கண்ணதாசன், மதுரை 10

தமிழ்நாட்டு அரசுத் துறைகள் பற்றி தெரிந்துகொள்ள மக்கள் ஏன் விரும்பவில்லை?

மக்கள் விரும்புவது, தங்களுக்கேற்ற அரசு அமைய வேண்டும் என்பதுதான். அந்த எதிர்பார்ப்புடன்தான் தேர்தலில் வாக்களிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போன்ற அரசு அமைந்து, அதில் உள்ள துறைகள் அனைத்தும் மக்களுக்கான நன்மையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும். மக்கள் ஒவ்வொரு துறையாக கவனிக்க வேண்டியதில்லை. மக்களுக்குத் தெரியும்படி ஆள்பவர்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

சு.வெங்கடேஷ், கோட்டயம்.

Advertisment

காலம் வேகமாகப் போகும்போது நாம் நிதானமாக இருக்க முடியுமா?

கிரிக்கெட் விளையாட்டு, விறுவிறு 20 ஓவர் போட்டிகள் வரை வளர்ந்துவிட்டது. ஐ.பி.எல். ஏலம் கோடிக்கணக்கில் போகிறது. இங்கிலாந்தில் இந்த விளையாட்டு தொடங்கப்பட்டபோது, சூரிய ஒளியில் குளிர்காய்வதற்கான ஒரு நிதானமான விளையாட்டாகத்தான் இருந்தது. இங்கிலாந்து நாட்டு சீமான்கள் பேண்ட்-சட்டை அணிந்து, நாள்கணக்கில் கிரிக்கெட் விளையாடுவார்கள். அதுதான், 5 நாள் டெஸ்ட் மேட்ச்சாக விதிமுறைகளுடன் வகுக்கப்பட்டது. இங்கிலாந்தின் காலனியாக இருந்த நாடுகளிலும் கிரிக்கெட் பரவியது. நிதானமான ஆட்டமாகவே நடந்தது. 5 நாள் ஆடியும் யாருக்கு வெற்றி என்ற முடிவில்லாமல் போன மேட்ச்கள் ஏராளம் உண்டு. நாள் முழுவதும் ஒரு விக்கெட்கூட விழாத மேட்ச்சுகள் இருந்தன. அதன்பின், காலத்திற்கேற்ப ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. அதனடிப்படையில் உலகக்கோப்பைப் போட்டிகள் நடைபெற்றன. அதுவும் போதாது என்பதால், இருபது ஓவர் போட்டிகள் அறிமுகமாயின. ஆட்டம் விறுவிறுப்பானது. அதற்குப் பழகிய இன்றைய இளம் கிரிக்கெட் வீரர்கள், டெஸ்ட் மேட்ச்சும் ஆடுகிறார்கள். நிதானமாகத்தான் ஆடுகிறார்கள். ஆனாலும், அவர்களிடம் இயல்பாகவே உள்ள விறு விறுப்பும் வேகமும், டெஸ்ட் மேட்ச்சின் போக்கையே மாற்றி, வெற்றியா? தோல்வியா? என்ற முடிவைத் தெளிவாக்கிவிடுகிறது. ரப்பர் மாதிரி இருப்பதில்லை. அதற்கு உதாரணம், அண்மை யில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் மேட்ச்சின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்களின் அபார ஆட்டம். வேகத்தின் அளவைப்போலவே நிதானத் தின் அளவையும் மாற்றியிருக் கிறது காலம்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

Advertisment

சிலிண்டர் விலை உயர்வால் இலவச கேஸ் அடுப்புத் திட்டம் பயன் தரவில்லை என்றும் பெண்கள் மீண்டும் விறகு அடுப்புக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் பிரியங்கா காந்தி கூறுகிறாரே?

கேஸ் மானியத்தை அவரவர் அக்கவுண்ட்டில் போடும் திட்டத்தைக் கொண்டு வந்தது மோடி அரசு. அப்போதே பலருக்கும் மானியம் கட் ஆகிவிட்டது. அவர்கள் வசதியானவர்கள் என்பதால் பெரிய தாக்கம் ஏற்படவில்லை. நடுத்தர வர்க்கத்தினர் -ஏழைகள் ஆகியோருக்கான மானியம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. சிலிண்டர் விலை விறுவிறுவென ஏறத் தொடங்கியது. பெட்ரோல் 100 ரூபாய். கேஸ் சிலிண்டர் 1000 ரூபாய் என்பது மோடி அரசின் மகத்தான சாதனை. இந்த நிலையில், ஏழைகளுக்கு இலவச கேஸ் ஸ்டவ் திட்டத்தின் அடிப்படையில் உரிய வகையில் மானிய சிலிண்டர் கிடைக்கா விட்டால் அவர்களால் என்ன செய்யமுடியும்? போகிற போக்கில் இந்தியப் பெண்கள் பலரும் டெல்லிக்குப் போய் சுள்ளி பொறுக்க வேண்டியது தான்போல.

mm

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

மு.க.ஸ்டாலினின் 100 நாள் ஆட்சிக்கு மகுடமாக மின்னுவது எது?

100-வது நாளில் செயல்படுத்திய அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்ட நடைமுறைதான் மற்ற எல்லா திட்டங்களையும் விட முதன்மையானது. அண்ணா, கலைஞர் என தி.மு.க. முதல்வர்களின் சாதனையே புதிய புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியதுதான். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் முன்னெடுக்காத சட்டங்கள் இங்கே நிறை வேற்றப்பட்டுள்ளன. ஆனாலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 50 ஆண்டுகளுக்கு மேல் நிறை வேறாமல் இருந்த நிலையில், அதனை சாதித்துக் காட்டி யிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அந்த சாதனைக்கு மறுநாள், தனது தந்தை கலைஞர் பெற்றுத்தந்த உரிமையின் அடிப்படையில் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். 75-வது சுதந்திர தினத்தைக் குறிக்கின்ற வகையில் நேப்பியர் பாலம் அருகே நினைவுத்தூண் 10 நாட்களில் திட்டமிடப்பட்டு, 8 நாட்களில் நிறைவேறியிருக்கிறது. கான்க்ரீட் தளத்தின் மீது, துருப்பிடிக்காத இரும்பு உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்ட தூண் நிறுவப் பட்டுள்ளது. அதன் உச்சியில் 4 சிங்கங்களும் அசோக சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ளன. அந்தத் தூண் எப்படி உருவாக்கப்பட் டது என்பதை முதல்வர் முன்னிலையில் காணொலியாக விளக்கிக் காட்டினர். இந்தப் பணியை ஏற்றுக்கொண்டு விரைந்து முடித்தவர் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. 100 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதற்கு இரவிலும் ஒளிரும் சுதந்திர நாள் நினைவுத்தூணே சாட்சி.

priyankagandhi

நித்திலா, தேவதானப்பட்டி

7 பேர் விடுதலை?

நீதிமன்றத் தூண்களில் சட்டமும் அரசியலும் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன.