ம.ரம்யாராகவ், குப்பம் -ஆந்திரா

தமிழ்நாட்டுக்கு டாஸ்மாக்கை கொண்டு வந்த முதல்வர் யார்?

அரசே மதுபானங்களைக் கொள்முதல் செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தை தொடங்கியவர் முதல்வர் எம்.ஜி.ஆர். அந்த டாஸ்மாக் மூலமாகவே சில்லறை மதுபான விற்பனைக் கடைகளைத் திறந்தவர் முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தொடங்கி வைத்த கொள்முதல் மற்றும் சில்லறை விற்பனையை கலைஞர் முதல் மு.க.ஸ்டாலின் வரையிலான முதல்வர்கள் அப்படியே கடைப்பிடிப்பது தமிழ்நாட்டின் வழக்கமாகிவிட்டது. முதல்வர்களுக்கு வேண்டியவர்களும் கட்சிக்காரர்களும் சாராய ஆலையைத் தொடங்கி அரசின் டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்து அரசுப் பணத்தில் லாபம் கொழிப்பதும் தொடர்கிறது.

மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

Advertisment

"எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததினால் நாங்கள் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிவிட்டோம்' என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனரே?

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இருந்திருக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கையாள்வது ஒருங்கிணைப்பு. ஆனால், மிகப் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் பா.ஜ.க. அரசு எதையும் கண்டுகொள்வதில்லை. ஜனநாயகத்தின் அடிப்படை நெறிமுறைகள் அனைத்தும் நசுக்கப்படு கின்றன. அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகள் போன்ற நாட்டின் முதுகெலும்புகள். தேர்தல் களத்தில் பலம் இழந்த கட்சிகள், புதிய வியூகம் வகுத்தால் விவசாயிகள் உள்பட பலரது போராட் டத்தையும் வெற்றிபெற வைக்க முடியும்.

செந்தில்குமார் எம். சென்னை-78

Advertisment

திரிணாமூல் கட்சியில் முகுல்ராய் மீண்டும் இணைந்தது மம்தாவுக்கு சாதகமா? பா.ஜ.க.வுக்கு பாதகமா?

திரிணாமூல் காங்கிரசின் தொடக்ககால நிர்வாகிகளில் முக்கியமானவர் முகுல்ராய். பின்னர், பா.ஜ.கவின் வலையில் விழுந்தவர், மீண்டு(ம்) தாய்வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் திரிணாமூல் காங்கிரசுக்குத் திரும்பக்கூடிய சூழல் மேற்குவங்கத்தில் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக, திராவிடமும் கம்யூனிசமும் பா.ஜ.கவின் சித்தாந்தத்திற்கு எதிரானவை. அந்த இரண்டு அரசியல் இயக்கங்களும் இம்முறை சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பா.ஜ.க.வை முறியடித்திருக்கின்றன. ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிதான் இந்தமுறை தேர்தலுக்குப் பிறகும் தனது மாநிலத்தில் பா.ஜ.க.வின் முதுகெலும்பை முறித்துக்கொண்டி ருக்கிறார்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

"தமிழ்நாட்டின் சாலைகளில் பெண் போலீஸ் பாதுகாப்பு பணி போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டாம்'' என முதல்வர் ஸ்டாலின் உத்தர விட்டுள்ளது பற்றி?

பாதுகாப்பு பணி என்பது பல நேரங்களில் தேவையில்லாத ஆணிதான். அதில் ஆண் போலீஸ் காரர்களே அவஸ்தைப்படுவார்கள். பெண் போலீசாரின் நிலை என்ன என்பதை 21 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி, பாதுகாப்பு -பந்தோபஸ்து பணிகளில் ஈடுபட்டவரும், கலைஞர் மரணத்தின்போது அவருக்கு இரங்கல் கவிதை எழுதியதற்காக நெருக்கடியை எதிர்கொண்டு பணியிலிருந்து விலகியவருமான திருச்சி செல்வராணி விளக்கியிருக்கிறார். பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படும் பெண் போலீசாருக்கு, அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கான எந்த ஒரு வசதியும் இருப்பதில்லை. உடல் உபாதை காரணமாக சற்று சுணங்கினாலும் உயரதிகாரிகளின் கோபமான வார்த்தைகளுக்கு ஆளாக நேரிடும். இதுபற்றி எத்தனையோ கோரிக்கைகள் வைக்கப்பட்டும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில்... இதற்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலினை "ஆண் தாய்' என்கிறார் அந்தப் பெண் காவலர். பாதுகாப்பு -பந்தோபஸ்து தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் இன்னும் நிறைய உள்ளன.

mm

வாசுதேவன், பெங்களூரு

கறுப்பு-வெள்ளை திரைப்பட யுகத்தில் திரையில் அசத்திய லாரல்- ஹார்டி ஜோடி பற்றி?

சார்லி சாப்ளின் முதல் மிஸ்டர் பீன் வரை ஆங்கிலத் திரைப்படங்களில் தனித்துவமான நகைச்சுவை நாயகர்கள் உண்டு. சமூகத் தின் அனைத்து கோணங் களையும் தங்களின் நகைச் சுவையால் வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தவர்கள். சொற்கள் தேவையின்றி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்த நகைச் சுவை நாயகர்களில் இரட் டையர்களாகக் கலக்கியவர் கள் லாரல்-ஹார்டி. உடலமைப்பில் இருவரும் எதிர்துருவமாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் போட்டி போட்டிக்கொண்டு செய்யும் நகைச்சுவை அந்தக் காலத்தில் ரசிகர்களுக்கு செம தீனி. லாரல்-ஹார்டியுடன் நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும், இரட்டையர்களாக வசனங்களுடன் குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த நகைச்சுவைக்கு சொந்தக்காரர்கள், நம் தமிழ்த் திரையுலகின் கவுண்டமணியும் செந்திலும்.

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு 77.

முதல்வர் பதவி வகித்த ஓ.பி.எஸ். அவர்கள், கட்சியின் சட்டமன்ற எதிர்க் கட்சி "துணை' தலைவர் பதவியை ஏற்று கொண்டது பற்றி?.

டயருக்கு குனிந்து வணக்கம் வைத்தவரின் அரசியல் நிலைமை, டயருக்கு கீழே வைக்கப்பட்ட எலுமிச்சம் பழம்போல இருக்கிறது.