மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"இந்தியாவை பாரதப் பேரரசு என அழைப்போம்' என்கிறாரே குஷ்பு?

"பாரதப் பேரரசு' என்று இந்தியாவைச் சொல்லிக்கொள்ளலாம். "சக்கரவர்த்தி' என்று பிரதமர் மோடியையும், "சேனாதிபதி' என்று அமித்ஷாவையும் சொல்லிக்கொள்ளலாம். அதெல்லாம் குஷ்புவுக்கு அடுத்தமுறையும் சீட் கிடைக்க வழி செய்யலாம். அரசியல் சட்டப்படி இந்திய அரசு என்பது ஒன்றிய அரசுதான். இது பிரதமருக்கும் அவரது அமைச்சரவையினருக்கும் தெரியும்.

mali

Advertisment

பி.மணி, வெள்ளக்கோவில்

இசை சக்கரவர்த்திகள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இவர்களில் இசைக்கு அதிக பங்களிப்பு வழங்கியவர் யார்?

Advertisment

இருவருமே 1000 படங்களைக் கடந்து இசை யமைத்தவர்கள். தமிழ்த் திரையில் வெவ்வேறு காலகட்டங்களில் இசை சாம்ராஜ்ஜியம் நடத்தியவர்கள். "எங்கே நிம்மதி' என்று இதயத்தை அதிர வைக்கும் பாடலுக்கு எம்.எஸ்.வி., வயலின்களின் அணிவகுப்பால் இசை கோர்த்தார் என்றால், "ராக்கம்மா கையத் தட்டு' என்று மனதை துள்ளவைக்கும் பாடலுக்கு, அதேபோல வயலின்களின் அணிவகுப்பால் அசத்தியவர் இளையராஜா. ஆப்பிரிக்காவின் நாட்டுப்புற இசைக்கருவியைக் கொண்டு, "பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடலின் தொடக்க இசையில் அசத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். தமிழின் தொன்மைமிகு திரு வாசகப் பதிகங்களுக்கு மேற்கத்திய "சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா'வைப் பயன்படுத்தி ஆச்ச ரியப்பட வைத்திருப்பார் இசைஞானி. இருவரும் முதன்முதலில் "மெல்ல திறந்தது கதவு' படத்தில் இணைந்து வழங்கிய "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா' என்ற பாடலைக் குயில்கள் கேட்டாலும் மயங்கும். இருவரது இசையும் காலம் கடந்தும் வாழ்வுடன் இணைந்து மனதை மயங்க வைக்கின்றன. இரவுகளின் தாலாட்டாகவும், இதய அழுத்தத்திற்கு மருந்தாகவும் அமைந்திருப்பவை இருவரின் இசையும்.

*பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

"தன் தேசத்தை கபளீகரம் செய்த கொரோனாவுக்கு எதிராகப் போரிட பிரதமர் கையில் இருக்கும் வில்-ல் "அம்புகள்' இல்லை'' என்று தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளது பற்றி..?

கொரோனா யுத்தத்தில் அம்புகளாக இருப்பவை தடுப்பூசிகள்தான். அவற்றைப் பயன்படுத்தினால், கொரோனா உள்ளே நுழைய பயப்படும். அப்படிப்பட்ட அம்புகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு, சொந்த நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு கையை விரித்தார் பிரதமர். அதைத்தான் அம்புகள் இல்லை என்று சொல்கிறார் காங்கிரஸ் தலைவர் அழகிரி. அவரைவிட இன்னொருவர் அசத்தி யிருக்கிறார். மகாராஷ்டிரா டீ வியாபாரி அணில்மோர் என்பவர்... "ஐயா, தாடிய வளர்க்காதீங்க... வேலைவாய்ப்பு உருவாக்குங்க' என்று கூறி ஷேவிங் செய்ய ரூ.100 மணியார்டர் அனுப்பி வைத் திருக்கிறார்.

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்

சசிகலா ஆடியோ மூலமாக பேசிவருவது எதைக் காட்டுகிறது?

ஆனந்தன் என்ற பெயரில் அமைச்சர் ஒருவர் ஒரு காலத்தில் இருந்தார் என்பது உள்பட பலரையும் இப்போது மீடியாக்களுக்கு அடையாளம் காட்டுகிறது. ஓ.பி.எஸ். தர்மயுத்தம் செய்த இரவில், போயஸ் கார்டன் வாசலில் சின்னம்மாவுக்காக ஸ்டெடியாக குரல் கொடுத்த சி.வி.சண்முகம் போன்றவர்களின் இன்றைய நிலையையும் வெளிப்படுத்து கிறது.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

மாநிலக் கட்சிகளை ஏன் மோடி எதிரிக் கட்சிகளாக பார்க்கிறார்?

குஜராத் என்ற மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மோடி. அப்போது மாநிலங்களின் வளர்ச்சிக்காக டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவருக்கு மாநிலங்களின் நிலைமை பற்றி நன்றாகவே தெரியும். ஆனாலும், பிரதமராக இருப்பதால் மாநில அரசுகள் தன் விருப்பப்படி நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார். பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மாநிலக் கட்சியின் தலைவர்தான். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் மாநிலக் கட்சித் தலைவர்தான். ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டியும் அப்படித்தான். இவர்களோ இவர்களின் கட்சிகளோ பிரதமர் மோடிக்கு எதிரிகளாகத் தெரிவதில்லை. அண்மையில் தேர்தல் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் இந்த மூன்றிலும் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அந்தக் கட்சிகளின் சார்பில் முதல்வர் பொறுப்பேற்றவர்கள் மாநில உரிமைகளை வலியுறுத்துகிறார்கள். ஒன்றிய அரசு என்கிறார்கள். பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகளின் மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். இதுதான் பிரதமரை டென்ஷனாக்குகிறது. இதில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள தி.மு.க.வும், மேற்குவங்கத்தில் ஆட்சி அமைத்துள்ள திரிணாமூல் காங்கிரசும் மாநிலக்கட்சிகள்தான். கேரளாவில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்தியக் கட்சி. அப்படியிருந்தும் எதிரியாகத்தானே பார்க்கிறது மோடி அரசு. அதன் பிரச்சினை, மாநிலக் கட்சிகளல்ல... மாநில உரிமைகளுக்கு ஆதரவான குரல்.

வாசுதேவன், பெங்களூரு

முதல் நாள் முதல் காட்சி சினிமா பார்க்கும் திரில்...?

விடிய விடிய தியேட்டர் வாசலில் பேனர் கட்டி, விடிந்த பிறகு கவுண்ட்டரில் நின்று டிக்கெட் வாங்கி முதல் ஷோ பார்த்த ரசிகர்களின் காலம் மலையேறிவிட்டது. ஓ.டி.டி.யில் ரிலீசாகும் படங்களை நள்ளிரவில் பார்த்து, விடிந்ததும் சோஷியல் மீடியாவில் விமர்சனம் எழுதும் காலம் வந்துவிட்டது. இதுதான் இளையதலைமுறைக்கு த்ரில்.