சு.வெங்கடேஷ், கோட்டயம்
அம்பேத்கருக்கு பட்டை போட்டு, காவி(ய) நாயகன் என்று போஸ்டர் அடித்து நினைவு நாள் கடைப் பிடித்திருக்கிறதே இந்து மக்கள் கட்சி?
ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் கிளை அமைப்புகளும் வலியுறுத்துவது ஆரிய சனாதனக் கொள்கையைத்தான். அந்தக் கொள்கையை எதிர்த்தே போராடியவர் அம்பேத்கர். தீண்டாமைக் கொடுமை நிறைந்த இந்து மதத்தில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவரான அம்பேத்கர், "இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன்' என்று சொன்னதுடன், சொன்னதைச் செய்யும் வகையில் புத்த மதத்தைத் தழுவினார். லட்சக்கணக்கானவர்கள் அவருடன் புத்த மதத்தில் சேர்ந்தனர். அந்த அம்பேத்கருக்குத்தான் காவி உடை உடுத்தி, பட்டை போட்டு போஸ்டர் அடித்து, காவி(ய)த் தலைவன் என நினைவுநாள் கடைப்பிடித்திருக்கிறது இந்து மக்கள் கட்சி. ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்பினர் பகவத் கீதைதான் உன்னதமானது என்று சொல்லி வந்தவர்கள். திருக்குறளையோ திருவள்ளுவரையோ கண்டுகொண்டதில்லை. தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டுமென்றால் தமிழும் திருக்குறளும் அவசியம் என்றதும், திருவள்ளுவருக்கு காவி கட்டினார்கள். தமிழுக்கு காசியில், சமஸ்கிருதத் தில் விழா எடுத்தார்கள். அதுபோல அம்பேத்கரை ஓட்டுக்குப் பயன்படுத்தும் நோக்க்ததுடன் திடீர்ப் பாசம் காட்டி, அவருக்கு புது வேசம் கட்டிப் பார்க்கிறார்கள். அம்பேத்கர் இவர்களிடம் சிக்கமாட்டார். அவருடைய கொள்கைகள் அழுத்தமானவை. அவை சனாதனத்திற்கு எதிரான தீப்பந்தங்கள்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
"வந்தே பாரத் ரயில்' செல்லும் பாதையில் இருபுறமும் வேலி அமைப்பது குறித்து?
சாமியார் ஒருவர் பூனை வளர்த்தாராம். அந்தப் பூனைக்கு தினமும் பால் தேவைப்பட்டதாம். அந்தப் பாலுக்காக ஒரு பசுவை வாங்கி வளர்த்தா ராம். அந்தப் பசுவை பராமரிக்க ஒரு ஆள் தேவைப்பட்டதாம். அதற்காக ஒரு பெண் மணியை வேலைக்கு வைத்தாராம். அந்தப் பெண்மணி தனியாக இருக்கிறாரே என்று சாமியார் துணையாக இருந்தாராம். அப்புறம், சந்நியாசி சம்சாரி ஆகிவிட்டா ராம். இப்படி ஒரு பழங்கதை உண்டு. அதுபோல, இந்தியாவின் அதிவேக ரயில் என்று வந்தேபாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட் டது. அப்புறம், ரயில் பாதையில் மாடுகள் வருகிறது என்று, வேகத்தைக் கட்டுப்படுத்தினார்கள். அந்த வேகத்திலும்கூட மாடு மோதி ரயில்தான் சேதமடைந்தது. மாடுகளை மேய்ப்பவர் கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தார்கள். ஆனாலும் விபத்துகள் குறையவில்லை. அதனால், ரயில் செல்லும் பாதையின் இருபுறமும் வேலி அமைப்பது பற்றி ஆலோசித்திருக்கிறார்கள். வேலிக்குள் மாடுகள் புகுந்து வந்தால் என்ன செய்வதென்று, தண்டவாளத்தின் இருபுறமும் சுவர் எழுப்பும் திட்டம் கூட உருவாக்கப்படலாம்.
மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என பல மூத்த அமைச்சர்கள் கூறிவந்த நிலையில் இப்பொழுது தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு எம்.பி., உதயநிதியை துணை முதல்வராக ஆக்க வேண்டும் எனக் கூறுகிறாரே?
மு.க.ஸ்டாலின் முதல்முறை எம்.எல்.ஏ. ஆனது 1989ல். இரண்டாவது முறை எம்.எல்.ஏ ஆனது 1996ல். இரண்டு முறையும் தி.மு.க.தான் ஆளுங் கட்சி. ஆனாலும், 2006ல் கலைஞர் தலைமையில் அமைந்த தி.மு.க ஆட்சியில்தான் அவர் முதன்முறை யாக அமைச்சர் ஆனார். உதயநிதி இப்போதுதான் எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறார். அவர் அமைச்சராகும் வாய்ப்பு உடனேயும் அமையலாம், தாமதமாகவும் அமையலாம். ஆனாலும், அவரது கவனத்தை ஈர்ப் பதற்காக சீனியர்களேகூட உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்றனர். அவர்களைவிட கூடுதலான கவனம் பெறவேண்டும் என அந்த எம்.பி. நினைத்திருக்கலாம். வருங்கால அமெரிக்க ஜனாதிபதி என்று ஒரு திரைப்படத்தில் ஒலித்த குரல்தான் நினைவுக்கு வருகிறது.
நித்திலா, தேவதானப்பட்டி
ஜெ. மறைந்த நன்னாள் என உறுதிமொழியை வாசித்திருக்கிறாரே எடப்பாடி பழனிசாமி?
ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கை சொன்னபடி டிசம்பர் 4-தான் ஜெ.வின் நினைவு நாள் என்று சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி னார் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. டிசம்பர் 5-ம் தேதியைத்தான் 6 ஆண்டுகளாக கடைப்பிடிக் கிறோம் என்று சொல்லி, ஜெ. இறந்தநாளில் லட்டு கொடுத்து கொண்டாடி அசத்தினார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். இவர்களெல்லாம் இப்படிச் செய்யும் போது, அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செய லாளர் என அறிவித்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ஒருபடி மேலேபோய் ஏதாவது செய்தாக வேண்டுமே! அதனால்தான், "அம்மா மறைந்த நன்னா ளில்...' என்று செத்தநாளை நல்லநாளாக நினைத்து உறுதிமொழி ஏற்றார். அவருடன் மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர்களும் அதையே திருப்பிச் சொன்னார்கள். உண்மையில், ஜெ. இறந்த பிறகு அவர்கள் எல்லாருக்கும் எல்லாநாளும் நல்லா கல்லா கட்டிய நல்ல நாள்தான். அதற்கு முன் ஜெ.வும், சசியுமே கல்லா கட்டிக்கொண்டிருந்தார்கள்.