கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர் பேட்டை அ.தி.மு.க. மாவட்ட வழக் கறிஞர் பிரிவு செயலாளர் அட்வகேட் கிருஷ்ணன். இவர் கடந்த 30 ஆண்டுகாலமாக அ.தி.மு.வில் உள்ளார். இவர் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டச் செயலாளர் குமரகுருவின் விசுவாசி.
அத்தகைய விசுவாசியான கிருஷ்ணனை, குமரகுரு அடித்ததாக ஆகஸ்டு 5-ஆம் தேதி தகவல் வர, நக்கீரன் ஆகஸ்ட் 07-09 இதழில், “"நிர்வாகியை அடித்த மா.செ! அ.தி.மு.க. பரபரப்பு!'” என சுருக்கமாகப் பதிவுசெய்தோம்.
உண்மையில் அன்று என்னதான் நடந்தது?
குமரகுரு பிறந்தநாள், திருமண நாள், பொதுக்கூட்டம் என எந்த நிகழ்ச்சி நடந்தாலும் கட்டவுட், போஸ்டர் என விளம்பரப்படுத்துவதில் முன்னணியில் இருந்தவர் அட்வகேட் கிருஷ்ணன். குமரகுரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருக்காக கிருஷ்ணன் சுமார் 2 கோடிக்கு மேல் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில், ஒவ்வொரு தேர்தலின்போதும் விழுப்புரம் நாடாளுமன்ற தனித் தொகுதியில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தனித் தொகுதியில் போட்டியிட கிருஷ்ணனுக்கு வாய்ப்பு கொடுப்பதாகக் கூறி பணம் வாங்கியதாக கட்சியினர் கூறுகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று மிகுந்த நம்பிக்கையோடு கிருஷ்ணனும் கட்சியினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், காந்தலவாடி பாக்கியராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதில் கிருஷ்ணன் ஏமாற்றமடைந்தார். தேர்தல் பணியிலும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் குமரகுரு ஆதரவாளர்கள் வாட்ஸ்அப் குழுவில் அ.தி.மு.க. தோல்விக்கு கிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்தனர். கிருஷ்ணன் பானை சின்னத்திற்குத்தான் தன் வாக்கைச் செலுத்தியிருப்பார் என்று வாட்ஸ்அப் குழுவில் நக்கலாக பதிவுசெய்தனர். இதற்கு, “"என்னுடைய உடலில் அ.தி.மு.க. ரத்தம்தான் ஓடுகிறது. ஒருபோதும் ஓட்டை மாற்றிப் போடமாட்டேன்'” என்று கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.
திடீரென அந்தக் குழுவிலிருந்து கிருஷ்ணன் நீக்கப்பட்டார். அவருடன் ஆதிதிராவிடர்கள் சிலரையும் நீக்கினர். இதனால் கட்சிக்குள் பட்டியல் இனத்தவர் மீது பாகுபாடு பார்க்கப்படுவதாக புகைச்சல் எழுந்தது.
இந்தச் சூழலில்தான் கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படும் என்று உளுந்தூர்பேட்டை நகரச் செயலாளர் துரை, கிருஷ்ணனை அழைத்து காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம் என்று கூறி குமரகுருவிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை கந்தசாமி புரத்திலுள்ள குமரகுரு வீட்டிற்குச் சென்றனர். அங்கே வாக்குவாதம் முற்றி "என் வாழ்க்கையைக் கெடுத்ததே அண்ணன்தான்' என்று குமரகுரு விடமே சொல்லியுள்ளார் கிருஷ்ணன். இதனால் உணர்ச்சிவசப்பட்ட குமரகுரு, திடீரென வழக்கறிஞர் கிருஷ்ணனுடைய கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார். இதில் காயமடைந்த கிருஷ்ணன் குமரகுரு வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். பதறிப்போன நகரச் செயலாளர் துரை, உடனடியாக கிருஷ்ணனை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று, அங்கிருந்து விழுப்புரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து, கிருஷ்ணன் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணனிடம் கேட்டதற்கு, “"கட்சிக்காக என் உயிரைக் கொடுத்து வேலைசெய்தேன். அதிலும் அண்ணன் குமரகுரு வளர்ச்சிக்கு என்னால் இயன்ற பணிகளை திறம்படச் செய்தேன். நிறைய செலவுசெய்து தற்போது நிர்க்கதியாக நிற்கிறேன். நகரச் செயலாளர் துரை நேரில் பேசுவோம் என்று அழைத்துச்சென்றார். நலிந்த நிலையில் உள்ளேன். என் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டேன். அப்போது அவர் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார். பின்பு என் கழுத்தைப் பிடித்து நெரிக்க ஆரம்பித்துவிட்டார். கட்சிக்காக இரவு, பகல் பாராமல் உழைத்த என்னை மாவட்டச் செயலாளரே கொலைசெய்யும் அளவிற்கு துணிந்துவிட்டார். அ.தி.மு.க. தொண்டன் யாருக்கும் இந்தநிலை வரக்கூடாது''” என்று கண்ணீர்விட்டுக் கதறுகிறார் அட்வகேட் கிருஷ்ணன்
கிருஷ்ணன் மனைவி கவிதாவோ, “"அன்று என் கணவருடன் நானும் உடன் சென்றேன். என் கண்முன்னே என் கணவரின் கழுத்தை நெரித்தார் குமரகுரு. கணவர் உயிருக்கு மட்டுமல்ல... எங்கள் குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து உள்ளது. கட்சித் தலைமை இதற்கெதிராக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்கிறார்
"குமரகுருவின் சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எடைக்கல். இங்கே இவருக்கும் அவர் சகோதரர் சாய்ராமுக்கும் ஏராளமான நிலங்கள் உள்ளன. 15 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்ததைப் பயன்படுத்திகொண்ட குமரகுரு கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை பகுதிகளிலுள்ள காவல்நிலையங்களில், வருவாய்த் துறையில் தனது ஜாதியினர் பலரை அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும் கொண்டுவந்துள்ளார். இதனடிப்படையில் குமரகுரு ஆதரவாளர்கள் எந்த தவறு செய்தாலும், காவல்நிலையத்திற்கு புகார் சென்றாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை. ஆட்சி தி.மு.க.விடம் இருந்தாலும், அதிகாரம் குமரகுரு தரப்பிடமே உள்ளது' என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.க. ர.ர.க்கள்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்க மாவட்டச் செயலாளர் குமரகுருவை பலமுறை தொடர்புகொண்டோம். நமது அழைப்பு ஏற்கப்படவில்லை. அதையடுத்து குறுந்தகவல், வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பியும், அவர் நம்மைத் தொடர்புகொள்ளவில்லை. அவர் விளக்கம் தெரிவித்தால் அதை பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.
-சக்கரை