தனது நிழலான இளங்கோவனிடம் நடத்தப் பட்ட விஜிலென்ஸ் ரெய்டின் தொடர்ச்சியாக, கொடநாடு விவ காரம் பூதாகரமாக கிளம்பியதில் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு, இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் வெளி நாட்டு டாலர்கள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஆவணங் கள் இருந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கே தெரியாமல், இவ்வளவு வேலை பார்த்திருக்கிறாரா இளங்கோவன் என்பதுதான் அதிர்ச்சிக்கான காரணம்.
ரெய்டில் கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் சொத்து ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சிகள், பங்குச் சந்தை முதலீட்டு ஆவணங்கள் அனைத்தையும் விஜிலன்ஸ் போலீசார், அக். 26, 27-ம் தேதிகளில் சேலம் விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ரைகானா பர்வீன் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
பங்குச்சந்தை முதலீட்டு ஆவணங்களை ஆய்வு செய்தபோது, மொத்த முதலீட்டில் 45 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு பங்குகளில் முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது. அதேபோல மலேசியா ரிங்கிட்டுகளும், சிங்கப்பூர் டாலர்களும் கைப்பற்றப்பட்டது. இதுதான் எடப்பாடியை அதிர வைத்தது.
அக். 25-ம் தேதி, உள்ளூரில் இருந்தும் எடப்பாடி, இளங்கோவனை நேரில் அழைத்துப் பேசவில்லை. அதன்பிறகு இளங்கோவனை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துள் ளார். எடப்பாடியின் கைகளைப் பற்றி, தனது விசுவாசத்தை கண்ணீரால் உறுதிப்படுத்த முயன் றிருக்கிறார் இளங்கோவன். அதையடுத்து, அவருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்த தாகவும் கூறுகின்றனர் ர.ர.க்கள்.
இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை அதிகாரி யான ஈரோடு லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. ராஜேஷ் தலை மையிலான குழுவினர், இளங் கோவன் மற்றும் பினாமிகள் பெயரில் எந்தெந்த வங்கியில் / ஷேர் புரோக்கிங் நிறுவனத்தில் ஸ்டாக் மார்க்கெட் பரிவர்த்த னைக்கான டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன என்பது குறித்தும் துருவத் தொடங்கி யுள்ளனர். சோதனையின்போது பிடிபட்ட மலேசியா, சிங்கப்பூர் கரன்சிகள் பின்னணி குறித்தும், இளங்கோவனின் வெளிநாட்டு முதலீட்டுக்கான ஆலோசகர்கள் குறித்தும் அ.தி.மு.க. புள்ளிகள் சிலர் நம்மிடம் பேசினர்.
''பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியைச் சேர்ந்தவர் டத்தோ பிரகதீஸ்குமார் (38). நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுதான் இவருடைய பூர்வீகம். கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத் தைச் சேர்ந்தவர். இவர், 22 வயதிலேயே வேலை தேடி மலேசியாவுக்குச் சென்று விட்டார். மிக குறுகிய காலத்திலேயே அந்த நாட்டில் டூட்டி ஃபரீ பிஸினஸ், ஷிப்பிங், பிராப்பர்டீஸ், எண்ணெய் மற் றும் எரிவாயு ஒப்பந்தம் என பல தொழில்களைத் தொடங்கி வெற்றிகரமான தொழில் அதிபராகவும் விளங்குகிறார். இளம் வயதிலேயே மலேசிய நாட்டின் உயரிய அங்கீகாரமான டத்தோ பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவிலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பாரதியார் கல்விக்குழுமத்தின் முக்கிய பங்குதாரர் இவர்தான். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஆத்தூர், தலைவாசல் சுற்றுவட்டாரத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், பாரதியார் கல்வி நிறுவனத்தில்தான் உணவு அருந்திவிட்டுச் செல்வார். அப்படி ஒருமுறை எடப்பாடி அந்தக் கல்லூரிக்குச் செல்லும்போது, விடுதி மாணவிகளை அழைத்து வந்து அவருக்கு வரவேற்பு கொடுக்க வைத்தனர்.
கொ.ம.தே.க. ஈஸ்வரன், ஒருவகையில் டத்தோ பிரகதீஸ்குமாருக்கு உறவுக்காரர். ஈஸ்வரன் மூலமாக முதல்வர் ஸ்டாலின் வரை அறிமுகமும் உண்டு.
ஆத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி சுற்றுவட்டாரத்தில் அனைத்து கல்வி அதிபர்கள், தொழில் அதிபர்களுடனும் இளங்கோவனுக்கு தனிப்பட்ட முறையிலும் நெருக்கம் உண்டு. அதன் அடிப்படையில், பாரதியார் கல்விக்குழும அதிபர்களுள் ஒருவர் என்ற கோணத்தில் டத்தோ பிரகதீஸ்குமாருடனும் நட்பில் இருந்து வந்தார் இளங்கோவன்.
இந்த நட்பு அவர்களுக்குள் தொழில் ரீதியிலும் வளர்ந்தது. அதனால் டத்தோ பிரகதீஸ் குமார் கேட்டார் என்பதற்காகவே, அவருடைய சொந்த கிராமமான பூலாம்பாடிக்கு 6 வழித் தடங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க வைத்தார் இளங்கோவன். அதனை டத்தோ பிரகதீஸ்குமாரே கொடியசைத் தும் துவக்கி வைத்தார்.
கொரோனா காலத்தில் மலேசியாவில் சிக்கித் தவித்த தமிழர்களையும், இங்கிருந்து மலேசியா செல்ல இருந்த தமிழர்களையும் சொந்த செலவில் விமானம் மூலம் கொண்டு சென்றது, உள்ளூரில் அரசுப்பள்ளிகளுக்கு ஏராளமான நன்கொடை என பிரகதீஸ்குமார் செய்திருக்கிறார். அவர் மூலம்தான் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இளங்கோவன் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். அவர் மூலமாகத்தான் அந்நிய செலாவணி வர்த்தகத் திலும் இளங்கோவன் ஈடுபட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் உள்ளது. விஜிலன்ஸ் போலீசார், பூலாம்பாடியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள டத்தோ பிரகதீஸ்குமாரின் பண்ணை வீட்டையும், ஆத்தூரில் உள்ள பாரதியார் கல்வி நிறுவனத்தையும் சோதனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும்,'' என்கிறார்கள் ர.ர.க்கள்.
இது ஒருபுறம் இருக்க, இளங்கோவனை விசாரணைக்கு ஆஜராகுமாறு விரைவில் சம்மன் அனுப்ப தயாராகி வருகிறது விஜிலன்ஸ் போலீஸ். விசாரணையின்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.