டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
பிரதமர் மோடி கட்சியில் தனக்கு அடுத்ததாக யாரை கை காட்டுவார்?
மோடியையே ஆர்.எஸ்.எஸ்.தான் கை காட்டியது. குஜராத்தில் முதல்வராக இருந்தார் மோடி. கோத்ரா ரயில் எரிப்பு கொடூரத்திற்குப் பிறகு, திட்டமிட்டு நடத்தப்பட்ட மதக் கலவரத்திற்கு அரசின் ஆதரவு இருந்தது. அது இந்து-முஸ்லிம் பிரிவினையை அதிகப்படுத்தியது. இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ். விரும்பியதும் அதைத்தான். அதனால்தான், குஜராத் மாடல்’ எனப் பிரபலப் படுத்தி, மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினர். வெற்றிபெறச் செய்தனர். தற்போதுவரை அது கை கொடுத்து வருகிறது. குஜராத் மாடலுக்கு தேர்தல் களத்தில் மார்க்கெட் குறையும் நிலை ஏற்பட்டால், உத்தரபிரதேச மாடலையோ, மத்திய பிரதேச மாடலையோ ஆர்.எஸ்.எஸ் கை காட்டலாம்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
பொங்கல் பரிசு பணமாக தராததால், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு பலத்த அடி விழும் போல தெரிகிறதே?
பணம் தராவிட்டால் தேர்தலில் பலத்த அடி விழும் என்றால், தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு இவ்வளவு பணம் என பக்காவாகத் தந்து அடி விழாமல் பாதுகாத்து, வெற்றியும் பெற்றுவிடுவார்கள். தேர்தல் கணக்கை மட்டுமே மனதில் கொண்டால், ஓட்டுக்கு நோட்டு என்பது தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளின் அவல நிலை குறித்து?
"பயிர் பாராமையால் கெடும்' என்று கிராமத்தில் சொல்வார்கள். வீடு பராமரிப்பின்மையால் கெடும் என்பது நகரத்து அனுபவம். தற்போதைய அரசு அறிவித் துள்ள பராமரிப்புத் திட்டங் களை சரிவரக் கடைப் பிடித்தால் அவல நிலை இனி உருவாகாமல் இருக்கும்.
ம.தமிழரசி மணி, குப்பம், ஆந்திரா
மக்கள் வாழ்வதில் இந்த ஜென்மம், அடுத்த ஜென்மம் என்று கூறுகிறார்களே அது குறித்து மாவலியாரின் கருத்து?
மறுஜென்மம் குறித்து மெய்ஞானிகளின் பார்வை ஒருவகை. விஞ்ஞானிகள் பார்வை ஒரு வகை. அறிவியல் அறிஞரும் கடைசிவரை பகுத்தறிவாளராக வாழ்ந்தவருமான ஸ்டீபன் ஹாக்கிங், “"சொர்க்கம் என்றும் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்றும் எதுவும் கிடையாது. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை மீதான நம்பிக்கை வெறுமனே நம்முடைய ஆசை மட்டுமே என்று நான் எண்ணுகிறேன். அது குறித்த நம்பகமான சான்று எதுவும் இல்லை. அறிவியல் குறித்து நாம் அறிந்து வைத்துள்ள அனைத்திற்கும் அது நேரெதிரானதாக இருக்கிறது. பிரபஞ்சத்தின் பிரம்மாண்டான வடிவமைப்பைப் போற்றிக் கொண்டாடுவதற்கு நமக்கு இந்த ஒரு வாழ்க்கை வாய்த்துள்ளது. நாம் இறந்துபோகும்போது மீண்டும் தூசியாகிவிடுகிறோம் என்பதுதான் என் எண்ணம். ஒரு விதத்தில் பார்த்தால், நம்முடைய செல்வாக்கு மற்றும் நம் குழந்தைகள் வழியாக அடுத்த தலைமுறைக்கு நாம் தாரை வார்க்கின்ற நம்முடைய மரபணுக்கள் மூலமாக இறப்புக்குப் பின்பும் நாம் வாழ்ந்துகொண்டிருப்போம்'” என்று விளக்குகிறார்.
மாதவ், கோவை
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் பேச்சு எப்படி இருந்தது?
அண்ணாவையும் கலைஞரையும் போல முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சாளர் அல்ல. அவரே தன்னை செயல் பாட்டாளராகத்தான் முன்னிறுத்துகிறார். அந்த செயல்களை அண்ணா -கலைஞரின் மேற்கோள்கள் வாயிலாக மிகத்தெளிவாக சட்டமன்றத்தில் முன்வைத்து அசத்தியிருக்கிறார் முதல்வர்.
ஜெய், கோவை
இரண்டு மாதங்களில் பிரதமர் மோடி, உ.பி. மாநிலத்துக்கு 12 முறை சென்றுள்ளாரே...?
தேர்தல் வருதுல... இன்னும் இரண்டு டஜன் பயணங்கள் கூட மேற்கொள்வார் மகாராசன்.