லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
"போயஸ் கார்டனில் உள்ள ஜெ.வின் வேதா இல்லத்தை அரசுடைமை யாக்கியது செல்லாது' என அவசர அவசரமாகத் தீர்ப்பு வந்துவிட்டதே?
இது அவசரத் தீர்ப்பும் அல்ல. ஆராயாமல் வெளியான தீர்ப்பும் அல்ல. அரசியல் நோக்கத்திற்காக அரசு கஜானா பணத்தை அள்ளி இறைத்த முந்தைய ஆட்சியாளர்களின் மூக்கில் பஞ்ச் விட்ட தீர்ப்பு. அந்தத் தீர்ப்பில், "அரசியல் பிரபலம் என்பதாலோ -கவர்ச்சியை பெற்றதானாலோ -தேர்தல் வெற்றிகளாலோ, ஒருவருக்கு பொதுமக்கள் பணத்தில் நினைவில்லம் அமைக்க முடியாது. மக்கள் வரிப்பணம் 80 கோடியை கொட்டி மெரினாவில் நினைவிடம் எழுப்பிய பிறகு, வீட்டை எதற்கு நினைவில்லம் ஆக்க வேண்டும்? அவர் என்ன காந்தி போன்ற வாழ்க்கை வாழ்ந்தவரா?'' என்றெல்லாம் சரமாரியாக கேட்டுள்ளது நீதிமன்றம்.
மு.செ.மு.புகாரி, சித்தார் கோட்டை
தாய் சுலோசனா சம்பத் அ.தி.மு.க, மகன் இளங்கோவன் காங்கிரஸ் கட்சி. தந்தை குமரியார் காங்கிரஸ். மகள் தமிழிசை பா.ஜ.க. -இதுதான் நம் மண்ணின் ஆரோக்கிய அரசியலா?
இதற்கே இப்படியென்றால்... ஆண்டிப்பட்டியில் அண்ணன் ஒரு கட்சியின் வேட்பாளராகவும், தம்பி இன்னொரு கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டு, இருவரில் ஒருவர் எம்.எல்.ஏ. ஆகியிருப்பதை என்னவென்று சொல்வீர்கள்? எந்தக் கட்சியில் இருப்பது என்பது அவரவர் சொந்த விருப்பம். ஒரு சிலருக்கு அது சுயநல விருப்பமாக மாறிவிடுகிறது. இந்திராகாந்தியும் அவரது கணவர் ஃபெரோஸ்காந்தியும் அரசியலில் மாற்றுத் துருவங்களாக இருந்தனர். மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் மகாராணியான விஜயமாதா சிந்தியா பா.ஜ.கவில் இருந்தார், அவர் மகன் மாதவராவ் சிந்தியா காங்கிரசில் இருந்தார். இருவரும் உயர் பதவிகளை அடைந்தார்கள். மாதவராவ் சிந்தியாவின் சகோதரி வசுந்தரராஜே சிந்தியா பா.ஜ.க.வில் தீவிரமாகப் பணியாற்றி ராஜஸ்தான் மாநில முதல்வரானார். மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர்ஆதித்ய சிந்தியா, காங்கிரசில் பதவிகளை அனுபவித்துவிட்டு... இப்போது பா.ஜ.க.வில் செல்வாக்காக இருக்கிறார்.
ருக்மாங்கதன், வேப்பேரி
50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமிழ்நாடு வெள்ளத்தில் மிதந்ததைத் தவிர வேறு என்ன சாதித்தது?
மழை -வெள்ளம் -புயல் -சூறாவளி -சுனாமி இவை திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஜனநாயக கட்சி ஆட்சி செய்யும் அமெரிக்காவுக்கும், கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் சீனாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். இயற்கைப் பேரிடருக்குப் பிறகு அதிலிருந்து மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதில் அரசு எந்தளவு அக்கறை செலுத்தி வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதே கவனத்திற்குரியது. இந்தியாவைப் பொறுத்தவரை இயற்கைப் பேரிடர்கள் மட்டுமின்றி, செயற்கைப் பேரிடர்களான சாதி -மத -இன சிக்கல்களும் அதிகம். சாதி பேதங்களைக் கடந்து வறுமையை ஒழிப்பது என்பது மிகப்பெரிய சவால். மனித குலத்தின் மீது பேரன்பு கொண்ட தத்துவவாதிகளின் செயல்பாடுகளால்தான் அது முடியும். அந்த வகையில், இந்தியாவில் இடதுசாரிக் கொள்கைவழி ஆட்சி நடக்கும் கேரள மாநிலத்தில்தான் ஏழ்மை நிலை மிகவும் குறைவு (0.71%). அதனைத் தொடர்ந்து நான்காம் இடத்தில் உள்ளது திராவிட சிந்தனையில் ஒரு நூற்றாண்டாக ஊறி -திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அரை நூற்றாண்டைக் கடந்திருக்கும் தமிழ்நாடு (4.9%). கேரளா உள்ளிட்ட முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்கள் சிறிய மாநிலங்களாகும். கேரளாவை விட ஏறத்தாழ இரு மடங்கு எம்.பி.க்களைக் கொண்ட மாநிலமான தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கும் பெரிய மாநிலம்.
இந்தக் கணக்கெடுப்பு என்பது இந்திய ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் சார்பானதாகும்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் முறைப்படி, 12 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பன்முக வறுமைக் குறியீடு அறிக்கையை நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார். வறுமை ஒழிப்பிற்கான பன்முகத் தன்மையில் மிக முக்கிய மானவை கல்வி, மருத்துவம், குழந்தை இறப்புக் கட்டுப்பாடு, தாய்-சேய் நலம், வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவையாகும். இவைஅனைத்திலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதை அந்த அறிக்கை தெளிவு படுத்தியுள்ளது. சிறந்த நிர்வாகக் கட்டமைப்பு -அதனை செயல் படுத்தும் தலைமையாலும்தான் வறுமையை ஒழித்திடும் பணியை முன்னெடுக்க முடியும். திராவிடக் கட்சிகளின் ஆட்சி நிலவும் தமிழ்நாடு அத்தகைய கட்டமைப்பைக் கொண்டுள் ளது. இந்தியாவிலேயே அதிக வறுமை நிலவும் மாநிலம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார்(51.91%) ஆகும். பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்தில் 37.19%, மத்திய பிரதேசத்தில் 36.65%, அசாமில் 32.67% ஆகும்.
ஜி.மகாலிங்கம், காரபாளையம்
பொங்கலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அதற்கான சிறப்பு தொகுப்பை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அரசு போல பணப் பரிசு அறிவிக் காதது ஏன்?
அ.தி.மு.க அரசு எதிர்கொண்டது போன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இப்போது இல்லை என்பதால்.