எதிர்க்கட்சிகளால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில், வி.சி.க. வின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் அக்டோ பர் 2-ஆம் தேதி வெற்றி கரமாக நடத்திமுடிக் கப்பட்டது.
"மதுவிலக்கை தேசி யக் கொள்கையாக அறிவிக்கவேண்டும். மதுவிலக்கு பிரச்சாரத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணையவேண்டும்' என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
நடந்துமுடிந்த சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் தி.மு.க.வுடன் கூட்டணியில் பயணித்த வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு நடத்தப் போவதாக அறிவித்ததும், அதனையடுத்து வி.சி.க.வின் துணைப் பொதுச்செயலாளரான அர்ஜுனா ரெட்டி, ஆட்சியில் பங்குவேண்டு மென்று குரல் கொடுத்ததும், இரு கட்சிகளுக் கிடையிலான கூட்டணி உரசலாகப் பார்க்கப்பட்டு பலத்த விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், வி.சி.க.வின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய இரு வரின் பெயரையும் அறிவித்து நிலவரத்தின் சூட்டை தணித் தார். அதேபோல, தி.மு.க.வின் பவள விழா மாநாட்டில் வி.சி.க. தலைவர் திருமாவள வன் கலந்துகொண்டு பேசியதும் நிலவரத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தது.
இதையடுத்து வி.சி.க. திட்ட மிட்டபடி காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் பேசிய வி.சி.க. பொதுச் செயலாளர் ரவிக்குமார், "இந்தியாவில் மது அருந்துவோர் சதவிகிதம் 22, தமிழகத்தில் இது 32 சதவிகிதம். அதேபோல விதவைகள் சத விகிதமும் இந்திய சராசரியைவிட தமிழகத்தில் அதிகம். இதற்கு மதுப்பழக்கமும் காரணம். எனவே மதுப்பழக்கத்தை ஒழிக்கவேண்டிய பொறுப்பு மத்திய -மாநில அரசுகளுக்கு உள்ளது''” என்றார்.
தி.மு.க. சார்பில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ். பாரதி, “"ஒவ்வொரு பெண்ணும் 10 பேரை குடிக்காமல் இருக்கச் செய்யும்படி மனமாற்றம் செய்வதாக உறுதியேற்கவேண்டும். அப்படிச் செய்தால் அரசுகள் மதுக்கடையை மூடவேண்டியதில்லை. தானாகவே மதுக்கடை யை மூடும் நிலை உருவாகிவிடும்''’என்றார்.
தி.மு.க. செய்தித் தொடர்பாளர் இளங்கோ வன் பேசும்போது, " மதுவை ஒழிக்க, அதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கவேண்டும்''” என்றார்.
மாநாட்டு மேடையில் காங்கிரஸ் எம்.பி. சுதா ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் ஆனி ராஜா, முத்துலட்சுமி வீரப்பன், ம.தி.மு.க.வின் ரொகையா ஷேக் முகமது, அய்யா வைகுண்டர் இயக்கத்தின் பால பிரஜாபதி என பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டு மதுவிலக்கை வலியுறுத்திப் பேசினர்.
பின்பு மாநாட்டின் முக்கிய அம்சமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், மது விலக்கை ஒன்றிய அரசு தேசியக் கொள்கையாக வரையறுக்கவேண்டும், மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த, கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்கவேண் டும், மகளிர் சுய உதவிக் குழுக்களை மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புணர்வு பிரச் சாரத்தில் ஈடுபடுத்தவேண்டும், குடிநோயாளிகள் மீண்டுவர அரசு மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்களை தமிழகம் முழுவதும் அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் தனது உரையில், "இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் பலரும் நான் கூட்டணி மாறப்போவதாக அந்த அழைப்பை திசை திருப்பிவிட்டனர். காவிரி பிரச்சினையின்போது தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து குரல் கொடுபதில்லையா? அதுபோலத்தான் மதுவிலக்குப் பிரச்சினையும்
போதைப் பொருட்கள் கிராமம்வரை சென்றுவிட்டது. மதுக்கடைகளை மூடினால் 2026-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். முதல்வரை மாநாடு தொடர்பாக சந்தித்தபோது, மதுவிலக்குக் கொள்கையில் தானும் உடன்படுவதாகக் கூறினார். இப்போது இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை ஏற்றுக்கொண்டு, சட்டமன்றத்தில் மதுவிலக்கு தொடர்பாக தீர்மானம் நிறை வேற்றவேண்டும்.
இந்துக்களை பாதுகாப்பதாகக் கூறு கிறார்கள் மோடியும் அமித்ஷாவும். மது அருந்துபவர்களில் இந்துக்கள் இல்லையா? ஸ்ரீமன் நாராயணன் குழுவின் பரிந்துரை பிடிக்கவில்லையா? வேறொரு கமிட்டியை அமையுங்கள். தேசிய அளவில் மதுவை தடைசெய்து, மதுவிலக்குக் கொள்கைகளை அமல்படுத்துங்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி கிராமம்தோறும் மதுவிலக்கு மகளிர் குழுவை உருவாக்கப்போகிறது.
மதுவிலக்கை வலியுறுத்தி டிஜிட்டல் கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்க இருக்கிறோம். பெண்கள் இந்த யுத்தத்தைத் தொடங்கவேண்டும். மதுவால் மனித வளம் பாழாகிறது. ஆரோக்கியம் கெடுகிறது. போதைப் பொருட்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்''’என மதுவிலக் குக்கு எதிராக அழுத்த மான உரையொன்றை ஆற்றியமர்ந்தார்.
விடுதலை சிறுத்தை களின் மாநாடு, தமிழக மக்களின் மது குறித்த பார்வையில் மாற்றம் கொண்டுவருமா? பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்!