அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
திருக்குறள் ஓர் ஆன்மிக புத்தகம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறுகிறாரே?
ஆளுநருக்கு கடிதம் எழுதி, இன்பத்துப் பாலில் இருக்கும் ஒவ்வொரு குறளின் ஆன்மிக அர்த்தத்தை விளக்கச் சொல்லிக் கேட்கவேண்டியதுதான். வாதத்துக்கு மருந்துகொடுத்து குணப்படுத்தலாம். பிடிவாதத்துக்கு மருந்தில்லை என்பதுதான் யதார்த்தம்.
மல்லிகா அன்பழகன், சென்னை-78
பாகிஸ்தானில் இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக சிங்கப்பூரில் நம் முப்படை தளபதி ஒப்புக்கொண்டுள்ளது பற்றி?
ராஜஸ்தானின் துணை முதலமைச்சர் தியா குமாரி. இவர் சமீபத்தில் மேடையொன்றில் தான் எம்.பி.யாக இருந்தபோது, கிடைத்த கல்வெட்டொன் றில் ஹல்திகாட்டியில் நடந்த அக்பருடனான போரில் மகாராணா பிரதாப் தோற்றார் என்றிருந்ததை வென் றார் என மாற்றியதாக தைரியமாகப் பேசியிருக் கிறார். சமீபத்திய பஹல் காம் தீவிரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடன் நடந்த உரசலில், பாகிஸ் தானையே சூறையாடிவிட்ட தாக பிரதமர் முதல் பா.ஜ.க.வின் அமைச்சர்கள் வரை மார்தட் டிக்கொண்டிருந்தார்கள். நாளை, கல்வெட்டை ஆராய்ச்சி செய்யும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் மிக எளிதாக தியாகுமாரியின் தில்லுமுல்லுவைக் கண்டு பிடித்துவிடுவார். மோடி வகை யறாக்களின் தில்லுமுல்லு இப்போதே அம்பலமாகிவிட் டது. இதே வகையறாதான், தமிழகத்தின் கீழடி உள்ளிட்ட தொல்பொருள் ஆய்வை வரலாற்று ஆதாரங் களுடன் கொடுத்தாலும், திருத்தி எடுத்துக் கொண்டு வா என நமக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
த.வெ.க. தலைவர் விஜய் பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளாரே இ.பி.எஸ்.?
ஆட்சியிலிருக்கும் கட்சியை நோக்கி போகஸ் இருக்கட்டும் என்பதற்காகச் சொல்லியிருக்கலாம். அல்லது, இந்தத் தேர்தலில் இல்லாவிட்டாலும் எதிர்வரும் தேர்தல்களில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமையலாம். தாறுமாறாக இப்போது விமர்சித்துவிட்டால், கூட்டணி அமைக்கும்போது குடைச்சலாக இருக்கும் என்ற முன்நோக்கில் பார்த்துப் பேசுங்கப்பா எனச் சொல்லியிருப்பார் எடப்பாடி.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
என் குலசாமி ராமதாஸ் எனக்கூறி அன்புமணி ஆட்களை தன்பக்கம் இழுத்துவருவது குறித்து?
சில நேரங்களில் தந்தையிடமிருந்து மகனுக்கான அதிகார மாற்றம் சுமுகமாக நடந்துவிடும். சில சமயங்களில் ஷாஜகான்- ஔரங்கசீப் கணக்கில் ஆட்சி மாற்றத்துக்கு இடைஞ்சல் தரும் தந்தையைத் தூக்கிக்கொண்டு போய் சிறையில் வைத்த கதைகளும் நடந்துவிடும். குலசாமி என பாதத்துக்கு பூத்தூவியபடியே, அவரது காலுக்குக் கீழ் குழிபறித்துக்கொண்டி ருக்கிறார் அன்புமணி. "பெத்தவன்டா, உன்னை எனக்குத் தெரியும்' என்றபடியே செக்மேட் வைக்கிறார் ராமதாஸ்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
ஒன்றிய அரசு என்று சொல்வதே தவறு. நீங்கள் பிரிவினை வாதத்தை திணிக் கிறீர்கள் என்று கூறு கிறாரே சி.பி.ராதா கிருஷ்ணன்...?
பிரிவினைவாதமுமில்லை… வெங்காயமு மில்லை. அந்த வார்த்தையின் பொருள் அதுதான். மாநிலங்களின் உரிமைகளை விழுங்கிவிட்டு அவர்களை பொம்மைகளைப் போல வைத்திருக்க விரும்புகிறது. அதேபோல, பா.ஜ.க. ஆட்சியிலில் லாத மாநிலங்களில், ஆளுநர்களிடம் மாநில முதல்வர்கள் சரணாகதியாக வேண்டுமெனவும் விரும்புகிறது.
ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு
நான் இதுவரை எந்த கட்சியிலும் இல்லை,… இனி சேர்வதாக இருந்தால் எந்த கட்சியில் சேரலாம்?
யாருக்கு வாக்களிப்பது, எந்தக் கட்சியில் சேர் வது என்பது போன்ற விவகாரங்களுக்கு மாவலி பயிற்சி முகாமும் நடத்துவதில்லை. ஆலோசனை அறிவுரையும் வழங்குவதில்லை. உங்கள் சொந்த மூளையை உபயோகித்து பயனடைந்துகொள் ளுங்கள்.
ஜே.சரவணன், மதனகோபாலபுரம்
ரிசர்வ் வங்கியின் ஒன்பது விதிமுறைகளால், நகைகள் திருட்டுப் போவது குறையுமா?
இந்த விதிமுறைகள் எல்லாம் முறையாக நகை வாங்கி விற்பவர்கள், அடகு வைப்பவர்களுக்கு. திருடி விற்கிறவர்களுக்கு எப்போதும் தனி வழி உண்டு. அவர்களிடம் வாங்குவதற்கென்றே தனி நபர்கள் இருக்கவே செய்வார்கள். ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளால் நகைத் திருட்டு குறையும் என்ற உங்கள் கற்பனைக்காக, அரசிடம் சிபாரிசு பண்ணி ஏதாவது விருது வாங்கித் தரலாம்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
விஜயகாந்த் இருக்கும் வரை தி.மு.க. கூட்டணியை விரும்பாத பிரேமலதா, தற்போது அதை விரும்புவது போல் தெரிகிறதே?
எல்லாம் அக்கரைக்கு இக்கரை பச்சை கதைதான். தவிரவும், அ.தி. மு.க.வுடன் கூட்டணி வைக்கும் போது கேட்ட நியமன எம்.பி. ஆதாயமும் கிடைக்கவில்லை. அதனால் திசையை மாற் றிப்பார்க்கலாம் என்ற மன நிலைக்கு வந்திருப்பார்.