"கடவுள்தான் சிவசங்கர் பாபாவை சிக்கவைத்திருக்கிறார்'' என உணர்ச்சிவசத்துடன் பேசுகிறார், அவரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யான ஷகில் அக்தர் டீமில் இருக்கும் இந்திக் காரரான போலீஸ் ஒருவர்.

பாபாவை, தமிழ்நாட்டை விட்டே ஓடவைத்தது நக்கீரன்தான். பாபா குறித்து நக்கீரன் எழுத ஆரம்பித்தபோதே பாபாவும் அவரது ஆட்களும் உஷாராகிவிட்டனர். நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்ட நித்யானந்தா, நேபாளம் வழியாக தப்பிச் சென்றது போல, தானும் தப்பிக்க வழியிருக்கிறதா என தேட ஆரம்பித்தார் சிவசங்கர் பாபா. நித்திக்கு நெருக்கமாக இருந்த தமிழக பா.ஜ.க. பிரமுகர், அவருக்கு உதவ முன்வந்தார்.

baba

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மடாலயங்களின் தொடர்புகள் மூலம் நேபாளத்திற்கு சென்றுவிடலாம் என பாபாவிற்கு சொல்லப்பட்டது. ஆனாலும் நித்திக்கு உதவியது போல பாபாவுக்கு நேரடியாக யாரும் உதவிட தயாராக இல்லை. நித்திக்கு அவர் வட மாநிலங்களில் வைத்திருந்த ஆசிரமங்கள் கைகொடுத்தன. சிவசங்கர் பாபாவுக்கு அப்படி எதுவும் இல்லையென்றாலும், கோடிக்கணக்கான பணம் கையிலிருக்கும்போது என்ன கவலை என செல்போனை அணைத்துவிட்டு உத்தரகாண்ட் நோக்கி புறப்பட்டார் பாபா.

Advertisment

அவர் உத்தரகாண்டிற்கு சென்றதும் அவருக்கு எதிராக நக்கீரன் சமூக வலைத்தளங்களில் பாய்ந்து அடிக்க, அவருக்கு உதவுகிறேன் என வாக்குறுதி தந்த தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த ராகவ பிரமுகரும் கழண்டுகொண்டார். என்னதான் அவர் நம்ம ஜாதின்னாலும் பொம்பள விவகாரமாச்சே. இதுல என் பெயர் சிக்கினா அசிங்கமாக்கும் என அவர் கழண்டுகொள்ள அவர் மூலம் கிடைத்துவந்த நித்தியின் நேபாள ரூட் தொடர்புகளும் அறுந்துபோயின. ஆனால் சிவசங்கர் நேபாளத்துக்கு தப்பிவிட்டார் என தமிழக பா.ஜ.க.வினர் செய்தி பரப்பிவிட்டார்கள். இந்தச் செய்தி அவரைக் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்தது என்றாலும் உடல்நிலை அவருக்கு கெட்ட காலமாக வந்தது.

baba

9-ஆம் தேதிவாக்கில் பாபாவுக்கு நெஞ்சுவலி வந்தது. அந்த தேதியில்தான் பாபாவுக்கு எதிராக டி.ஜி.பி.யிடம் நக்கீரன் புகார் கொடுத்தது. உத்தரகாண்ட்டின் தலைநகரான டோராடூனில் உள்ள கிருத்துவ மருத்துவமனையான மேக்ஸ் மருத்துவமனையில் இந்துக் கடவுளின் அவதாரமாகத் தன்னைத்தானே சொல்லிக் கொண்ட சிவசங்கர் பாபா சேர்ந்தார். அவரது இதயத்தை பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று அடைப்புகள் இருப்பதாக கண்டுபிடித்தார்கள். பக்தர்களின் நோய்களை தன் உடலில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் மூலம் குணப்படுத்தியதாக சொல்லி வந்த பாபா, தனது இருதய அடைப்புக்கு ஆஸ்பத்திரி சிகிச்சையை நாடினார்.

Advertisment

9-ஆம் தேதி ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாபாவுக்கு அவரது இதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க மூன்று அடைப்பு நீக்கிகள் (நற்ங்ய்ற்) பொருத்தப்பட்டன. 10-ஆம் தேதி தமிழக போலீசின் சிறப்புப் படைகள், நக்கீரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிவிட்டன என்கிற தகவல் பாபாவை எட்டியதும், மறுபடியும் நேபாளத்திற்கான வழிகளைத் தேட ஆரம்பித்தார். 12-ஆம் தேதி தமிழக காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து தேட ஆரம்பித்த தகவலோடு பாபா டேராடூனில் சிகிச்சை பெறுகிறார் என்கிற தகவலும் ஒருசேர பரவியது. உடனே அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் பாபா. வழக்கம்போல நேபாளத்திற்கு பறந்துவிட்டார் என்கிற தகவலும் பரவி யது. 13-ஆம் தேதி வழக்கை சி.பி. சி.ஐ.டி.யின் டி.ஐ.ஜி.யான ஷகில் அக்தரிடம் தமிழக அரசு ஒப்படைத்தது.

ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் வேலை செய்து பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற வடஇந்தியவாசியான ஷகிலும் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யான விஜயகுமாரும் தங்களது வடஇந்திய தொடர்புகளை கூர்மையாக் கியதோடு, 13-ஆம் தேதி மதியமே பாபா இந்தியாவை விட்டு வெளியே செல்லக்கூடாது என அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக்கி, அனைத்து ஏர்போர்ட்டுகளுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அறிவிப்பினை வெளியிடச் செய்தார்கள்.

14-ஆம் தேதி காலை பாபா சிகிச்சை பெற்ற மருத்துவமனையை சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. விஜயகுமார் கட்டளைப்படி எஸ்.பி.குணவர்மன் தலைமையிலான டீம் சுற்றிவளைத்து பாபாவுக்கு ஆபரேஷன் செய்த டாக்டரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.

கிறிஸ்தவரான டாக்டர் மற்றும் மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பாபா எப்படி அங்கு வந்தார், அவருக்கு அளிக் கப்பட்ட சிகிச்சை விவரம், அவருடன் யார் வந்தார்கள்... அவர்களின் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றைப் பகிர்ந்தார்கள். அதையெல்லாம் வைத்து தேடியபோது ஏமாற்றமே மிஞ்சியது. ஷகில் அக்தரும் விஜயகுமாரும் தங்களது பேட்ச்மெட்டுகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆபீசர்கள் மூலம் பாபா உத்தரகாண்ட் டில் இல்லை என்பதை உறுதி செய்தபோது 14-ஆம் தேதி மதியத்துக்கு மேல் ஆகிவிட்டது.

எங்கே பாபா...? எல்லோரும் சொல்வதுபோல பாபா தனது உடைந்த இதயத்துடன் நேபாளம் போய்விட்டாரா? என பாபாவுக்கு மருத்துவ சிகிச்சையின்போது உதவி யாக வந்த பக்தர் ஒருவரை விசாரணை வளையத் துக்குள் கொண்டு வந்து கதறவிட்டார்கள். எங்கே பாபா? அவருக்கு உடல்நிலை சரியில்லை. எங்க ளிடம் சொல்லாமல் பாபாவை எங்கே அழைத்துச் சென்றீர்கள்? என்று போலீசின் அடியில் பக்தர் தந்த அந்த தகவல், செல்போனை ஆஃப் செய்திருந்த நிலையிலும் பாபாவின் காதுகளைத் தொட்டது.

babaa

14-ஆம் தேதி இரவு, பாபா டெல்லியில் இருக்கிறார் என்று தெரிந்ததும், டெல்லி நகரில் எங்கே இருக்கிறார் என மறுபடியும் பக்தரை போலீஸார் கதறவிட... சித்தரஞ்சன் பார்க் என்ற இடத்தில் ஒரு ஹோட்டலில் பத்திரமாக உள்ளார் என பதில் வந்தது. 15-ஆம் தேதி டெல்லிக்கு சென்ற தமிழக சி.பி.சி.ஐ.டி. டீம் அந்த டீமிலிருந்த இந்தி பேசக்கூடிய தமிழக காவலர்களுடன் டெல்லி போலீஸையும் இணைத்துக்கொண்டு சித்தரஞ்சன் பார்க் பகுதிக்குச் சென்றதும் அதிர்ந்துபோனார்கள். அங்கு 50 லாட்ஜ்கள் இருந்தன. ஒவ்வொரு லாட்ஜும் அடுக்குமாடி கட்டிடங்கள். எல்லா லாட்ஜும் ஏறி இறங்கிய போலீஸார், இங்கே தமிழ் ஆள் யாராவது தங்கியிருக்கிறார்களா? என ஒற்றைக் கேள்வியைக் கேட்க... வித்தியாசமான பல தமிழ் முகங்கள் வெளிப்பட்டன. ஒரு லாட்ஜ், அதன் பெயர் மயூரா. முருகனின் வாகனமான மயிலின் பெயர் கொண்ட அந்த லாட்ஜின் மூன்றாவது மாடியில் பாபா அமர்ந்திருந்தார். தலையை முழுவதுமாக மொட்டியடித்துக்கொண்டு காவி வேட்டி - டி-ஷர்ட் என இருந்த பாபாவைக் கண்டதும் "கண்டேன் சீதையை' என சொன்ன அனுமாரைப் போல, போலீஸ் அங்கு போனபோது 16-ஆம் தேதி காலை 9:00 மணி.

இதய ஆபரேஷன் செய்யப் பட்ட பாபாவை விமானத்தில் தமிழகம் கொண்டுவர மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற டெல்லி யில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு தமிழக போலீஸார் கொண்டு சென்றார்கள். மருத்துவ மனையில் பாபாவுக்கு ஃபிட்னெஸ் சர்டிபிகேட் கொடுக்க... அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றார்கள். நீதி மன்றம் தமிழகத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவு கொடுக்கும்போது 16-ஆம் தேதி மாலை 6:00 மணி ஆகிவிட்டது.

நீதிபதியிடமும் போலீஸாரிடமும் மாணவிகள் கொடுத்த புகார் பொய்யானது என்பதை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்ன சிவசங்கர் பாபாவை கொத்தாக அள்ளி சென்னைக்கு வந்தபோது நள்ளிரவாகிவிட்டது.

"உடல்நிலை காரணமாக அவரை எங்களால் எதுவும் விசாரிக்க முடியவில்லை. சி.பி.சி.ஐ.டி.யிடம் வழக்கு வந்த 24 மணி நேரத்திற்குள். நித்தி வழியில் நேபாளம் ஓட இருந்த பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கைது நடவடிக்கையை முறைப்படி மேற்கொண்டு உண்மைகளை கொண்டு வருவோம் என்கிறார், இந்த ஆபரேஷனை ஒருங்கிணைத்த சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. விஜயகுமார்.

அட்டை மற்றும் படங்கள்: ஸ்டாலின், அசோக், குமரேஷ்

_________________

ஏர்போர்ட் டூ கோர்ட்!

டெல்லியில் மஞ்சள் டிரஸ்ஸில் மொட்டைத் தலையுடன் கைதான பாபாவை, ஜூன் 16-ந் தேதி இரவு 11:55 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த போது, மீடியாக்கள் அடையாளம் கண்டுவிடாதபடி ஜைனத்துறவி போல வெள்ளை உடை அணிவித்திருந்தது தமிழக போலீஸ். உடன் அழைத்து வரப்பட்ட பாபாவின் ஆட்கள் ஹஜ் பயணம் செல்வது போன்ற உடையில் இருந்தனர். நள்ளிரவு கடந்து 12.20 மணிக்கு சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிவசங்கர் பாபா விடம் விடிய விடிய விசாரணை நடத்தினர் போலீசார். வியாழன் காலை சிவசங்கர் பாபாவை கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடல் பரிசோதனை செய்தபின் மாலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தினர்.