"அரசியலில் நிரந்தர நண்ப னும் இல்லை... நிரந்தர எதிரியும் இல்லை...' என்ற பொன்மொழி யாருக்கு பொருந்துகிறதோ இல் லையோ, பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும். பீகார் முதல்வரான நிதிஷ்குமார், பா.ஜ.க.வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக கடந்த 9ஆம் தேதி அதிரடியாக அறிவித்ததோடு, தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், லல்லு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்டி, தனது மெகா கூட்டணியுடன் பத்தாம் தேதி மதியம் 2 மணியளவில் பீகாரின் முதல்வராக எட்டாவது முறை பதவியேற்றார். அவரோடு, தேஜஸ்வி யாதவ் துணை முதல்வ ராகப் பதவியேற்றார். ஆக, மகாராஷ்டிராவில், சிவசேனாவை பிளவுபடுத்தி, ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜ.க.வுக்கு, அடுத்த 40வது நாளில் பீகாரில் வரலாறு திரும்பியுள்ளது.
"வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது!" என்ற முழக்கத்துடன் மீண்டும் முதல்வராகியுள்ள நிதிஷ்குமார், பா.ஜ.க.வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பாரா என்பது கேள்விக்குறிதான்! அவருடைய கடந்த கால அரசியல் பாதை அப்படியுள்ளது! தொடக்க காலத்தில் வாஜ்பாய் அபிமானியாக இருந்த நிதிஷ்குமார், வாஜ்பாய் அமைச்சரவையில், விவசாயத்துறை அமைச்சராகவும், ரயில்வே துறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். முதன்முறை யாக பீகார் மாநில முதல்வராக 2000ஆம் ஆண்டு, மார்ச் 3ஆம் தேதி நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆனால் ஒரு வார காலத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார். பின்னர், 2005, 2010 தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவுடன் வெற்றிபெற்று முதல்வரானார். ஒரு காலத்தில் பீகாரில் கோலோச்சிவந்த லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு, மாட்டுத்தீவன ஊழல் வழக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டு லாலு பிரசாத் யாதவ் சிறைக்குள் செல்ல, அவரது கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. இச்சூழலைச் சரியாகப் பயன் படுத்திக்கொண்ட நிதிஷ் குமார், தனது கட்சியை ஊழலுக்கு எதிரானதாகக்காட்டி வளர்த்தெடுத் தார்.
இந்நிலையில், வாஜ்பாய் ஆதரவாளரான நிதிஷ்குமார், மோடி பிரதமர் வேட்பாளராக உருவெடுப்பதை ஏற்கமுடியாமல் 2013ஆம் ஆண்டில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார். 'நான் மண்ணுக்குள் புதைவேனே தவிர, பா.ஜ.க.வுடன் மீண்டும் கைகோர்க்க மாட்டேன்' எனச் சபதமிட்டார்.
அதோடு, வாஜ்பாயோடு மோடியை ஒப்பிட்டு மட்டம் தட்டினார். அடுத்து, 2015 தேர்தலில், பா.ஜ.க.வுக்கு மாற்றாக, லாலு பிரசாத் யாதவின் மகன் தலைமையிலான ராஷ் டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டு முதல்வ ரானார். அப்போது தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். இந்த கூட்டணியில் இரண்டே ஆண்டுகளில் கசப்பு ஏற்பட, தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்போம் எனக்கூறிய நிதிஷ்குமார், 2017ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கூட்டணியை முறித்துக்கொண்டார். அவரது செயல்பாட்டை பிரதமர் மோடி ட்விட் டரில் பாராட்டினார். அவருக்கு ட்விட்டரிலேயே நன்றி தெரிவித்த நிதிஷ் குமார், அடுத்த 24 மணி நேரத்தில் பா.ஜ.க. ஆதரவோடு மீண்டும் முதல்வர் பதவியைத் தொடர்ந்தார்! தனது சபதத்தை இரண்டே ஆண்டுகளில் காற்றில் பறக்கவிட்ட நிதிஷ்குமா ரின் பதவி மோக அரசியல், அவரது கட்சியின் மதிப்பைச் சரித்தது.
இதற்கடுத்து, கடந்த 2020 தேர்தலில் தொடர்ந்து பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம், வெறும் 45 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றபோதும், தேர்தல் ஒப்பந்தப்படி நிதிஷ்குமாரே முதல்வ ராகத் தொடர்ந்தார். ஆனால் இம்முறை, தேர்தலின்போது சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு மறைமுக ஆதரவளித்ததன்மூலம், நிதிஷ்குமாருக்கு குடைச்சலைத் தொடங்கியிருந்தது பா.ஜ.க. மகாராஷ்டிரா வில் சிவசேனாவை உடைக்க எடுத்த முயற்சியைப்போல் நிதிஷ் குமாரின் கட்சியிலும் தனது கைவரிசையைக் காட்ட முனைந்தது. நிதிஷ் குமாரை கேட்காமலேயே அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஆர்.சி.பி.சிங்குக்கு இரும்புத்துறை அமைச்சர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.
பா.ஜ.க.வின் குள்ளநரித்தனத்தைப் புரிந்துகொண்ட நிதிஷ்குமார், ஆர்.சி.பி.சிங்கின் எம்.பி. பதவிக்காலம் முடிவடைந்தபோது அவருக்கு மீண்டும் அந்த வாய்ப்பை அளிக்க மறுத்தார். அதனால் ஆர்.பி. சிங்கின் அமைச்சர் பதவி காலியானது. அடுத்ததாக, ஆர்.பி.சிங் தானாகவே கட்சியிலிருந்து ராஜினாமா செய்யும்படி காய்களை நகர்த்தினார் நிதிஷ்குமார். இறுதியாக, பா.ஜ.க.வின் சகவாசம் தனக்கு ஆப்பு வைக்குமென உணர்ந்த நிதிஷ்குமார், தேஜஸ்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சேதாரமில்லாமல் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறி னார். தற்போது ஏற்படுத்தப் பட்டுள்ள மெகா கூட்டணி அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் தொடரும்பட்சத்தில், பீகாரில் பா.ஜ.க. 21 இடங்களை இழக்கக்கூடுமென்று கருத்துக் கணிப்பில் தெரியவருகிறது. இதனால் கொதிப்பிலுள்ள பா.ஜ.க., துணை ஜனாதிபதியாக முன்னிறுத்தாததால்தான் நிதிஷ்குமார் கூட்டணியை முறித்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டியது. பா.ஜ.க. ஜோக்கடிக்கிறது என்று நிதிஷ்குமார் பதிலடி கொடுத்தார். பா.ஜ.க. எதிர்ப்பரசியல் பீகாரைப் போல மற்ற மாநிலங்களுக்கும் பரவுமா என்பது போகப்போகத்தான் தெரியும்!
-தெ.சு.கவுதமன்