ம.தமிழ்மணி குப்பம், ஆந்திரா
ஒரு மனிதனுக்குத் தேவை பணமா அல்லது நல்ல குணமா?
மனிதனுக்குத் தேவை குணம். அந்த மனிதனிடமிருந்து மற்றவர்களுக்குத் தேவை பணம்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்*
""தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்'' என்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை பற்றி?
ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் அதிகாரப்பூர்வமாக இரண்டாகப் பிரிவதற்கு முன்பாகவே, "தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கவேண்டும்' என சமுதாய அமைப்புகள் சில கோரிக்கை வைத்து வந்தன. டாக்டர் ராமதாசும் அப்போது அதை வலியுறுத்தினார். இப்போது "மூன்று தமிழகம்' என்கிறார். மாநிலத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள கட்சிகளால் ஒட்டுமொத்த தேர்தல் களத்தில் பெரும் வெற்றியைப் பெற முடியாது. மாநிலங்கள் பிரிக்கப்பட்டால், தங்களுக்கு செல்வாக்குள்ள மாவட்டங்களே புதிய மாநிலங்களில் ஒன்றின் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியதாக அமையும். மாநிலப் பிரிவினைக்கான கோரிக்கைகளில் இது அடிப்படையானது. பொருளாதார வளர்ச்சி -வேலைவாய்ப்பு -கட்டமைப்பு -தொழில் முன்னேற்றம் இவற்றில் உள்ள பாரபட்சமான நிலைகளைக் காட்டி புதிய மாநிலங்களுக்கான கோரிக்கைகளை முன்னிறுத்துவது பல மாநிலங்களிலும் வழக்கமாக இருக்கிறது. எனினும், மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைத்து, ஒற்றை ஆட்சி நடத்த நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரத்தனமான அணுகுமுறையை எதிர்கொள்ள, மொழிவழி மாநிலங்கள் ஒன்றுபட்டு நிற்பதே தற்போதைக்கு சரியானதாக இருக்கமுடியும். v
ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில்
கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் தவிப்பதற்குக் காரணம் அரசின் பொறுப்பற்ற செயல்பாடா அல்லது மக்களுக்கு அரசு போதிய விழிப்புணர்வை வழங்காததன் காரணமா?
கும்பமேளாவுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறவர்களும் பக்தர்கள்தான். சித்திரைத் திருவிழாவைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறவர்களும் பக்தர்கள்தான். கும்பமேளாவுக்கு அனுமதி அளித்ததும், சித்திரைத் திருவிழாவில் மக்கள் கூடுவதற்கு தடை விதித்ததும் பக்தர் களா... அரசுகளா? தேர்தல் பரப் புரைகளுக்காக மக்கள் கூடும்போது, அதை வாக்குகளாகக் கணக்கிட்டு விட்டு, அதன்பிறகு "கூட்டம் கூடாதீர்கள்' எனக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு மக்களா பொறுப்பு?
நித்திலா, தேவதானப்பட்டி
ரணகளத்திலும் குதூகலம் என்றால் என்ன?
ஊரடங்கு, தடுப்பூசி, பொருளாதார நெருக்கடி எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஐ.பி.எல். கிரிக்கெட் மேட்ச்களை பார்ப்பவர்களைக் கேளுங்கள். சொல்வார்கள்.
---------------
தேர்தல் களம்
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டபொழுது கடைசி இரண்டு பெட்டியில்தான் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன் என்கிறாரே எடப்பாடி?
தேர்தல் களத்தின் வெற்றி-தோல்விகள் எப்படி வேண்டுமானாலும் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு. எடப்பாடி பழனிசாமி, 1989 தேர்தலில் அ.தி.மு.க. ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர். அந்தத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்திலும் அதனைச் சுற்றிய பகுதிகளிலும் சேவல் நன்றாகக் கூவியது. ஜெயலலிதாவை எதிர்க்கட்சித் தலைவராக்கியது. அதன் தாக்கம், எடப்பாடி தொகுதியிலும் இருந்திருக்கும். வாக்கு எண்ணிக்கையில் முன்னிலைக்கான வித்தியாசம் குறைவாக இருக்கும்போது, எப்படி வேண்டுமானாலும் முடிவுகள் அமையக்கூடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கான தேர்தல் தனியாக நடந்து, வாக்குகள் எண்ணப்பட்டபோது பல சுற்றுகள்வரை அ.தி.மு.க முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், கடைசி சுற்றுகளில் முன்னேறி வெற்றிபெற்றார் தி.மு.க வேட்பாளர். 2016 சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் கடைசி சுற்றுவரை முன்னேறி வந்த தி.மு.க வேட்பாளர் சிவசங்கர், இறுதி ரவுண்டில் சொற்ப வாக்குகளில் பின்தங்கி வெற்றி வாய்ப்பை இழந்தார். 1980-ல் அண்ணாநகரிலும், 1991-ல் துறைமுகத்திலும் கலைஞரின் வெற்றி இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே உறுதியானது. அதுவரை இழுபறிதான். ஒரு தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளிலும் கட்சியின் செல்வாக்கு, கூட்டணியின் பலம், அங்கு நிறைந்திருக்கும் சாதிகளின் அடிப்படையிலான வாக்கு, வேட்பாளருக்குரிய தனி செல்வாக்கு, அடிப்படைப் பிரச்சினைகள் எனப் பல காரணங்கள், வாக்குகளைத் தீர்மானிக்கின்றன. அந்த அடிப்படையில் கடைசி இரண்டு பெட்டிகளோ, ஒரேயொரு பெட்டியோகூட வெற்றியைத் தரலாம். தோல்வியடையவும் வைக்கலாம். பிளவுபட்ட அ.தி.மு.க.வின் ஒரு பிரிவின் சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, கடைசி ரவுண்டுகளில் ஜெயிப்பது என்பது அன்றைய சூழலில் முக்கியமான வெற்றிதான். இப்போதோ ஓ.பி.எஸ்.ஸால் உடைந்துபோன அ.தி.மு.க.வை மோடியும் அமித்ஷாவும் பசை தடவி ஒட்டவைத்து, பதவிகளைப் பங்கிட்டு, ஊழல் புகார்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, முழுப் பதவிக்காலத்தையும் அனுபவிக்க வைத்து, முதலமைச்சர் வேட்பாளரையும் தேர்வு செய்து, இரட்டை இலை சின்னத்தைப் பாதுகாத்து, தேர்தல் களத்துக்கு அனுப்பிவைத்த நிலையில்... கடைசி இரண்டு பெட்டிகள் பற்றி பேசுவது, ஓட்டுப் பெட்டியையா வேறு ஏதேனும் பெட்டிகளையா?