ளைக் காரர்கள் ஆட்சியில் பாம்பேயிலிருந்து தானாவுக்கு முதல் ரயில்பாதை போடப்பட்டது. சென்னையின் முதல் ரயில் நிலையம் ராயபுரம். வடக்கே டார்ஜிலிங்கிலும், தெற்கே உதக மண்டலத்திலும் மலை ரயில் பாதையும் உண்டு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பயணங்களுக்கு உறுதுணையாக இருந்தது ரயில்பாதைதான். சுதந்திர இந்தியாவிலும் புதிய புதிய ரயில்கள் இயக்கப்பட்டன. நீராவி இன்ஜின், டீசல் இன்ஜின், மின்சார இன்ஜின் என வேகம் கூடியது. மீட்டர்கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையானது. மெட்ரோ ரயில் திட்டங்கள் உருவானது. எனினும், வளர்ந்த நாடுகள் அளவுக்கு இன்னமும் இந்திய ரயில்வே மேம் படவில்லை. வெள்ளைக் காரர்கள் போட்ட ரயில் பாதைகளிலேயே இன்னும் பயணிக்கிறோம். அதையும்கூட தனியார் மயமாக்கும் முயற்சிகள் கடந்த 8 ஆண்டுகளில் அதிகமாகிவிட்டது. சதாப்தி, தேஜாஸ், வந்தே பாரத் போன்ற ரயில்களின் வேகமும் அதில் உள்ள வசதிகளும் இந்திய ரயில்வேயின் பெருமை. அது தனியார்மயம் ஆகும்வரை.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
கட்டாய மத மாற்றம் நாட்டுக்கு ஆபத்து, மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து?
ஒருவர் எந்த மதத்தையும் தன் விருப்பத்தின் பேரில் கடைப்பிடிக்கலாம். மற்றொரு மதத்திற்கு சொந்த விருப்பத்தின் பேரில் மாறலாம். அரசியல் சட்டம் இதற்கு அனுமதி தருகிறது. கட்டாயமாகவோ, கூட்டமாகவோ மாறும்போது அது சந்தேகத்தை உண்டாக்குகிறது என்கிறது நீதிமன்றம். மத மாற்றம் போலவே, மதத்திற்குள் கடைப்பிடிக்கும் தீண்டாமை, ஒடுக்குமுறை போன்றவையும் நாட்டுக்கு நிரந்தர ஆபத்துகள்தான்.
ச.இராமதாசு சடையாண்டி, வானூர் -விழுப்புரம்
மத்திய அரசை கண்டு தி.மு.க. அரசு பயப் படுவதாக டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே?
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் இருந்து தப்பியவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.