கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
இந்த தடவையாவது பணநாயகம் தோல்வி யடைந்து ஜனநாயகம் வெற்றி பெறுமா?
ஆசைப்படுவது தப்பில்லை. பேராசைப்படக்கூடாது
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77
எம்ஜிஆரை கமல் சொந்தம் கொண்டாட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறாரே, தலைமைப் பண்பு கொண்ட ஒரு தலைவரை எவரும் சொந்தம் கொண்டாடுவது தவறில்லையே?
இது தலைமைப் பண்புக்கான சண்டை அல்ல. இமேஜ்-புகழ்-செல்வாக்கு இவற்றால் உருவாகியுள்ள ஓட்டு வங்கிக்கான மல்லுக்கட்டு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mavaliansswers.jpg)
வாசுதேவன், பெங்களூரு
கிரிக்கெட்டில் சிகப்பு, வெள்ளை, பிங்க் வண்ண பந்துகள் வலம் வந்துவிட்டன. அடுத்து எந்த வர்ணத்தை எதிர் பார்க்கலாம்?
பகல் நேர கிரிக்கெட் ஆட்டங்கள் மட்டும் நடந்தபோது சிவப்பு பந்துகள் பயன்படுத்தப்பட்டன. இரவு நேர ஆட்டங்களுக்காக வெள்ளை பந்துகள் அறிமுகமாயின. இப்போது பகல்-இரவு ஆட்டங்களுக்கேற்ப சிவப்பும்- வெள்ளையும் கலந்த பிங்க் பந்துகள் வந்துள்ளன. காலத்திற்கேற்ப ஆட்டமும் விதிகளும் மாறுவதுபோல பந்துகளும் கலர் கலராக வரலாம்.
மு. முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்
கமல் தமிழ்நாட்டை ஆள நினைத்தால் ஒரு குடும்பம்கூட உருப்படாது என்கிறாரே எடப்பாடி?
கமல் கட்சி ஜெயித்து, பெரும்பான்மை கிடைத்து, ஆட்சிக்கு வந்து முதல்வராகட்டும். அதற்கு முன், அம்மா ஆட்சி என அடிக்கடி சொல்லும் எடப்பாடிக்கு ஜெயலலிதா ஆட்சியில் குடும்பங்கள் எப்படி இருந்தன என்பது மறந்திருக்காது. சசிகலா தனது கணவர் நடராஜனுடன் குடும்பம் நடத்த முடியவில்லை. ஜெ.வாலேயே வளர்ப்பு மகன் என அறிவிக்கப்பட்டு ஆடம்பரமாக திருமணம் செய்துவைக்கப்பட்ட சுதாகரனும் நிம்மதியாக குடும்பம் நடத்த முடியவில்லை. அ.தி.மு.கவில் பொறுப்பில் இருந்த சுலோச்சனா சம்பத்தை அவர் மகன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராகப் பேச வைத்து தாய்-மகன் பாசத்தையும் சிதைக்கப் பார்த்தார் அம்மா. தன் அப்பா தாமரைக்கனி செத்துப்போனதற்குக்கூட, அவரது மகனும் அமைச்சராக இருந்தவருமான இன்பத் தமிழனை போக விடாமல் செய்தவர் ஜெயலலிதா. இப்படி எத்தனையோ குடும்பக் கதைகள் உண்டு.
பி.ஜெயப்பிரகாஷ், தேனி.
தேசிய தலைவரான "அம்பேத்கர்' அவர்களை ஜாதி தலைவராக மாற்ற "திருமாவளவன்' முயற்சிப்பதாக ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் குற்றம்சாட்டியுள்ளாரே?
"நான் இந்துவாகப் பிறந்தேன். ஆனால், இந்துவாக இறக்க மாட்டேன்' என்று சொல்லி, புத்த மதத்தில் சேர்ந்து, இறப்பின்போது பௌத்தராகவே அறியப்பட்டவர் அம்பேத்கர். அவரை ஓட்டுக்காக அர்ஜூன்சம்பத்தின் ஒரிஜினல் ஓனர்கள் பயன்படுத்தும் மோசடியைப் பார்க்கும்போது, சனாதான எதிர்ப்பாளராகவும்- இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவமான அம்பேத்கரை அரசியல் களத்தில் பயன்படுத்துவதில் திருமா வளவன் நேர்மையாகவே செயல்படுகிறார்.
மல்லிகா அன்பழகன், சென்னை-78
அச்சு ஊடகங்களுக்கு சலுகைத் திட்டங்களை அறிவிக்க வேண்டுமென்ற கமல்ஹாசன் கோரிக்கை பற்றி?
அரசியல் பிரபலங்கள் கேமரா வெளிச்சத்திற்கு ஆசைப்படும் காலத்தில், கேமரா வெளிச்சமே வாழ்க்கையாக இருந்து அரசியலுக்கு வந்த கமல், அச்சு ஊடகங்கள் மீது அக்கறை செலுத்தியிருப்பது ஆச்சரியமானது. அவசியமானதும்கூட.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
இரண்டு கட்சிகளுக்கு மேல் கூட்டணி வைக்கக்கூடாது என்று சட்டம் வந்தால்?
கூட்டணி என்ன குடும்பக் கட்டுப்பாடு திட்டமா? இரண்டுக்கு மேல் கூடாது என்பதற்கு!
_____________
தேர்தல் களம்
அயன்புரம் த.சத்யநாராயணன், சென்னை 72
தேர்தல் வெற்றி-தோல்விகளில் சின்னங்களின் பங்கு என்ன?
சின்னத்தை சின்ன பிரச்சினையாக நினைத்து ஏமாந்த கட்சிகளும் உண்டு. சின்னத்தை பெரியளவில் மக்கள் மனதில் பதிய வைத்து வென்ற கட்சிகளும் உண்டு. தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் இருந்தபோது நடித்த படங்களில் உதயசூரியன் சின்னத்தைக் காட்டும்படி செய்வார். அ.தி.மு.க.வை அவர் தொடங்கிய பிறகு, இரட்டை இலை சின்னத்தை தனது திரைப்படம் வழியாகவும் பிரபலமடையச் செய்து ஆட்சியைப் பிடித்ததுடன், மூன்று முறை தொடர்ந்து முதல்வரானார். பொதுவாக வெற்றியின் (Victory) அடையாளமாக இரட்டை விரலைக் காட்டுவது உலக வழக்கம். எம்.ஜி.ஆர். இரட்டை இலை சின்னத்திற்காக இருவிரல் காட்டினார். இந்திராகாந்தி, கை சின்னத் திற்காக தன் உள்ளங்கையை உயர்த்திக் காட்டினார். எளிதாக மக்களிடம் இது சென்று சேர்ந்தது. கலைஞர் இதனை கவனித்தார். அவரது கட்சி சின்னம் உதயசூரியன். அதனால் தனது தொண்டர்களிடம், அ.தி.மு.கவினர் இரு விரல்களைக் காட்டினால், நீங்கள் 5 விரல்களை விரித்துக் காட்டுங்கள். அதில் உதயசூரியன் அடங்கியிருக்கிறது என்றார். இன்றுவரை, தி.மு.கவினர் தங்கள் தேர்தல் பரப்புரைகளில் 5 விரல்களை விரித்துக் காட்டுகின்றனர். வெற்றியைக் குறிக்கும் இரு விரல் ஒரு கட்சிக் கும், உள்ளங்கை உயர்த்துவது இன்னொரு கட்சிக்கும், ஐந்துவிரல் விரிப்பது மற்றொரு கட்சிக்கும் சின்னத்தை வெளிப்படுத்தும் பெரிய அடையாளமாக மாறிவிட்டது. இந்தக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்ததிலும் இந்த சின்னங்களும் அதற்கான சைகைகளும் துணை நின்றன. அதனால்தான் மற்ற தலைவர்களும் முஷ்டியை உயர்த்துவது, தம்ஸ்அப் காட்டுவது என கைகளையே தேர்தல் கள ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/mavaliansswers-t.jpg)