க.சண்முகம், திருப்பூர்
இஸ்லாமியர்களை கேவலமாகப் பேசிவரும் மோடியை இஸ்லாமிய, அரபு நாடுகள் புறக்கணிக்கவோ, கண்டனம் தெரிவிக்கவோ இல்லையே...?
இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடை தொடர்ந்து மேற்கொண்டுவரும் அமெரிக்காவை இஸ்லாமிய, அரபு நாடுகள் என்ன செய்துவிட்டன? சர்வதேச அந்தஸ்தில் அமெரிக்காவின் நிலை நம்பர் 1 என்றால், முதல் ஐந்தாறு இடங்களுள் இந்தியா வரும். வலுவான நாட்டை, பிற நாடுகள் பகைத்துக்கொள்ளத் தயங்கும். இஸ்லாமிய, அரபு நாடுகள் தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து சர்வதேச அளவில் மிகப்பெரிய சக்தியாக வளராத வரை இந்த நிலைதான் நீடிக்கும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
மீண்டும் பணமதிப்பிழப்பை கொண்டுவருவாரா பிரதமர் மோடி?
இது என்ன செத்து செத்து ஆடும் ஆட்டமா? ஒரு முறை இந்த ஆட்டம் ஆடியதற்கே மொத்த இந்தியர்களின் அன்ட்ராயர் கிழிந்துவிட்டது. எத்தனையோ உயிர்கள் போய்விட்டன. நகைச்சுவைக்குக் கூட மீண்டும் பணமதிப்பிழப்பு வருமா என கேட்காதீர்கள்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
தனித்து நிற்பது போன்ற பேராசை காங்கிரஸýக்குக் கூடாது என இளங்கோவன் கூறியிருக்கிறாரே?
தமிழகத்தில் காங்கிரஸின் பலம் என்னவென்பது செல்வப்பெருந்தகைக்கும் தெரிந்திருக்கும். அவர் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே உத்வேகமூட்டுவதற்காகவும், தமிழகத்தில் கட்சி வளர்ச்சியடைய வேண்டுமென்பதற்காகவும் பேசியிருப்பார். அதனால் அவர் பேச்சில் தவறு ஒன்றும் இல்லை. பொதுமேடையிலோ, இல்லை கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையேவோ இதுபோன்று வீராப்பாய் பேசினால்தான் தவறு. கூடவே, பேச்சில் காட்டும் தீவிரத்தை காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை வளர்ப்பதிலும் காட்டினால் நன்றாக இருக்கும்.
ஜெ.மணிகண்டன், வேலூர்
நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியைத் தேர்வுசெய்திருப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமான விஷயம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது...?
அரசியலுக்குத்தான் வரவில்லை... அரசியல் அபிப்ராயமாவது தெரிவிப்போம் என பேசியிருப்பார். ஏற்கெனவே ராமர் கோவில் விழாவில் பங்கேற்று பா.ஜ.க.வுக்கு நெருக்கமானதுபோல ஒரு தோற்றம் எழுந்துவிட்டதல்லவா! காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாய்ப் பேசி தராசுத் தட்டை சமன் செய்வதற்காக இந்த ஸ்டேட்மெண்ட் வந்திருக்கலாம்.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"இந்த பத்தாண்டு ஆட்சி ட்ரெய்லர்தான்... இனி பார்க்கப்போவதுதான் மெயின் பிக்சர்' என்கிறாரே மோடி?
அடுத்த தேர்தல் வரும்போது இந்த பதினைந்தாண்டும் ட்ரெய்லர்தான். அடுத்து வரப்போவதுதான் மெயின் பிக்சர் என்பார் மோடி. அவருக்கு மெயின் பிக்சரைக் காட்டும் எண்ணமே இல்லை. ட்ரெய்லரைக் காட்டியே காலத்தைக் கடத்திவிடலாம் எனப் பார்க்கிறார்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
தமிழிசை -விஜயதாரணி இருவருக்கும் என்ன வித்தியாசம்?
இருவருமே பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இருவரும் தென்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழிசை முதலிலேயே பா.ஜ.க.வைத் தேர்வு செய்துவிட்டார். விஜயதாரணி, தனது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லையென காங்கிரஸிலிருந்து பா.ஜ.க. பக்கம் தாவி, அங்கும் சீட்டுக் கொடுக்கப்படாமல் ஏமாற்றத்தில் இருக்கிறார். தமிழிசைக்கு ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டிருந்தும், என்ன இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினராகி அமைச்சராவதுபோல் வருமா என ஆசைப்பட்டு போட்டியிட்டுத் தோல்வியுற்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்கிறார். இன்னும் அமித்ஷாவிடம் திட்டு வாங்கவில்லை விஜயதாரணி. இவ்வளவு நாள் கட்சியிலிருந்தும், எல்லாரும் பார்க்க இப்படி திட்டிப்புட்டாரே மனுஷன் என மனக்குமைச்சலில் இருக்கிறார் தமிழிசை.
எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு
கொங்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டையாக மாறியிருப்பது குறித்து?
ஓட்டையும் கோட்டையாய் மாறும். கோட்டையும் ஓட்டையாய் மாறும். இதை மனதில் வைத்துக்கொண்டு, கோட்டை கோட்டையாய் நீடிக்க மக்களின் இதயக் கோட்டையில் நீடிப்பதற்கான வழிகளை எப்போதும் தி.மு.க. பின்பற்றவேண்டும்.
க.முருகேசன், காரைக்கால்
குவைத் தீ விபத்து?
இதயத்தை நொறுங்கவைக்கும் செய்தி. குவைத் நாட்டின் மங்காப் நகரில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 50 பேர் பலியாகியிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் (கிட்டத்தட்ட 42 பேர்) இந்தியர்கள். அதில் 7 பேர் தமிழர்கள். 23 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.