இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் வீரமும் தீரமும் மிகுந்த பல போராளிகளின் தியாகம் வெளியுலகுக்குத் தெரிவதில்லை. குறிப்பாக, தமிழ் நாட்டு விடுதலை வீரர்கள் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் ஒருவர், பொல்லான்.
கொங்கு நாட்டில் தீரன் சின்னமலை படை பிரிவில் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய குழுவில் இருந்தவர் பொல்லான். அருந்ததியின சமூக மக்களின் அடையாளமாக போற்றப்படும் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 216-வது நினைவுநாளில் அரசின் சார்பில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சமுதாயக் கூடத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் அமைச்சர் சு.முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி, மாவட்ட எஸ்.பி. சசிமோகன் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறும்போது,
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொல்லான் நினைவுநாளை மிக மரியாதையோடு அனுசரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனடிப் படையில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் இங்கு வந்துள் ளோம். ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு மாநாட் டில் மு.க.ஸ்டா லின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பொல்லான் படத்தை திறந்து வைத்து பொல் லானுக்கு உரிய மணிமண்டபம், சரியான சிலை அமைப்பு செய்து தரப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை நோக்கித்தான் நாங்கள் அடி யெடுத்து வைக்கிறோம். இதனால்தான் இன்று அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.
இன்றைய தினம் அரசு விழாவாக இல்லாமல் இருந்தாலும் கூட, வரும் டிசம்பர் 28-ஆம் தேதி பொல்லான் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். அதற்குள் பொல்லானுக்கு மண்டபம், சிலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருந்தார். இதற்காக இன்று அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். மேலும் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்கள். எனவே முதலமைச்சர் கூறியபடி மணிமண்டபம் சிலை, அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்'' என்றார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பொல்லானின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது.