அ.தி.மு.க. இரண்டு மூன்றாகப் பிளவுபட்டிருப்பதில் தற்போது ஓ.பி.எஸ். அணியினர் தங்கள் அணிக்கான பொறுப்பாளர்களைத் தேடி நியமிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறதாம். அண்மையில் ஓ.பி.எஸ். அணியின் நெல்லை மாநகர செயலாளராக வி.கே.பி.சங்கர் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 09 அன்று பத்திரிகைச்செய்தியும் வெளிவந்தது. ஆனாலும், சி.த.செல்லப்பாண்டியன் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல், ஓ.பி.எஸ்ஸை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறாராம். இதுகுறித்து நாம் விசாரணையில் இறங்கினோம்.
ஓ.பி.எஸ். அணியின் நெல்லை மாநகர மா.செ.வாக அறிவிக்கப் பட்டுள்ள வி.கே.பி.சங்கர், அ.தி.மு.க.வின் எடப்பாடி அணியிலிருக்கும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரான கருப்பசாமி பாண்டியனின் மகனாவார். ஓ.பி.எஸ். அணியின் நெல்லை மாநகர மா.செ.வாக ஏற்கெனவே இருந்த எக்ஸ் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், அண்மையில் காலமானதையடுத்து, அப்பொறுப்பிற்கு ஆட்களைத் தேர்வுசெய்ய, நெல்லையிலுள்ள அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளான (தற்போது எடப்பாடி அணியிலிருப்பவர் கள்) கல்லூர் வேலாயுதம், பாப்புலர் முத்தையா, சுதா பரமசிவன் உள்ளிட்ட பலரிடமும் மனோஜ்பாண்டியன் பேசியும், யாரும் பிடி கொடுக்கவில்லையாம். ஒன்றுபட்ட அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.ஸால் பொறுப்பாளராக்கப்பட்ட தச்சை கணேச ராஜாவும் ஒதுங்கி விட்டாராம். ஓ.பி.எஸ். அணி மீதான நம்பிக்கையின்மையே இதற்கு காரணமாம்.
நெல்லை பக்கமுள்ள நாலாந்துலாவில் இருக்கும் ரிட்டயர்டு போலீஸ் அதிகாரி யான கந்தசாமி என்பவர், ஓ.பி.எஸ்.ஸின் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தின் மாமனார். இந்த கந்தசாமியும், அண்ணாச்சி கானாவும் நெருங் கிய உறவினர்கள். கானாவின் மகன் வி.கே.பி.சங்கருக்கு பதவி கிடைக்க இந்த நெருக்கமே காரணமாகியிருக்கிறது என்கிறார்கள் ர.ர.க்கள். தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் உள்ளிட்ட 4 தொகுதிகளைக் கொண்ட தூத்துக்குடி தெற்கு மா.செ.வாக அ.தி. மு.க.வின் முன் னாள் தொழில் துறை அமைச் சர் சி.த. செல்லப் பாண்டியன் அறிவிக்கப்பட்டதும், அவரது அரசியல் போட்டியாளரான எடப்பாடி அணியின் மா.செ. சண்முகநாதன் உள்ளுக்குள் மகிழ்ந்திருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த நிகழ்வுகள், அனைத்தையும் புரட்டிப்போட்டு விட்டது. எடப்பாடி ஆட்சியின்போது தூத்துக்குடி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, வடக்கு மா.செ.வாக கடம்பூர் ராஜூவும், தெற்கு மா.செ.வாக சண்முக நாதனும் அறிவிக்கப்பட்டனர். 6 தொகுதியைக் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தின் மா.செ.வாக இருந்த செல்லப்பாண்டியனை அப்புறப்படுத்திவிட்டுத்தான் கடம்பூர் ராஜுவை யும், சண்முகநாதனையும் மா.செ.வாக்கினார் எடப்பாடி.
சண்முகநாதன் மா.செ. பொறுப்பிற்கு வந்தவுடன், 40-க்கும் மேற்பட்ட வார்டுகளில், செல்லப்பாண்டியனின் ஆதரவாளர்களான சீனியர்களைத் தூக்கியடித்துவிட்டு தனக்கு வேண்டப்பட்டவர்களை பொறுப்புகளில் அமர்த்தினார். இதனால் தூத்துக்குடி மாநகரில் அ.தி.மு.க. பிளவுபட்டது. இந்நிலையில், மாநகரைப் பிரிக்கவேண்டுமென்று பலமுறை கோரிக்கை வைத்த சி.த.வை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரட்டையர்கள் கண்டுகொள்ளவேயில்லையாம். இந்நிலையில் தற்போது, தூத்துக்குடியை உள்ளடக்கிய 4 தொகுதிகளின் மா.செ.வாக உங்களை நியமிக்கிறோம் என்று மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். எடப்பாடி மீதிருந்த வன்மத்தால் சி.த.வும் ஓ.கே. சொல்ல, ஓ.பி.எஸ். அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில், தனது ஆதரவாளர்களிடம் சி.த.செல்லப்பாண்டியன் இதுகுறித்துப் பேச, ஆதரவாளர்களுக்கு இதில் விருப்பமில்லையாம். இதற்கிடையே சி.த.வின் முடிவு குறித்து அறிந்த எடப்பாடி, "மாவட்டத்தைப் பிரித்து சி.த.வை மா.செ.வாக்குகிறேன். அவர் ஓ.பி.எஸ். அணிக்குப் போக வேண்டாம். அவரைச் சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வாருங்கள்' என்று தூத்துக்குடி புள்ளிகளான எஸ்.டி.கருணாநிதி மற்றும் ஆறுமுகநயினாரிடம் கூறவே, அவர்களின் பேச்சைத் தட்டிக்கழிக்க முடியாமல் சென்னையில் எடப்பாடியைச் சந்தித்திருக்கிறார் சி.த.செல்லப்பாண்டியன். இச்சந்திப்பின்போது, தூத்துக்குடி வடக்கு மா.செ. கடம்பூர் ராஜு மற்றும் ஒட்டப்பிடாரம் எக்ஸ் எம்.எல்.ஏ. மோகன் உள்ளிட்டோர் இருந்திருக்கின்றனர்.
எடுத்த எடுப்பிலேயே எடப்பாடியிடம் சூடான சி.த.செல்லப்பாண்டியன், "அம்மா கொடுத்த மா.செ. பதவியை எடுத்து வேற ஒருத்தர மா.செ. ஆக்குனீங்க. அந்த மா.செ.வின் போக்கு சரியில்ல, கட்சிப் பொறுப்புக பேரம் பேசப்படுதுன்னு ஒங்கள 20 முறை சந்திச்சு மாவட்டத்தப் பிரியுங்கன்னு சொன்னோம். முதல்வராயிருந்த ஒங்களுக்கு கண்ணே தெரியல. இப்பதாம் தெரியுதா?'' என பொங்கித் தீர்த்திருக்கிறார். அவரைச் சமாதானப்படுத்தி, "தூத்துக்குடி மாநகரத்தப் பிரிச்சு அதுக்கு ஒங்கள மா.செ.வா நியமிக் கிறேன்'' என்று சொன்ன எடப்பாடியிடம், பேச்சுப்படி ஒட்டப் பிடாரத்தையும் தரணும் என்று சி.த. கேட்க, உடனிருந்த கடம்பூர் ராஜு மறுத்திருக்கிறார். அவரிடம் வாக்குவாதம் செய்த எஸ்.டி.கருணாநிதி, "முன்னமயே வாக்குக் கொடுத்ததுதானே? இப்ப ஏன் மறுக்குறீங்க?'' என்றவர் எடப்பாடியிடம், "ஒட்டப்பிடாரத்தையும், சண்முகநாதனிடமிருந்து தூத்துக்குடியையும் எடுத்து 2 தொகுதிக்கு சி.த.வை மா.செ.வாக்குங்கள்' என்று பிரஷர் கொடுக்க... வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட எடப்பாடி, "வரும் 21-ம் தேதி கட்சி பற்றிய தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வந்தபிறகு சி.த.வை முறைப்படி மா.செ.வாக அறிவிக்கிறேன்'' என்று சொன்ன பிறகே பஞ்சாயத்து சுமுகமாக முடிந்தாகக் கூறுகிறார்கள் ர.ர.க்கள்.
ஓ.பி.எஸ். அணியின் தூத்துக்குடி தெற்கு மா.செ. பொறுப்பை ஏற்றுக்கொண்டீர்களா என, சி.த.செல்லப்பாண்டியனைத் தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, "நான் கண் ஆபரேஷனுக்காக சென்னையில் இருக்கிறேன். அதுபற்றி பிறகு பேசுகிறேன்'' என்று படபடத்தார் சி.த.
அதிகாரச் சண்டையால் பிளவுபட்டிருக்கிறது தூத்துக்குடி அ.தி.மு.க.!