mvsm

திருச்சி லால்குடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகக் கட்டுமானப் பணிகளை கடந்த வெள்ளியன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் அமைச்சர் நேரு உள்ளிட்டவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அமைச்சரின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அந்த பதிவில், 'லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இயற்கை எய்திவிட்டதால் லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது’’ என்று லால்குடி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியனே கமென்ட் போட்டதால் தற்போது பெரும் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Advertisment

சௌந்தரபாண்டியன், கடந்த 2006, 2011, 2016, 2021 எனத் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார். ஒரு காலத்தில் அமைச்சர் நேருவின் மிகநெருங்கிய வட்டத்திலிருந்த சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., தற்போது நேருவோடு முரண்பட்டு நிற்பதுதான் திருச்சி தி.மு.க.வினர் மத்தியில் விவாதப்பொருளாகியுள்ளது. நேருவோடான மோதலால், தன்னை அதிகாரிகள்கூட மதிப்பதில்லை, தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்ற வருத்தமும், கோபமும் சௌந்தரபாண்டியனுக்கு இருந்துவரும் நிலையில், பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இதுகுறித்து தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், தலைமையிலிருந்து இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில், தனது தொகுதியில் அமைச்சர் நடத்திய ஆய்வில் தன்னை அழைக்கவில்லை எனக்கூறி, அமைச்சரின் முகநூல் பக்கத்தில் அந்த கமென்ட்டை பதிவு செய்திருக்கிறார். அதை வெளியிட்ட சிலமணி நேரங்களிலேயே அந்த கமென்ட் நீக்கப்பட்டது.

Advertisment

இதுகுறித்து எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் கூறுகையில், ""அந்த பதிவை நான்தான் போட்டேன். என்னுடைய தொகுதியில் ஓர் ஆய்வுப்பணி நடக்கிறது. அமைச்சரை விட்டுத் தள்ளுங்கள், அதிகாரிகள் எனக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் என்னை அழைக்கவில்லை. அவரிடம் கேட்டால், அமைச்சர்தான் உங்களை அழைக்கக்கூடாது என்று கூறியதாக தெரிவித்தார். என்னை அதிகாரிகள் கொஞ்சங்கூட மதிப்பதில்லை. நான் தலைமைக்கு கடிதம் எழுதியபோது எங்களை சமாதானம் செய்துவைத்தனர். பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே என்னைக் கழட்டிவிட்டுவிட்டார்கள்'' என்று கூறினார்.

இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவிடம் கேட்டபோது, ""அப்படி ஒரு பதிவு போடப்பட்டுள்ளதா?'' என்று கேள்வி எழுப்பியதோடு, ""யாரோ எதையோ போட்டுட்டுப் போறாங்க'' என்றார். ""வெள்ளியன்று நடந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.வை அழைக்க வேண்டாமென்று மாவட்ட ஆட்சியரிடம் கூறினீர்களா?'' எனக் கேட்டதற்கு, ""அதை மாவட்ட ஆட்சியரிடம்தான் கேட்க வேண்டும்'' என்றார். மாவட்ட ஆட்சியரோ, நமது அழைப்பை ஏற்கவேயில்லை.

ஒரு முக்கியமான மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கும், அமைச்சருக்குமிடையே மோதல் ஏற்பட்டால் இதில் பாதிக்கப்படுவது அந்த தொகுதி மக்கள்தான். இவ்விவகாரத்தை முதல்வர் தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.