உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்!
எனக்கிருந்த கடன் நெருக்கடிகளை அறிந்த ஜெயலலிதாம்மா பத்து லட்ச ரூபாய் கொடுத்ததோடு, ’’"இன்னும் எவ்வளவு கடன் இருந்தாலும் அதை நான் அடைச்சிடுறேன்'’’ எனச் சொன்னார். அந்த பத்துலட்ச ரூபாயில் ஐந்து லட்சத்தை திராவிடர் கழகம் நடத்திவரும் திராவிடன் ஃபண்ட் நிறுவனத்திற்கு தரவேண்டிய கடனுக்காக செலுத்திவிட்டு, மீதமிருந்த ஐந்து லட்சத்தை ஊரில் நான் வாங்கியிருந்த கடனை அடைத்தேன்.
ஒரு சந்தர்ப்பத்தில் திராவிடர் கழகத்தின் முக்கிய பிரமுகர் என்னைப்பற்றி ஜெயலலிதாம்மாவிடம் தவறாகச் சொல்லிவிட்டார். அதாவது என் கடனை அடைக்க ஜெயலலிதாம்மா கொடுத்த பணத்தில் கடனை அடைக்காமல் பாதித் தொகையை நான் சொந்தச் செலவுகளுக்காக ஸ்வாஹா பண்ணிவிட்டதாக போட்டுக் கொடுத்தார். இதனால், எனது மீதக் கடனை அடைக்க ஜெயலலிதாம்மாவிடமிருந்து பணம் கிடைக்கவில்லை.
நான் திராவிடன் ஃபண்ட் நிறு வனத்தில் வட்டிக்கு 12 லட்ச ரூபாய் என் வீட்டின் பேரில் கடனாக வாங்கி யிருந்தேன். அதற்காக ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள எனது வீட்டை கைப்பற்ற திட்டமிட்டார்கள். இதற்காக என் வீட்டை ஏலத்தில் விட்டு, அதை எடுக்கவும் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். ஏல அறிவிப்புச் செய்யும் ‘தண்டோரா’ போடுபவரையும் அழைத்து வந்துவிட்டார்கள். ஆனால் நீதிமன்றத்தில் எனக்கான நீதி கிடைத்துவிட்டது.
நீதிமன்றத் தீர்ப்பையடுத்து வீட்டுக்கு நான் வந்தபோது வீட்டு வாசலில் ஏல அறிவிப்பு நிகழவிருந்தது. ‘""பத்து நிமிஷம் டயம் தர்றேன். ஒருத்தன் இல்லாம எல்லாரும் ஓடிப்போயிடுங்க. நீங்களா போகலைன்னா அடிச்சு அனுப்புவேன்'' என எச்சரித்தேன். என்னிடமிருந்து இவ்வளவு கடுமையை எதிர்பார்க்காத அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.
நீதிமன்றம் என் பக்கம் இருந்த நியாயத்தை புரிந்துகொண்டதால்... நீதிபதி என்னை மிகவும் மதிப்புடன் நடத்தினார். திராவிடன் ஃபண்ட் மேனேஜர் அருள்செல்வன் எனக்கெதிராக வைத்த குற்றச்சாட்டுகள் எடுபடவில்லை. திராவிடன் ஃபண்ட் நிறுவனத்தில் நான் வாங்கிய 12 லட்ச ரூபாய்க்கு 31 லட்ச ரூபாய் கட்டவேண்டி வந்தது. ஒருவாறு அந்தத் தொகையை கட்டிமுடித்து அந்தத் தொல்லையி லிருந்து மீண்டேன்.
எங்கே தண்ணீர்த் துளிகள் விழுகின்றனவோ, அங்கே புல் பூண்டு முளைக் கிறது. எங்கே கண்ணீர்த் துளிகள் விழுகின்றனவோ, அங்கே புரட்சி முளைக் கிறது. எங்கே ரத்தத் துளிகள் விழுகின்றனவோ, அங்கே புலிகளே முளைக் கிறார்கள்’’
-இது 1983-ஆம் ஆண்டு நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. இவை எல்லாமே இயற்கையானவை; எதார்த்த மான உண்மைகள். 1947-ஆம் ஆண்டில் எனக்குத் தெரிந்து உலகத்தில் 128 நாடுகள் இருந்தன. 60 ஆண்டுகளுக்குப் பின்... 234 நாடுகள் ஆனது. திடீர் திடீர் என நாடுகள் அதுவாக உருவானதா என்ன? இல்லவே இல்லை.
பல்வேறு நாடுகளிடம் அடங்கிக் கிடந்த, அடிமைப் பட்டுக் கிடந்த நாடுகள் விடுதலை பெற்று தனி நாடாக பிரிந்திருக்கின்றன. இந்தியா என்கிற ஒரு தேசத்தில் மூன்று தேசங்கள் இருந்திருக்கின்றன. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசம்... இப்படி ஒரு தேசம் மூன்று தேசங்கள் ஆகியிருக் கின்றது. அப்படித்தான் உலகமெங்கும் நடக்கிறது. இன்னும் எதிர்காலத்தில் நிறைய தேசங்கள் புதிது புதிதாக தோன்றக்கூடும். தமிழ் ஈழ தேசம் மலருவதும் காலத்தின் கட்டாயம்... காலத்தின் கட்டளை!
எனக்குத் தெரிந்து உலகத்தில் உண்மையையும், நியாயத் தையும் போல வலிமை யான சக்தி எதுவும் இல்லை. எப்படிப் பட்ட ஆதிக்கங்களும், எப்படிப்பட்ட வல்லரசு களும், எப்படிப்பட்ட சர்வாதிகார சாம் ராஜ்யங்களும் உண்மைக் கும், நியாயத்திற்கும் முன்னே ஒருநாள் கைகட்டி நிற்கத்தான் நேரும். நியாயத்தையும், நீதியையும் நிரந்தரமாக நிராகரித்துவிட முடியாது. அவற்றை அழித்துவிட்டு, எந்த சக்தியும் நிரந்தரமாக வாழவும் முடியாது. தமிழீழ விடுதலை என்பது சத்தியமானது. அதனால் அது சாத்தியமானது. வேண்டுமானால் கொஞ்ச காலத்திற்கு ஒத்திவைக்கலாம்... ரத்து செய்ய முடியாது. ஈழமக்களை தன் மக்கள் என இலங்கை கருதியிருக்குமானால்... ஈழத்தமிழர் வாழ்விடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தி, லட்சக்கணக்கில் தமிழ் மக்களை கொன்றிருக்குமா?
உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்...
(வரும் இதழில் முடியும்)
___________
புரட்சிப் பாட்டுகள்!
கோவையில் தமிழாசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த என்னை சென்னைக்கு வரச் சொன்னவர் டைரக்டர் கே.சங்கர். அவர் இயக்கத்தில் அண்ணன் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘"குடியிருந்த கோயில்'’ படத்தில் இடம்பெற்ற ‘"நான் யார் நான் யார் நீ யார்?'’ என்கிற தத்துவப் பாடல்தான் எனது முதல் திரைப்பாடல்.
எம்.ஜி.ஆர். ‘"நாடோடி மன்னன்'’ படத்தில் தொடங்கி ‘"ரிக்ஷாக்காரன்'’ படம்வரை தனது படங்களில் தி.மு.க.வையும், அண்ணாவையும், உதயசூரியன் சின்னத்தையும் மக்கள் மனதில் தொடர்ந்து பதியச்செய்யும் விதமாக செயல் பட்டுவந்தார்.
ஆனால் அ.தி.மு.க.வை தொடங்கியபின் அவரது கட்சியை, கொள்கையை பிரபல்யப்படுத்த போதிய சினிமாக்களும், கால அவகாசங்களும் அமையவில்லை. ஆயினும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். நானும் அவரின் எண்ணமறிந்து எத்தனையோ பாடல்களை எழுதினேன். (என்னென்ன பாடல்கள் என்பதை ஏற்கனவே விரிவாகச் சொல்லியிருக்கிறேன்)
இது சம்பந்தமாக அண்ணன் எம்.ஜி.ஆரும், டைரக்டர் கே.சங்கரும் என்னைப் பற்றிப் பேசியதை சங்கர் ஒருமுறை என்னிடம் சொன்னார். அது என்னவென்றால்...
""சங்கர்... உங்களால்தான் புலவர் புலமைப் பித்தன் எனக்குக் கிடைச்சார். அதனால் என் சினிமா பயணத்தில் மட்டுமல்ல... என் அரசியல் பயணத்திலும் நீங்க ஒரு மைல்கல்தான்''’என எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார். இதை என்னிடம் தெரிவித்த சங்கர், "நூறு கூட்டங்களில் முழங்க வேண்டிய கருத்துக்களை ஒரு பாடலில் தந்து புரட்சி செய்பவராச்சே நீங்கள்'’எனவும் சொன்னார்.