மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

நாடு சுதந்திரம் அடையும்போது இந்திய மக்கள் தொகை 35 கோடி. இன்று இந்தியாவில் மக்கள்தொகை 150 கோடியாக மாறிவிட்டது என்ற காரணத்தினால் நான்கு பிரதமரா வைத்துக்கொள்ள முடியும் என்று கேட்கிறாரே அப்துல்லாஹ் எம்.பி.?

இல்லை, இது தவறான வாதம். நாடு சுதந்திர மடையும்போது இருந்ததைவிட கூடுதல் மாநிலங்கள் வந்துவிட்டன. மாநிலங்களில் எத்தனையோ புதிய மாவட்டங்கள் வந்துவிட்டன. அதுபோல தொகுதி மறுசீரமைப்பு நிகழவேண்டும்தான். ஆனால் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில்தான் குடும்பக் கட்டுப்பாட்டை தென்மாநிலங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தின. ஒரு விஷயத்தை வெற்றிகரமாகச் செய்த தற்கு அவற்றுக்கு பரிசளிக்கவேண்டுமே தவிர அபராதம் விதிக்கக்கூடாது. அதுபோல குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக அமல்படுத்தாததற்காக வடமாநிலங்களுக்கு அபராதம் விதிக்காவிட்டாலும்கூட பரிசளிக்கக்கூடாது. தொகுதி மறுசீரமைப்பை நியாயமாகச் செயல்படுத்தவேண்டும். அதுதான் நம் கோரிக்கையாக இருக்கவேண்டும்.

ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு

நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததாகச் செய்தி, அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா அரசு?

அதிகபட்சம் இடமாற்றம் செய்யப்படுவார்கள். ஒரு ஊதிய உயர்வை நிறுத்துவது, பணி உயர்வைத் தாமதப்படுத்துவது போன்று நடவடிக்கைகளைச் செயல்படுத்தினால் இதுபோன்ற கவனக்குறைவுகள் தானாகக் காணாமல் போய்விடும்.

அன்னூரார், பொன்விழிஅன்னூர்

புதிதாக கட்சி தொடங்குவது சுலபமா?

தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் கட்சி தொடங்குவதோ, தேர்தலில் நிற்பதோ சுலபம்தான். ஆனால் அதை வெற்றிகரமாக நடத்துவதுதான் சிரமமான விஷயம். அதற்கு மக்களின் ஆதரவு வேண்டும். தவிரவும், கோடிக்கணக்கில் நிதி வேண்டும்.

என். இளங்கோவன், மயிலாடுதுறை.

"நீங்கள் ஒரு முட்டாள் பிரசிடென்ட்' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைப் பார்த்து ட்ரம்ப் நேரடியாகவே கேட்டுவிட்டாரே?

ட்ரம்பின் புத்திசாலித்தனம் உலகறிந்த விஷ யம். அதிகாரம் உச்சத்தில் இருக் கும் ஒருவன், அதிகாரத்தில் குறைந்த நாட்டின் அதிபரைப் பார்த்து முட் டாள் என கேட்கலாம்தான். எதிர்காலம், ட்ரம்பை எப்படி மதிப்பிடுகிறது என பார்ப்போம்!

மேற்கு வங்கத் தில் இரண்டு வாக்காளர் களுக்கு ஒரே அட்டை உள்ளது என மம்தா பானர்ஜியும், மேற்குவங்க அரசு போலி வாக்காளர்களை சேர்த்துவருகிறது என ரஞ்சன் சவுத்ரியும் கூறியிருக்கிறார்களே?

ss

காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேல் வைக்கும் விமர்சனம் எப்போதுமே காட்டமானதுதான். ஆனால் காரியம் பெரிதா... வீரியம் பெரிதா என்றொரு பழமொழி உண்டு. கிட்டத்தட்ட விரல் விட்டு எண்ணி நான்கைந்து மாநிலங்களைத் தவிர மற்றவற்றை பா.ஜ.க. கபளீகரம் பண்ணி விட்டது. மத்தியிலும் காங்கிரஸ் அசுர பலத்துடன் வருவதாகத் தெரியவில்லை. டெல்லியைப்போல் கோட்டைவிடாமல், திரிணாமுல்லுடன் அனுசரித்து கூட்டணியமைத்து இருவருமே பலன்பெற முயற்சி செய்யலாம். மம்தாவை போலி வாக்காளர்களைச் சேர்க்கவிட்டு பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. மாறாக, மகாராஷ்டிரா, டெல்லியில் நிகழ்ந்ததுபோல், தேர்தலுக்குமுன் திரிணாமுல் காங்கிரஸின் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியிலி லிருந்து மறைவதற்கான வாய்ப்பு அதிகம்.

வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி

Advertisment

சட்டமன்றத்திற்குள் உறுப்பினர்கள் பான் மசாலாவைத் துப்பக்கூடாது என்ற உ.பி சபாநாயகரின் உத்தரவைப் பார்க்க உவ்வே என்று இருக்கிறதே?

சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன சினிமா ரசிகர்களா, சொல்லிப் புரியவைப்பதற்கு? சட்டமன்றத்துக்குள் பான் எச்சிலைத் துப்புபவர்களுக்கு அந்த மாதச் சம்பளம் கட் என சொல்லிப் பார்க்கட்டும். ஒரே மாதத்தில் சட்டமன்ற வளாகம் தூய்மையாகிவிடும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

Advertisment

பா.ஜ.க.வும், தி.மு.க.வும் எல்.கே.ஜி. பசங்களைப் போன்று சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று விஜய் பேசுகிறாரே?

அவர்கள் பரவாயில்லை எல்.கே.ஜி.யிலாவது சேர்ந்துவிட்டார்கள். த.வெ.க. இன்னும் பிரி.கே.ஜி. அட்மிஷனே வாங்கவில்லையே என்ன சொல்வது.

மயிலை இளங்கோ, மயிலாடுதுறை.

பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மீது வழக்குப் பதிவுசெய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளதே?

பின்னாலேயே மும்பை உயர்நீதிமன்றம் வழக்குப் பதிவுசெய்ய நான்கு வார காலம் தடைவிதித் துள்ளதே. இதற்குமேல் உச்சநீதிமன்றமெல்லாம் இருக்கிறது. ஹின்டன்பர்க் புகாரையே தூக்கி யெறிந்தவருக்கு, இந்த புகாரெல்லாம் ஜுஜுபி.