திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரமன்ற துணைத் தலைவராக இருந்த அப்துல்லா, கடந்த மே மாதம் உடல்நலக்குறைவால் மறைந்தார். இதற்கான மறைமுகத் தேர்தல் செப்டம்பர் 6-ஆம் தேதி வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் கவுன்சிலர் கயாஸ் அஹமத், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த நவ்மான் போட்டியிட்டனர். 36 கவுன்சிலர் வாக்கு களில் தி.மு.க. வேட்பாளர் 25 வாக்குகளும், எதிர் வேட்பாளர் 9 வாக்குகளும் பெற்றனர். அ.தி.மு.க. கவுன்சிலர் ஜாகீர் தேர்தலைப் புறக்கணித்தார்.
நகராட்சி அலுவலகத்தின் உள்ளே தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் தி.மு.க. பிரமுகர் பிரேமாவின் சகோதரர் குமரேசன், சதீஷ்குமார் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை ந.செ. சாரதிகுமார் ஆதரவாளர்கள் ஜவஹர், குணசேகரன், நிர்மல், முருகன் உட்பட சிலர் கிண்டல் செய்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவானது. அடிபட்டவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
மருத்துவமனைக்கு வந்த ந.செ. சாரதிகுமார், அங்கிருந்த மருத்துவர் செந்தில்குமாரை நோக்கி கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது நடந்த வாக்குவாதத்தில் தேவகுமாரை பளாரென சாரதிகுமார் அடித்ததும், அவரது ஆதர வாளர்கள் தேவகுமாரை அடித்து உதைத்தனர். அங்கிருந்த போலீஸார் இரு தரப்பையும் விலக்கி விட்டு, இரு தரப்பிடமும் புகார் பெற்றனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் தேவக்குமாரிடம் கேட்டபோது, “"என்னுடைய கிராமத்திலிருந்து மதியம் 3 மணிக்கு வாணியம்பாடிக்கு திரும்பி வரும்போது சதிஷ்குமார் என்னைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினார். அவர் என்னு டைய கட்சிக்காரர் என்பதால் மருத்துவமனைக்குச் சென்றேன். கண்ணில் அடிபட்டிருந்ததால் அவரை மேல்சிகிச்சைக்கு பரிந்துரைத்திருந்தனர். வெளியே புறநோயாளிகள் அமரும் இடத்தில் காத்திருந்தோம். எங்களுடன் மருத்துவர் செந்தில்குமார் இருந்தார்.
மருத்துவமனை வளாகத்துக்கு தனது ஆட்களுடன் வந்த ந.செ. சாரதிகுமார், எங்களைப் பார்த்துவிட்டு, "குடிகார டாக்டர் இங்க ஏன்டா இருக்கான்'னு திட்டினார். கொஞ்சநேரத்தில் அங்கிருந்து கிளம்ப முயன்றபோது என்னைப் பிடித்து தள்ளி ந.செ. தாக்கினார். இதுதொடர்பாக நான் எங்கள் சங்கத்தில் முறையிட்டுள்ளேன். போலீஸ் புகார் கேட்டதால் நடந்ததை எழுதித் தந்துள்ளேன்''’என்றார்.
தி.மு.க. ந.செ. சாரதிகுமாரோ, “துணைத் தலைவர் தேர்தல் நடந்ததால் கவுன்சிலர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டார்கள். இதனால் வெளியே என்ன நடந்தது எனத் தெரியவில்லை. தேர்தல் முடிந்து நாங்கள் வெளியே வந்தபோது சிலர் தகராறு செய்து தாக்கினார்கள். அடிபட்டவர்களை மருத்துவமனையில் உள் நோயாளியாக அட்மிட் செய்ய மறுப்பதாக தகவல் வந்ததால் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென் றேன். அங்கே லீவிலுள்ள டாக்டர் செந்தில்குமார் குடிபோதையில் தள்ளாடியபடி, இவுங்களுக்கெல் லாம் அட்மிஷன் போடாதீங்க எனச் சொல்லியபடி இருந்தார். டூட்டியில் இல்லாத நபர் எதற்காக மருத்துவமனை வந்தார்?, இவர் எப்படி அட்மிட் போடக்கூடாதுன்னு சொல்லலாம் என கேள்வி யெழுப்பினோம். அப்போது என்னைத் தாக்க முயன்றதால் கைகலப்பு ஏற்பட்டது. தி.மு.க. நிறுத்திய துணைத்தலைவர் வேட்பாளருக்கு வாக்களிக்காமல் இரண்டு தி.மு.க. வாக்குகள் எதிர் வேட்பாளருக்கு விழுந்துள்ளது. அதற்கெல்லாம் காரணம் இவர்கள்தான்''’என குற்றம்சாட்டினார்.
மோதல் குறித்து இருதரப்பும் சாராத தி.மு.க. பிரமுகர்களிடம் கேட்டபோது, “"ந.செ. சாரதிகுமா ரும் -வழக்கறிஞர் தேவகுமாரும் மாமா -மச்சான் என அழைத்துக்கொண்டவர்கள். குடும்ப விவகா ரத்தில் மனக்கசப்பு உருவாகி இருவரும் எதிரும் புதிருமாகிவிட்டார்கள். சாரதியிடம் இருந்து ந.செ. பதவியை தேவகுமார் பறிக்கவைத்தார். மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் பதவியிலிருந்து தேவகுமாரை நீக்கவைத்தார் சாரதி. சமீபத்தில் தி.மு.க. மாவட்ட மீனவரணி அமைப்பா ளர் ஸ்ரீதர், சாரதிகுமா ருக்கு கொலைமிரட் டல் விடுத்தது தொடர் பான வீடியோ வெளி யானது. அது தொடர் பான ஒரு வழக்கு காவல்நிலையத்தில் உள்ளது. இவர்களுக் கெல்லாம் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் சப்போர்ட் செய்கிறார்.
வாணியம்பாடி தொகுதி எம்.எல். ஏ.வாக வேண்டும் என தேவராஜுக்கு ஆசை. மா.செ. பதவியில் அமர்ந்து, ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான பிறகும் வாணியம்பாடி தொகுதி மீதான ஆசை போகவில்லை. வாணியம்பாடி ந.செ.வாக இருந்த சிவாஜிகணேசன் -ஆலங்காயம் ஒ.செ.வாக இருந்த தேவராஜ், இருவரும் சுமார் 25 ஆண்டுக்காலம் எலியும் -பூனையுமாகவே வாணியம்பாடி தொகுதியில் அரசியல் செய்தார்கள். வாணியம்பாடி நகர அரசியலுக்குள் தேவராஜ் நுழையாமல் பார்த்துக் கொண்டார் சிவாஜி. விபத்தில் சிவாஜி மறைந்ததும் அவர் வகித்த ந.செ. பதவி சாரதிக்கு வழங்கப் பட்டது.
எம்.பி. தேர்தல், நகரமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற சாரதிகுமாரின் உழைப்பு குறைத்து மதிப்பிட முடியாது. இதற்காக சிலபல கோடி கட்சிக்காக செலவு செய்துள்ளார். தனது தாயாரை நகரமன்றத் தலைவராக்க முயற்சி செய்தார். அதனை மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் தடுத்தார். அந்த எதிர்ப்பை மீறி வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் ஆதரவில் தனது அம்மாவை சேர்மனாக்கி, வாணியம்பாடியில் வலம்வருகிறார் சாரதி. முன்பு தனது ஆசைகளை அப்பா தடுத்தார், இப்போது மகன் தடுக்கிறாரே என்கிற கோபம். இதனால் ந.செ.வுக்கு எதிராக உள்ளவர்களை கொம்புசீவி விடுவதாலே அடிக்கடி இங்கு பிரச்சனையாகிறது''’என்றார்கள்.